132.
|
அந்நிலையே
யுயிர்பிரிந்த வான்கன்று மவ்வரசன் |
|
|
மன்னுரிமைத்
தனிக்கன்று மந்திரியு முடனெழலும்
இன்னபரி சானானென் றறிந்திலன்வேந்
தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றான் முடியாத
பொருளுளதோ. |
47 |
(இ-ள்.)
அந்நிலையே....உடன் எழலும் - இறந்த பசுவின்
கன்றும், அரசனது உரிமைக் கன்றாகிய மகனும், மந்திரியும்
அப்பொழுதே ஒருங்கே உயிர் பெற்றெழுந்தார்கள்.
எழுதலும்;
இன்ன...வேந்தனும் - அதுகண்ட அரசனும்தான் இன்ன தன்மையை
யடைந்தான் என்று தானே அறியாதபடி ஆயினான்;
யார்க்கும்...உளதோ? - (இவ்வாறும் நிகழுமோ எனின்); எல்லார்க்கும்
முன்னவனாகிய இறைவனே முன்னின்றால் முடியாத பொருளும்
உண்டோ? இல்லை என்றபடி.
(வி-ரை.)
அந்நிலை - காலத்தைக் குறித்தது. அவ்வரசன்
-
அருள் பெற்றவனாகிய அந்த அரசன் என்று சுட்டிக் காட்டியபடி.
அரசன் மன்னுரிமைத் தனிக்கன்று அரசனது அரசப் பட்டத்துக்கு
உரிய ஒப்பற்ற மகன். மன் - அரசாங்கமாகிய
நிலை. பசுக்கன்றினுக்
கிணையாகக்கொண்டு முறை செய்யப்பட்டானாதலின் கன்று என்றார்.
இன்னபரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் -
இத்தன்மைத் தென்று அறிய முடியாத மகிழ்ச்சி என்க. இன்ன
தன்மையன் என்றறியொண்ணா எம்மான் தந்ததாதலின் அந்த
அருளும் - அதன் விளைவும் - அதனால் உளதாம் மகிழ்ச்சியும் -
அவ்வாறேயாம் என்க. முதல் மகிழ்ச்சி ஆன்கன்று உயிர்பெற்று
எழுந்ததனாலும் அதனாற் பசுவினது இடர் நீங்கியதனாலும் ஆம் -
பின்னர் மகனும் மந்திரியும் உடன் எழுந்ததனால் ஆம். இவை
இரண்டும் இன்ன காரணத்தாலாயின என்று அருளை அளந்தறிய
இயலாமை இவ்வாறு கூறினார்.
வேந்தனும் - சிறப்பும்மை. எச்சவும்மையுமாம்.
இவ்வினை
விளைந்தவா - செவ்விது என் செங்கோல்! - என் நெறி நன்றால்! -
என்செய்தாற்றீரும்! - என்று பலவும் எண்ணி இரங்கியும் ஏங்கியும்
தெருமந்தும் தெளியாதும் சோர்ந்தும் துயருற்ற அரசனும் இப்போது
அவை தீர்ந்து மகிழ்வுற்றான் - அது இன்ன பரிசாயிற்று என்று
அவனும் தெளியுமாறில்லை என்க. சுற்றும் இருந்த பிறர்
அறிந்திலாமையுடன் அரசனும் அறிந்திலன் என்றுரைப்பினும் ஆம்.
பசு உறு பேரிடர் தானும் தாங்குவது தருமம் - என்று துணிந்து
அத்துயர் தாங்குதற்காகச் செய்த செயலே, அதற்கு மாறாக
அதனாலே அரசனைப் பசுத்தாங்கும் பெரிய இன்பந் தாங்குமாறு
செய்தமையின், அதன் பரிசு அதற்கரியதாயிற்று.
உடன் எழலும்
- பசுக் கன்றும் அரசன் மகனும் மந்திரியும்
ஒருங்கே உயிர்பெற்றெழுந்தனர். பசுவின் மனமழியும் துயரகற்ற
மாட்டாது வருந்திய மன்னவன் அத்துயரகன்ற பின்னரே
மகிழ்ச்சியடைவான் ஆதலினாலும், தீ நீங்காதவழிப் புகையும்
நீங்காமைபோலப், பசுக்கன்று உயிர்பெறாதவழிப் பசுத்துயரும் அது
காரணமாய்வந்த அரசன் துயரும் நீங்கும் வழியில்லை ஆதலினாலும்,
இச்சரித நிகழ்ச்சிகள் யாவைக்கும் காரணமாய் முன் நிகழ்ந்தது
ஆன்கன்று உயிர் துறந்ததேயாதலாலும், அது உயிர்பெற்றெழுதலை
முதலிற்கூறினார். அரசனாணையின்படி அரச குமாரனை உயிர்நீங்கச்
செய்வதை அஞ்சியே மந்திரி உயிர் நீத்தமையால் அவனை
உயிருடன் அவன் காணும் பொருட்டு மகன் உயிர் பெற்றெழுந்ததை
மந்திரி எழுவதற்கு முன் வைத்தோதினார். அரசகுமாரன் உயிர்
நீத்தது காலத்தாற் பிந்தியதாயினும், அவனுயிரைப்பற்றிய நோக்கமே
மந்திரி உயிர் நீத்ததற்குக் காரணமாய் முன்னின்றதென்க. இம்மூன்று
எழுதல்களும் (ஒருங்கே) உடன் நிகழ்ந்தனவெனினும் காரணகாரிய
முறையினால் இம்முறையிலே சொல்லப் பெற்றன. உடன் எழல்
-
என்பதற்கு உயிருடன் எழுதல் என்று கூறுவாருமுளர்.
