130. தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு
                                 தரியாது
 
  மண்ணவர்கண் மழைபொழிந்தார்; வானவர்பூ
                          மழைபொழிந்தார்;
அண்ணலவன் கண்ணெதிரே யணிவீதி
                          மழவிடைமேல்
விண்ணவர்க டொழநின்றான் வீதிவிடங்கப்
                          பெருமான்.

45

     (இ-ள்.) தண் அளி...பொழிந்தார் - மிகுந்த கருணை
பொருந்திய வெண்கொற்றக் குடையினையுடைய மனு அரசனது
செயற்கரிய செயலைக் கண்டு ஆற்றமாட்டதவர்களாய்
மண்ணுலகத்தவர்களாகிய மக்கள் கண்ணீரை மழையாகப்
பொழிந்தார்கள்; விண்ணுலகத்தவர்களாகிய தேவர்கள் புதிய
கற்பகப்பூமழை சொரிந்தார்கள்; அண்ணல்...வீதிவிடங்கப் பெருமான்
- மிகப் பெருமையுடையானாகிய அவ்வரசன் கண்முன்னே காட்சி
கொடுத்துத் தேவர்கள் தொழும்படியாக எழுந்தருளி நின்றார்
வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசர்.

     (வி-ரை.) தண்ணளி - தடைபடாது எல்லா உயிர்களிடத்தும்
செல்லும் குளிர்ந்து கருணை. “எவ்வுயிர்க்கும் செந்தண்மை
பூண்டொழுகலான்“ என்றார் நாயனார். இங்கு அரசன் கருணை
காரணமாக அது நிகழ்ந்ததால் “தண் அளிவேந்தன்“ என்றார்.
என்னை? இச்செயல் அரச குமாரனிடத்தும் கருணையால்
நிகழ்ந்ததோ? எனின், அதுவும் அவன்மேல் வைத்த, அவனுயிர்க்கு
உறுதிதரும் அளியினாலேதான் என்பது மேற்பாட்டின் உரையில்
காட்டப்பெற்றது. இஃது அரச தண்டனையினோடு அடியார் விதித்த
தண்டனையுமாம். இவ்வரசர் பேரடியார் என்பது அவர்
சிவாலயங்களுக்கு ஆகமவிதிவழி நிபந்தமாராய்ந்து, அவற்றின்
வழியே தானும் பூசித்து வந்தமையாலும், தியாகேசர் எழுந்தருளிய
திருவாரூரிலே பிறந்த உயிரைக் கொன்றது பெரும்பாவம் என்று
உணர்ந்தமையாலும் துணிக. இதனாலன்றோ இவர் சரிதம் அடியார்
சரிதங் கூறும் இப்புராணத்தின் தலைப்பிலே கூறப்பெற்றது. இவர்,
இறைவனை நீதிவடிவுடையவராகக்கொண்டு அவனது நீதியினையே
வணங்கி உறுதியை யடைந்தவர். இறைவனுக்குரிய திருவடிவங்களிலே
மிகச் சிறந்தது நீதியின் வடிவமே என்பது,

“இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னதுரு வாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்விடம் ...“
-திருஞானசம்பந்தர் தேவாரம் - சாதாரி - திருவைகா- 4.

என்பதனாற் காண்க. அடியார்கள் விதிக்கும் தண்டனையும் பெரும்
பிராயச்சித்தமாகி உயிரைச் சுத்தமாக்குமென்பது சண்டேசுர நாயனார்
விதித்த தண்டனையினால், அவர் பிதா எச்சதத்தன், கழுவாயில்லாத
சிவாபராதமாகிய பெரும் பாதகத்தினின்றும் நீங்கிக் சிவலோக
மடைந்ததனாற் காண்க.

“ஞால மறியப் பிழைபுரிந்து நம்ப ரருளா னான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந்                                    திருக்கையிற்
கோல மழுவா லேறுண்டு குற்ற நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்                                 முதுமறையோன்“
                            - சண்டீசர் புரா - 58

     இயற்கை நாயனார் விதித்த தண்டனையினால் அவருடன்
பொருத சுற்றத்தார்களும் நற்கதி யடைந்தார்கள் என்றும்
காண்கிறோம். “ஏனைய சுற்றத்தாரும் வானிடை யின்பம் பெற்றார்“ -
(இயற்பகை - புரா - 35). இப்பெருமை கருதியே இதற்கு முன்னும்
இங்கும் வேந்தன் என்றவா, அரசனைப் பின்னர் “அண்ணல்“ என்று
கூறுதல் காண்க.

