133.
|
அடிபணிந்த
திருமகனை யாகமுற வெடுத்தணைத்து |
|
|
நெடிதுமகிழ்ந்
தருந்துயர நீங்கினா னிலவேந்தன்;
மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று
மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும் பருவரனீங் கியதன்றே. |
48 |
(இ-ள்.)
அடிபணிந்த......நிலவேந்தன் - (அருளின்வழி
உயிர்பெற்றெழுந்த அரசிளங்குமரன் அரசனை அடிபணிந்தான்,
அடிபணிந்த திருமைந்தனை அரசன் எடுத்துத் தனது மார்பு
பொருந்த அணைத்துப் பெரிதும் மகிழ்ந்து (பசுத் துயரத்தால்
விளைந்த) தனது முன்னைப் பெருந் துயரத்தினின்று நீங்கினான்;
மடிசுரந்து...நீங்கியது அன்றே - மடியிலே சுரந்து பொழியும் பாலை
உயிர் பெற்று வந்த கன்று மகிழ்ந்துண்ணப் பால்பெருகி வருகின்ற
பசுவும் தனது கன்றிழந்த முன்னைத் துன்பத்தினின்றும் அப்பொழுதே
நீங்கியது.
(வி-ரை.)
அடிபணிந்த - பணிந்த என்றதனால் - உயிர்பெற்று
வந்த மகன் அரசனை முன்னர்ப் பணிந்தான் - என்பது பெற்றாம்.
கோமானுக்கு வந்தபழியை மாற்றும் வகையறியாது திருமறையோரிடம்
தேடிப்போன குமாரன், அவ்வழியைத் தனக்குக் காட்டித், தானே
கழுவாயும் செய்து, புனிதனாக்கிய பேருதவிக்காக அடிபணிந்தான்.
ஆகமுற எடுத்தணைத்து - எடுத்து ஆகமுற அணைத்து
என்று கூட்டுக. எடுத்து - கீழே விழுந்து பணிந்த
மகனை எடுத்து
மார்பாரத் தழுவிக்கொண்டு.
நெடிது மகிழ்ந்து - பசுவின் துன்பம் நீங்கும்படிக்கும்,
தனது
செங்கோலுக்கு நேர்ந்த பழியை மாற்றும்படிக்கும், இறைவன் செய்த
பேரருளுக்கு இம்மகன் கருவியாய் இருந்தான் என்று பெரியதும்
மகிழ்ந்து. மகனை மார்பார எடுத்தணைத்தற்கு இம் மகிழ்ச்சியே
காரணம் என்க.
அருந்துயரம் - தனக்கு ஒரு துயரும் நேராது,
பிறிதொரு
உயிராகிய பசுவுக்கு நேர்ந்து, அதனைத் தான் அகற்றமாட்டாது
அத்துயரைத் தானும்தாங்கியதால் உண்டாகியது; இது
செய்தற்கரிதாயினமையால் அருந்துயர் என்க. 127-ம் பாட்டுக் காண்க.
மடிசுரந்து பொழி தீம்பால்
- கன்று உயிர்பெற்றுத்
தன்னிடம் வரவே பசு அன்பினால் பால்சுரந்தது. இந்த அன்பை
வடநூலார் வாத்ஸல்யம் என்பர். சண்டேசுர நாயனார் புராணத்திலே
இவ்வியல்பினை,
“...மனைக்கட்
கன்று பிரிந்தாலு மருவுஞ் சிறிய
மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித் தாயாந் தன்மை
நிலைமையவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவா மேபால்
பொழிந்தனவால்“
|
(30) |
என்ற இடத்து விரிவாகக்
கண்டுகொள்க.
படி நனைய
- அன்பினாற் பால் மிகவும் சுரந்ததாகலின்
கன்று உண்ணவும் மிகுந்து நிலத்தை நனைத்தது என்க.
கன்றும் அரசகுமாரனும் ஒருங்கே உயிர்பெற்று எழுந்தாலும்
அரசகுமாரன் உடனே அவ்விடத்தே அடிபணிய அவனை அரசன்
தழுவிக் கொண்டனன். கன்று அரசனது கோயில்வாயிலுக்குச் சென்ற
பசுவை நாடிப்போய்ப்பால் உண்டது. ஆதலின் முன்னர் நிகழ்ந்த
அரசகுமாரன் பணிந்தசெயல் முன்னரும், கன்று பசுவினிடம் சென்று
பால் குடித்த செயல் பின்னரும் கூறப்பெற்றன. பசுவும் பருவரல்
நீங்கியது; அதுகண்டு நிலவேந்தனும் துயர் நீங்கினான் என மாற்றிக்
கூட்டி உரைப்பாருமுளர்.
வரும் கன்று - தாயை நோக்கி வரும் கன்று.
தாயைக் கன்று
தேடி அடைதல் இயல்பாம்.
“பல்லாவுள்
உய்த்து விடினுங் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிற் கோடலை“ |
என்பது காண்க.
வரும் பசு
- கன்றும் அரசனும் இருந்த இடம் நோக்கி வரும்
பசு.
பசுவும்
- உம்மை எச்ச உம்மை. அரசன் துயரம்
நீங்கினதேயன்றிப் பசுவும் நீங்கினது. இரண்டும் ஒருகாலத்து உடன்
நிகழ்ச்சியாம்.
பருவரல்
- துன்பம் - துயரம்.
அன்றே
- அப்பொழுதே. பருவரலினின்றும் அன்றே நீங்கியது
என்க. அன்று - ஏ - அசை என்று ஒதுக்குவாருமுளர்.
48
|