131. சடைமருங்கி லிளம்பிறையுந் தனிவிழிக்குந்
                                திருநுதலும்
 
  இடமருங்கி லுமையாளு மெம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையுமுன் கண்டரசன்                              போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும் விறல்வேந்தற்
                          கருள்கொடுத்தான்.
46

     (இ-ள்.) சடை...போற்றிசைப்ப - சடையின் ஒருபக்கத்து
இளம்பிறையும், தனித்து விழிக்கும் இயல்புடைய திருநெற்றியும்,
இடப்பாகத்திலே உமை அம்மையாரும், எப்பக்கமும், சூழ்ந்த
பெருமைப் பூதகணங்களும் ஆக இக்காட்சியை (இறைவன் காட்ட)
அரசர் கண்டு துதித்து நிற்க; விடை...கொடுத்தான் - விடைப்பாகராய்
எழுந்தருளிய வீதிவிடங்கப் பெருமான் வல்லமையுடைய
அவ்வரசனுக்குத் தமது நிறைந்த அருளைக் கொடுத்தனர்.


     (வி-ரை.) சடை - சிவபெருமானுக்கே உரிய சிறப்பு
அடையாளமாம். அது பற்றிச் சைவத்திற்கே சிறப்பாயுள்ள
அடையாளமுமாம். இதனாலே சடையான், கபர்த்தன் என்பன
சிவபெருமானுக்குரிய சிறப்புப் பெயர்களாயின. புகழ்ச் சோழ நாயனார்
தமது சேனைகள் கொணர்ந்த தலைக் குவியலிலே ஒருதலையிற்
புன்சடை கண்டு அத்தலையைப் பொற்றட்டிலே தாங்கித் தீப்புகுந்தது
இக்கருத்தே பற்றியது. “சடையானுக் காளாய்“, “சடையா யெனுமால்“,
“சடையானே தழலாடி“ என்பனவாதி எண்ணிறந்த திருவாக்குக்கள்
காண்க. இனியும் வருமிடந்தோறும் இக்கருத்துக்களை நினைவு
கூர்ந்து கொள்க. சடை - விடை - என்பன இறைவனது
இலக்கணத்தை விளக்குவன; சடைக்கு இறைவன் ஆதாரமாயும்
விடைக்கு ஆதேயமாயும் விளங்குதலால் இவன் ஒருவனே உலகுக்கு
ஆதார ஆதேயம் இரண்டுமாவன் - என்று இதனைத்
திரு. பண்டிதமணி - மு. கதிரேசன் செட்டியார் அவர்கள்
விளக்கியது சித்தாந்தப் பத்திரிகையுட் காண்க.

     இளம் பிறை - நிலவைச் சடையின்மீது உலாவவைத்த
வரலாறு இறைவனது பெருங் கருணையைக் காட்டும் அடையாளமாம்.
இஃது இறைவனது கருணையை விளக்கம்பெற உலகினர்க்கு
எடுத்துக்காட்டும் சான்றுமாகும். அன்றியும் இருள் உலகமாகிய
அலைகடலிலே கரை இருக்குமிடங் காட்டி அழைக்கும் உயர்ந்த
கலங்கரை விளக்கமும் ஆம். ஆதலின் இறைவன் காட்டப், பிறவிக்
கடலில் கரையைக் காணும் பேரடியார்களுக்கு இதுவே முதலில்
கண்ணுக்குப் புலனாவது வழக்கு. “பித்தா பிறைசூடி“ (நம்பிகள்), “ஓர்
தூவெண் மதிசூடி“ (திருஞானசம்பந்த நாயனார்) என்று நமது
ஆசாரியர்கள் திருவருள் பெற்ற தொடக்கத்திலே விளக்கம்பெற
எடுத்துக் கூறிய அருள்வாக்குக்கள் காண்க. திருவையாற்றிலே
கைலாயக் காட்சியை இறைவன் காட்டக் கண்ட அப்பர் சுவாமிகள்
“மாதர்ப் பிறைக்கண்ணியினானை“, “போழிளங் கண்ணியினானை“
என ஒவ்வொரு திருப்பாட்டிலேயும், தொடக்கத்தில் இவ்விளம்
பிறையை வைத்தருளியிருப்பதுங் காண்க. இன்னும் இதுபற்றி மேல்
தடுத்தாட்கொண்ட புராணத்தே “தெண்ணிலா மலர்ந்த வேணியாய்“
என்ற பாட்டின்கீழ்க் காண்க. அன்றியும் இறைவனது திருவுருவத்தின்
கேசாதி பாத மீறாகத் தரிசிக்கும் காட்சியிலே இதுவே முதலிற்
காட்சிப் படுவதும் வழக்காகும்.

