13. நிலவு மெண்ணில் தலங்களும் நீடொளி
 
  இலகு தண்டளி ராக வெழுந்ததோர்
உலக மென்னு மொளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
3

     (இ-ள்.) நிலவும்.........தளிர் ஆக - நிலைத்து நின்றுள்ள
அளவில்லாதனவாகிய தலங்களைத் தனது ஒளி வீசி விளங்கும்
குளிர்ந்த தளிர்களாகக் கொண்டு; எழுந்தது...வல்லிமேல் - முளைத்து
எழுந்ததாகிய உலகம் என்கிற ஒப்பற்ற ஒளி வீசும் அழகிய
கொடியின் உச்சியிலே; மலரும்........மால்வரை - பூக்கின்ற வெள்ளைப்
பூப்போன்றுள்ளது அப்பெரிய திருமலை.

     (வி-ரை.) நிலைபெற்ற பல தலங்களையும் தளிர்களாகக்
கொண்டு தழைத்துப் படர்வது உலகமாகிய கொடி. அக்கொடியின்
உச்சியிற் பூக்கும் வெண்மலர் போன்றது திருக்கயிலைமலை என்க.

     கொடிப் பூவாகிய ஒரு வெண்பூவை அடைய விரும்பியவன் அதனைப் பூக்கின்ற கொடியைச் சார்ந்து அதைத் தழைத்துப்
படரச்செய்து காத்து அதன்பின் முடிவில் எவ்வாறு பூவைப்
பெறுவானோ, அதுபோல, உயிர்கள் தாம் சேர வேண்டிய இடமாகிய
திருக்கயிலையை யடையவேண்டினால், ஞாலத்தை நயந்து, அதில்
தலங்களிற் படர்ந்து, தரிசித்து, முடிவில் திருமலையை அடையலாம்
என்பது கருத்து.

     தளிர் - தலங்கள். ஒவ்வொரு காரணம் பற்றிச் சிவன்
வெளிப்பட்டு அருள்வது.

     வெண்மலர் - கயிலை. அத்தளிர்களை முன்னாகக் கொண்டு நிரந்தர வாசத்தலமாய் இறைவன் இருப்பது. மலையின் நிறம்பற்றி
வெண்மலர் என்றார். “பிறைதவழ் கயிலைக் குன்றம் பிரம
ரந்திரமாம்” என்பது திருவிளையாடல்; “வடபாற்கயிலையுந்
தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே”(அப்பர் தேவாரம்); “புவனியிற்
போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப்
பூமி, சிவனுய்யக் கொள்கின்றவாறு”(திருவாசகம்); முதலிய
திருவாக்குக்கள் காண்க. உலகிற் செய்யும் எல்லாச் சிவ தருமங்களும்
எல்லாத் தல தரிசனங்களும் இத் திருமலையினைப் பெறும்
பொருட்டேயாம் என்பது துணிபு. அப்பர் சுவாமிகள் பல
தலங்களையும் தரிசித்துப் படர்ந்து முடிவிலே திருக்கயிலை
யாத்திரை செய்து வழிகாட்டியதும் இக்கருத்துப் பற்றியே
என்க.     3