129.
|
ஒருமைந்தன்
தன்குலத்துக் குள்ளானென்
பதுமுணரான் |
|
|
‘தருமந்தன்
வழிச்செல்கை கட' னென்று
தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற் றெளிதோ?
தான் |
44 |
(இ-ள்.)
மனுவேந்தன் - (அவ்வாறு அவ்வீதி
அணைந்தானாகிய) மனுவேந்தன்; ஒரு மைந்தன்...உணரான் - தனது
குலத்தை வளர்த்து வழிவழிச் செலுத்தற்குரியவனாய்த் தனக்கு
மகனாயுள்ளான் இவ்வொருவனே என்ற செய்தியையும் மனத்திலே
உணராதவனாகி; தருமம் ... கடனென்று - தருமந் தன் வழியிலே
செல்வதே கடமை என்ற ஒரே எண்ணத்தை யுடையவனாய்; தன்
மைந்தன்...உற ஊர்ந்தான் - தன் மகனை அவ்வீதியிலே கிடத்தி
அவனுடைய மார்பிலே தனது தேர்ச்சக்கரம் ஏறிச் செல்லும்படி தனது
தேரை ஊர்ந்தனன்; அருமந்த...எளிதோதான் - உலகத்துக்கு
அருமருந்து போன்ற அரசாட்சி செய்வதுதான் செய்தற்கு அரியதோ
எளியதோ என்பது சிந்தித்தற்குரியது.
(வி-ரை.)
ஒருமைந்தன் தன் குலத்துக்கு உள்ளான்
என்பதும் - இவன் தனக்கு ஒரே மகனாதலின் இவனைத்
தேர்க்காலில் ஊர்ந்துவிடில் தனது குலம் வழிவழிச் செல்ல வேறு
மகனில்லாது தன்னோடு நின்றுவிடும் என்ற செய்தியினையும்.
உணரான்
- இச்செய்தியை அரசன் சிந்திக்கவேயில்லை
என்பார் உணரான் என்றார்.
தருமம்தன் வழிச் செல்கை - அறநெறியிலே
செல்லுதலே.
தன் - சாரியை. இங்குத் தருமம் வழி என்றது
“அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம்“ என மேலே கூறிய இயல்பினை. தன் வழி
என்பதைத் தனது வழியிலே என்று கொண்டு, இது செய்யானாயின்
தருமம் தன்னோடு வழியற்று நின்றுவிடும்; அவ்வாறு நின்றுவிடாது
தனக்குப் பின்னும் நிலவுவதாய்த் தன்வழியாக நடந்து செல்லும்படி
செலுத்துவதே என்றுரைத்தலுமாம். இப்பொருளில் தன் என்றது
அரசனை. செல்கை - செல்லுதலே ஏகாரம் தொக்கு
நின்று
தேற்றப்பொருளையும் பிரிநிலைப் பொருளையும் தந்தது.
கடன் என்று - (உணரானாகி) இக்குறித்த
கடமையாகிய
ஒன்றே செய்யத்தக்கது என்று துணிந்து. “என்கடன் பணிசெய்து
கிடப்பதே“ என்றவாறு இறைவன் ஆணையிட்ட அறத்தின்வழி
நிற்றல் தன்கடன் என்று துணிந்தான்.
மருமம்
- மார்பு. தனது கொற்ற ஆழியை அவன் தோளிலே
ஏற்றுதலுக்கு மாறாகத் தேராழியை மருமத்திலே ஊர்ந்தனன் என்று
குறிப்பார் இங்ஙனம் கூறினார் போலும்.
ஊர்ந்தான் மனு வேந்தன் - செய்கையின்
முடிவை முன்னர்
அறிவித்தற்காகப் பயனிலையை முன்னர் வைத்தார். அரசன்
துணிந்ததும், அணைந்ததும், ஊர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாய்
அடுத்து விரைவில் தொடர்ந்து முடிவு பெற்றன என்பார், 127-வது
பாட்டில் “துணிந்தான்“ எனவும், 128-வது பாட்டில் “மறுகு
அணைந்தான்“ எனவும், இப்பாட்டில் “ஊர்ந்தான்“ எனவும்
தொடர்ந்து கூறினார். அன்றியும், வாக்கியத்தின் இலக்கணப்படி
இங்கு எழுவாயாகிய மனுவேந்தனை வாக்கியத் தொடக்கத்தில்
வைத்தால், அதற்குரிய பயனிலையாகிய வினைமுற்றுக்கும் அதற்கும்
இடையுறுவன பலவாம்; செய்வினையும் அரசனும் பிரிவுபெறாமல்
ஒன்றாகவே நின்றார்கள் என்பார், ஊர்ந்தான் - மனுவேந்தன்
-
என வினையை முதலிற் கூறி அடுத்துச் செய்வோனைக் கூறினார்.
அருமந்த அரசாட்சி
அரிதோ? மற்று எளிதோ? தான் -
இஃது இச்செயலிலிருந்து ஆசிரியர் கற்பிக்கும் கற்பனை. பிறர்
எண்ணுவதுபோல எளியதன்று - மிகவும் அரியதேயாம் - என்பது
கருத்து. மற்று - வினைமாற்றுப் பொருளில்
வந்தது. வினா
ஓகாரங்கள், எளிதோ என்பதில் எதிர்மறையும், அரிதோ
- என்பதில்
உடன்பாடும் குறித்தன.
அருமந்த - அருமருந்தன்ன என்பதன் மரூஉ
வழக்கு என்பர்
இலக்கண நூலோர். அரிய மருந்துபோன்ற. அருமருந்து நோய்ப்பயம்
தீர்ந்து மேலும் வாராமற் காப்பதுபோல, அரசாட்சியும் ஐந்து
பயத்தையும் தீர்த்து அறத்தைப் பிறழாமற் காப்பதனால் அருமந்தன்ன
என்றார். இறைவனை “அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை“,
“அருமந்த நன்மையெலா மடியார்க் கீவர்“ என்று துதிக்கும்
தேவாரங்களும் காண்க.
அரிச்சந்திரன் தன் மனைவியை மயானத்திலே முறைசெய்த
சரிதமும், பொற்கைப் பாண்டியன் தனது கையையே வெட்டித்
தன்னையே முறைசெய்த சரிதமும் இங்கு நினைவுகூரத் தக்கன. 44
|