     தனிவிழிக்குந் திருநுதலும்
- தனிவிழியினையுடைய
திருநெற்றி. நுதலுக்கு விழிக்கின்ற செயலில்லையாயினும்
அச்செயலையுடைய கண்ணை யுடைமையால் கண்ணின் செயலை
நுதலின்மேல் ஏற்றிக் கூறினார். நுதல் - நெற்றி. தனிவிழித்தலாவது
- ஒருபடித்தாயன்றி விழித்தல்; அஃதாவது வேண்டும்போது விழித்துப்
பிறநேரம் விழியாமை; இரண்டு சுடர்களாகிய ஏனையவிழிகளும்
(சூரிய சந்திரர்கள்) என்றைக்கும் இமையாமல் விழிப்பன. இந்த
நுதற்கண்ணோ எனின்? அவ்வாறன்றி ஒவ்வோர் காலங்களில்
ஆக்கல், அழித்தல், அருளல் முதலிய காரணம் பற்றி விழிப்பது.
இதனை அக்கினிக்கண் - தீக்கண் என்பர். அம்பிகை ஒருகாலத்து
இறைவனது இரண்டு கண்களையும் மூடியபோது எங்கும் இருள்
மூடிவிட, உலகத்திற்கு ஒளிதந்து அருளும்பொருட்டு இக்கண்ணைத்
திறந்தனர் என்பது சரிதம். மன்மதனை எரித்து அழிக்கும் பொருட்டு
ஒருகாலத்துத் திறந்தனர் என்பதும் ஒருசரிதம். அப்படித்
திறந்தகண்ணே அடியாருங் கண்டு அருள்பெற உள்ளது என்று,

“...செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லைச்
                            சிற்றம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக்
                         காண்பதென்னே“

எனும் அப்பர் பெருமானது திருவிருத்தத்தால் உணருகின்றோம்.
இவ்விழி தேவர்களின் அனுக்கிரகத்தின் பொருட்டு முருகப்
பெருமான் அவதரிக்க விழிக்கப் பெற்றதாம்.

     எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமை -
புடைஎம்மருங்கும் நெருங்கும் பெருமைப் பூதகணமும் என்று
பொருள் கொள்க. பக்கங்களில் எங்கும் நெருங்கும் பெருமையுடைய
சிவகணங்கள் என்க. இவற்றின் பெருமை 16-வது பாட்டிற் காண்க.
இவைகள் எப்பொழுதும் பிரியாது இறைவனைச் சூழப்பெற்று
ஆனந்தித் திருப்பனவாதலின் நெருங்கும் பெருமை என்றார்.
உலகங்களெல்லாம் அழியும் சங்கார காலத்திலே இறைவன்
திருநடனத்தை உடனிருந்து அம்மையார் காணும்போது இப்பூத
கணங்களும் தரிசித்து ஆனந்திப்பன என்பது,

“செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பனக்கொன்
றாகத்தா னங்காந் தழலுமிழு மைவாய
நாகத்தா யாடுந் நடம்“

எனும் அற்புதத் திருவந்தாதி (99-ல்) காண்க. பூத பரம்பரையில்
நிற்கும் அடியார்களுக்கு அப்பூதங்களுடன் காட்சி கொடுத்தலே
முறையாதலும், அத்திருக்கூட்டத்தில் அணைபவர்களே
இவ்வடியார்கள் ஆதலும் இங்குக் குறிப்பாகும்.

     விடை மருவும் - மேலே “மழவிடைமேல் ... நின்றான்“ என்ற
இடத்துக் காண்க.

     விறல் - “மெய்வண்ணம் தெரிந்துணர்ந்து“ (124) அவ்வழியே
நின்றதாகிய விறல். அப்பாட்டிலும் விறல் வேந்தன் என்றது காண்க.

     இடமருங்கில் உமையாள் - இறைவனது அருளே உருவமாக
உடையார் அம்பிகை என்பர். ‘வேந்தற்கு அருள் கொடுத்தான்' என
அருளைக்கொடுக்க வருகின்றாராதலின் அருளுருவமாகிக் கருணைப்
பிராட்டியை உடன்கொண்டு நின்றார் என்பதாம்.

     இசைப்ப - இசைக்கும்படி. கண்டு - இறைவன் காட்டக்
கண்டு. “காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே“ என்பது
தேவாரம்.

     அருள் கொடுத்தான் - தனது அருளே கண்ணாகக்
காணும்படி தன்னையே கொடுத்தான். “தந்ததுன் றன்னை“,
“உன்மைத் தந்தனை“என்ற திருவாசகங்கள் காண்க. காட்டக்கண்டார்
என்பது, “அருள் கொடுத்தான்“ என்பதனால் பெறப்படும்.
அவனருளே கண்ணாக அவன் கொடுத்து அதனால் காணின்
அல்லாது இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
என்றுகாணமுடியாது. ஆதலின் - கண்டு போற்றிசைக்கும் அருளைக்
கொடுத்தார் என்க. போற்றக் கொடுத்தலே அருள் என்பதாம்.
அம்மையாரும் பூதகணமும் தாமுமாக இருக்கக் கண்டும் போற்றியும்
இருக்கும்படி கொடுப்பதைவிட வேறு அருள் யாது உளது?
பார்க்க. 46