135. இனையவகை யறநெறியி லெண்ணிறந்தோர்க்
                             கருள் புரிந்து
 
  முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய
                             மூதூர்மேற்
புனையுமுரை நம்மளவிற் புகலலாந்
                            தகைமையதோ?
அனையதனுக் ககமலரா மறவனார் பூங்கோயில்.
50

     (இ-ள்.) இனையவகை...தகைமையதோ? - இவ்வாறு
அறநெறியிலே அளவிலாத உயிர்களுக்கு அருள்செய்து யார்க்கும்
முன்னவனாகிய வீதிவிடங்கப் பெருமான் எழுந்தருளி
வீற்றிருந்தருளும் பழமையாகிய அந்நகரத்தைப்பற்றி எடுத்துச்
சொல்வது நமது அளவுபட்ட சொல்லாற்றலில் அடங்குமா? அடங்காது;
அனையதனுக்கு... பூங்கோயில் - அந்நகரினுக்கு அகமலர் போல்
விளங்குவது அறவனாராகிய இறைவன் எழுந்தருளிய பூங்கோயில்
என்னும் திருக்கோயிலாம்.

     (வி-ரை.) அறநெறியில் - அறநெறியில் நின்று உய்யுமாறு
என்க. இங்கு அறம் எல்லா அறங்களையும் உள்ளிட்டது. இறைவன்
இங்கே அரசராக (தியாகராசர்) எழுந்தருளி யிருத்தலால்
அரசனாவான் அறங்காப்பான் அல்லனோ - என்று நாம் அறிந்தபடி
(36-வது திருப்பாட்டு) இறைவரும் அறநெறியில் அருள் புரிந்து
மகிழ்ந்து வீற்றிருக்கின்றார் என்றதாம். நீதியே இறைவன் திரு
உருவங்களில் ஒன்றாதல்முன்னரே குறிக்கப்பட்டது. ‘அறவாழி
அந்தணன்' என்றகுறளும், ‘அறவனாரடி சென்று சேர்வதற்கு' என்ற
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் காண்க. இதுபற்றி இப்பாட்டில்
அறவனார் பூங்கோயில் என்றும் கூறினார்.

     எண்ணிறந்தோர்க்கருள்
- உயிர்கள் பல வாதலால்
எண்ணிறந்தோர்க்கு என்றார். அவ்வுயிர்கள் தோறும், அவ்வவற்றின்
உயிர்க்குயிராய் அங்கங்கே, நின்று இறைவன் செய்யும் அருளும்
பலவாதலின் எண்ணிறந்த உயிர்க்கு எண்ணிறந்த அருள் என்க.
முனைவர் எல்லார்க்கும் முன்னவர். முன்னர் 47-வது திருப்பாட்டில்
‘முன்னவனே' என்றதும் இது இதன் உரை அங்குக் காண்க.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - முனைவன்“ என்றபடி
இவரது இலக்கணத்தை இலக்கணத்துட் காண்க.

     மகிழ்ந் தருளப் பெற்றுடைய மூதூர் - மகிழ்ச்சியுடன்
இனிது வீற்றிருக்கப் பெற்ற பெருமையுடையது. சிலநாள் திருப்பாற்
கடலிலும், சிலநாட் பொன்னுலகத்திலும் எழுந்தருளியிருந்த இத்
தியாகேசர் இம்மண்ணுலகத்திலே இந்நகரை விரும்பி நிலைத்து
எழுந்தருளியிருக்கின்றாராதலின் இவ்வாறு கூறினார். ‘தொன்மையின்
மிக்கது' என்று தோற்றுவாய்செய்த பொருளையே முடித்துக்காட்டி
மூதூர் என்றதுமாம்.
 புனையும் உரை - புனைதல் - அணிசெய்தல்.
அதாவது அழகு செய்யும் உரை. புனைந்துரை அல்லது பாயிரமாய்ச்
சொல்லும் கூற்று என்றலுமாம்.

     புகலலாம் தகைமையதோ - ஓகாரம் எதிர் மறைப்பொருளில்
வந்தது. புகலுந் தகைமையது அல்ல என்றபடி. இதுவரை சொல்லி
வந்த அளவிலே திருவாரூர்ச் சிறப்புக்கள் அடங்கிவிடுவன அல்ல.
அவை முற்றும் சொல்ல நம்மளவில் அடங்காது என்று எச்சரித்து
ஆசிரியர் இப்பகுதியை முடித்துக்காட்டிய படியாம். பின்னரும்
இவ்வாறு முடித்துக் கூறும் இடங்களிலெல்லாம் இக்கருத்தே கொள்க.

     அனையதனுக்கு - அனைய அதனுக்கு -
அத்தன்மைத்தாகிய மூதூருக்கு என்க அனைய - என்றது முன்னே
கூறிய சிறப்புக்களையெல்லாம் நினைவுகூர்தற் பொருட்டு.

     அகமலர் - மலரின் உட்பகுதி. மேலே வண்தாமரைபோல்
மலர்ந்து (12) என்று உவமித்தற்கேற்ப இங்கு அகமலர் என்றார்.
தாமரையின் பொகுட்டே அதன் உயிர்போன்ற உட்பகுதி. அதைச்
சுற்றியே கேசரம், இதழ், புல்லிதழ், முதலியன காணப்பெறும்.
அதுபோலத் திருவாரூரின் நடுவில் அறவனார் பூங்கோயில் உளது.
திருக்கோயில் வரை உள்ள சுற்றுவீதி முதலியவைகளை முன்னர்
12-ம் திருப்பாட்டுவரை வரிசைப் படுத்தி உரைத்தமை நினைவு கூர்க.
அதனுக்கு - அதனிடத்து எனக்கொண்டு, அகமலர் - (எல்லாரது)
அகத்தில் (உள்ளத்தில்) மலர்வது என்றும், அகமாகிய மலர்
என்றும்கூறுவர். ‘மேதினிக் காதன்மங்கை இதயகமலமாம்' என்றதும்
காண்க.

     பூங்கோயில் - அறவனார் எழுந்தருளிய பூங்கோயில்
அதனுக்கு அகமலராம் என முடிக்க. இது வரும்பகுதியாகிய
திருக்கூட்டச் சிறப்புக்குத் தோற்றுவாய் செய்தவாறு. அப்பகுதி
முதற்பாட்டில் ‘பூங்கோயில்' என்று தொடங்கிக் கொண்டதுங்
காண்க. 50