யார்க்கும் முன்னவனே
- எல்லாம் வல்ல இறைவனாகிய
சிவபெருமான் முன்னவன் என்றது இறைமைக் குணங்களால்
முதல்வனாதலைக் குறித்தது. காலத்தால் முந்தியவன் என்று பொருள்
கொள்ளின் அது பதி பசு பாசம் என்ற மூன்று பொருள்களும்
அநாதியே உள்ளன எனும் உண்மைக்கு மாறுபடுவதாம்.
யார்க்கும் -
எல்லா ஆன்ம வருக்கங்களுக்கும். இவை
எல்லாம் பசுவர்க்கத்துட்பட்டு அளவுபட்ட ஆற்றலே உடையன;
இச்செயல் அவை எவையும் செய்யச்
சக்தியற்றன. அளவில்லாத
ஆற்றலுடைய முன்னவனே செய்ய வல்லவன் என்றபடி.
முடியாத பொருள் உளதோ;
- உயிர் பிரிந்தாரை மீளவும்
உயிர்பெறச் செய்தலும் துன்பம் தாங்க எண்ணிச் செயல் செய்தாரை
அச்செய்கையாலே அப்போதே அவர் எண்ணாத இன்பந் தாங்கச்
செய்தலும் முடியுமோ? என்று ஐயப்படுவாரை நோக்கி முன்னவனே
முன்னின்றால் முடியாத பொருள் உளதோ? என்று விடை கூறியவாறு.
இதுமட்டுமன்று; வேறு எதுவும் முடியும் என்பது கருத்து. ஆக்கலும்
அழித்தலும் அருளலும் ஒருங்கே செய்யவல்லான். எல்லா
உயிர்களையும் தன்னிடம் ஒடுக்கி மீளவும் அவ்வவற்றின் பக்குவம்
நோக்கி உளவாக வைக்கும் இறைவன் எவனோ அவனே முன்னவன்;
ஆதலின் அவன் செய்தனன் - என்பது.
முன்னவனே ஏகாரம் அளவுபட்ட ஆற்றலுடைய பிறரன்றி
அளவிலா ஆற்றலுடைய அவனே - எனத் தேற்றமும் பிரிநிலையும்
ஆம்.
முன்னின்றால்
- முன்னிற்றல் வெளிப்படச் செயல் செய்தல்.
எல்லாப் பொருளிலும் செயலிலும் அவனே நிற்கின்றான். நின்று
இயற்றுவிக்கின்றான் என்பது நின்ற திருத்தாண்டகம் முதலிய வேதப்
பிரமாணங்களால் அறிகின்றோம். ஆனால் அளவுபட்ட பிறர்
செய்தற்கரிதாகிய இவ்வாறான செயல்களில் அவன் பொதுப்பட
மறைந்து நிற்றலன்றி வெளிப்பட முன்னே நிற்றல்வேண்டும் ஆதலின்
முன்னவனே நின்றால் - என்னாது முன் நின்றால் என்றார்.
உளதோ?
- ஓகாரம் எதிர்மறை. இல்லை என்றபடி.
இக்கருத்தையே பின்னர் எறிபத்த நாயனார் புராணத்துள் யானையும்
பாகரும் எழுந்தது முதலியனவாய், வந்த வந்த இடங்களிலெல்லாம்
அமைத்துக் கொள்க. திருஞானசம்பந்த நாயனாரும், அப்பர்
பெருமானும், சுந்தரமூர்த்திகளும் இறந்தான உயிர்ப்பித்த
வரலாறுகளும், “... தான் செய்யும் தன்மைகளை ஆக்கியிடும்
அன்பர்க்கரன்“ என்றும், “எனதுரை தனதுரையாக“ என்றும் வரும்
அருட்பிரமாணங்களால் இவ்வாறே முன்னவனே முன்னின்று
செய்தவைகளாம். ஓர் உயிருக்கு ஓர் உடம்பு முதலிற் கொடுத்துப்,
பின்பு தன்னகத்து ஒடுக்கி, மீளவும் வேறு ஓர் உடம்பு கொடுக்கின்ற
இறைவன் இவ்வுயிரை மீண்டும் அவ்வுடம்புக்குள்ளேயே புகுத்தலும்,
அவ்வுடம்பு உருவமழிந்தபோது அதனை முன்போலச் செய்து மீட்டும்
அவ்வுயிரை அதனுள் வைத்தலும் வல்லவனே யாவன் என்க.
“இன்றிருந்து நாளை யிறக்கும் தொழிலுடைய,
புன்றலைய
மார்க்க“ளிலே ஒருவனாகிய ஓர் அரசாங்க மனிதனே, “முடியாதது“
என்றசொல் என் அகராதியில் இல்லை என்று கூறினான் எனச்
சரிதம் கேட்டு மயங்கும் மாக்கள் இதன் உண்மை கண்டு
தெளிவார்களாக.
இப்பாட்டிலே அறிந்திலன் வேந்தனும் என்றதை
எச்சவும்மையாகக் கொண்டு மந்திரியும் மகனும் அறிந்திலர்; அரசனும்
அறிந்திலன் - என்று உரைத்தலுமாம். அரசன் கன்று -
உயர்திணையை அஃறிணையாகச் சொல்லப்பட்டது சிறப்புப்பற்றி;
“இவ்வாறு செய்தருளிற்றென்னாம்“ (2834) என்பது முதலியவை
காண்க. 47
|
|
|
|