     வெண்குடை - இது அரச அடையாளங்களில் ஒன்று
என்பதும், இதன் இயல்பும் முன்னரே குறிக்கப்பட்டன. இதன்கீழ்
உலகம் துன்பத்தினின்றும் ஒதுங்கிக் குளிர்ந்து தங்கும் - என்பது
வழக்கு. “அநபாயன் பொற்குடைநிழற் குளிர்வது“ என்று முன்னர்க்
கூறியது காண்க.
வெண்மை - சந்திரனது நிறம் வெண்மை; அவன்
குளிர்ச்சி செய்பவன்; ஆதலின் குடையின் நிறம் வெண்மையாகக்
கூறுதல் வழக்கு. “மதிக்குடை நிழற்ற“ என்பது முதலிய
திருவாக்குக்களையுங் காண்க. அன்றியும் குடை செவ்வனே நிழல்
செய்வதால் வரும் புகழின் அடையாளமுமாம். புகழின் நிறம்
வெண்மை என்ப.

     அண்ணல் - பெருமை உடையவன். இங்கு அவன் செய்த
செயற்கருஞ் செய்கையின் பெருமை குறித்தது.

     மழவிடை - மழ - என்றைக்கும் இளமையாய் இருப்பது.
விடை - அறக்கடவுள்; “தருமந் தன்வழிச் செல்கை கடனென்று“
எனவும், “தனிப்பெருந் தருமந்தான் ஓர் தயாவின்றி“ எனவும்,
“அறநெறியின் செவ்விய உண்மைத் திறம்“ எனவும் இப்பகுதியில்
விதந்து கூறிய அறத்தின் அதிதெய்வம் அறக்கடவுளென்பது.
அறக்கடவுள் என்றும் நிலைதிரியாது. இருத்தலினால் மழவிடை
எனப்பெறும். கற்ப முடிவினும் தான் முடிவுறாது இறைவனைத் தாங்கி
நிற்பது அறக்கடவுளாகிய விடை என்பர்.

     விண்ணவர்கள் தொழ
- முன்னர்த் தங்கள் தேவ உலகத்தில்
வைத்துத் தரிசித்த மூர்த்தியைப் பலநாட் பிரிந்த பின்னர், இன்று,
வீதியில் வெளிப்படக் கண்டாராதலின் விண்ணவர் மகிழ்ந்து
முன்னர்த் தொழுதனர்.

     வீதிவிடங்கப் பெருமான்
- தியாகேசர். விடங்கர் -
உளிபடாதவர். டங்கம் - உளி. உளியாற் செதுக்கப்படாமல்
தானாய் உண்டானவர்
- சுயம்பு மூர்த்தி என்றபடி. விடங்கராயும்,
உள்ளே திருமூலத்தானத்திலே எழுந்தருளியிருக்கும் புற்றிடங்
கொண்டாராயும் உள்ள பெருமானே வீதியிலே எழுந்தருளுவர்
ஆதலின் வீதிவிடங்கர் எனப்பெறுவர்.

     தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான்
- தொழ
நிற்றலாகிய வினை (செயல்)யிலே என்றும் பிரியாது உடன்நிற்பர்
ஆதலின் முன்னே நிற்கவேண்டிய எழுவாய் ஆகிய “வீதிவிடங்கப்
பெருமான்“ அச்செயலை அடுத்துப் பின்னே நின்றார். அருளின
விரைவுபற்றி இவ்வாறு பயனிலை முன்னர்க் கூறப்பட்டது
என்பதுமாம். அரசன் தன் மகனுடைய மருமத்தில் தேராழி யுறவூர்ந்த
செயலும், இறைவன் விடைமேல் நின்ற செயலும், ஒருங்கே நிகழ்ந்தன
என்பார், “உறவூர்ந்தான்“ என்றும், அதையடுத்துத் “தொழ நின்றான்“
என்றும் கூறினார். மேலே “உறவூர்ந்தான் மனுவேந்தன்“ என்ற
இடத்துக்கூறிய பொருள்கள் எல்லாம் “தொழ நின்றான் வீதிவிடங்கப்
பெருமான்“ என்ற இவ்விடத்தும் பொருத்திக்கொள்க.

     பூமழை சொரிந்தார்
- என்பதும் பாடம்.45