138. அரந்தை தீர்க்கு மடியவர் மேனிமே  
 

னிரந்த நீற்றொளி யானிறை தூய்மையாற்
புரந்த வஞ்செழுத தோசை பொலிதலாற்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.

3

     (இ-ள்.) அரந்தை தீர்க்கும்........நீற்றொளியால் - (தேவாசிரியன்)
உயிர்களுக்குத் துன்பத்தைப் போக்கும் உபகாரிகளாகிய அங்கு
நிறைந்த அடியவர்கள் திருமேனிமேல் ஒழுங்குபெற அணிந்த
திருநீற்றின் வெள்ளிய ஒளியாலும்; நிறை தூய்மையால் -
(அவ்வடியவர்கள் மனத்திலே நிறைந்த பரிசுத்தத்தினாலும்;
புரந்த.......பொலிதலால் - (உயிர்களைக்) காக்கவல்லதாய்
(அவர்கள் திருவாக்கில் நின்றெழுகின்ற) திருஐந்தெழுத்தின் ஒலி
எங்கும் பொருந்துதலாலும்; பரந்த........போல்வது - பரப்பினையுடைய
அநேகம் பாற்கடல்கள் ஒன்று சேர்ந்து உள்ளது போன்றது.

     (வி-ரை.) தேவாசிரியன் என்னும் எழுவாய் மேற்பாட்டிலிருந்து
வருவிக்க. தேவாசிரியன் - நீற்றொளியால் - தூய்மையால் - ஓசை
பொலிதலால் - பாற்கடல் போல்வது என முடிக்க.

     அனபாயருடைய திருமனத்தைத் திருக்கைலாயத்திற்கு ஒப்புமை
சொல்கின்ற இடத்து, வரிசை - 22-ம் பாட்டில் “தன்மையினாலும் -
பெருமையினாலும் - தன்மையினாலும்“ என்று தனித்தனிப் பிரித்துக்
காட்டியதுபோல, நீற்றொளியால், தூய்மையால், பொலிதலால் என
இங்கும் ஆசிரியர் விளக்கியது காணத்தக்கது. மயக்கம் நிகழத்தகாத
இடங்களில் சிறிதும் ஐயம் உண்டாகாதபடி தேற்றிக் காட்டுவது
ஆசிரியரின் விளங்க வைத்தல் என்னும் சிறப்பு இயல்பு. அடியவர்
மேனிமேல் நீற்றொளி என்று கூறியதால், அதற்கேற்ப அடியவர்
மனத்துள் நின்றதூய்மை என்றும், அவர்கள் வாக்கிற் பொலி ஓசை
என்றும் வருவித்துக் கொள்ளப்பெற்றது. இவை முறையே அவர்களது
காயம், மனம், வாக்குக்களின் பொலிவைக் குறிப்பனவாம்.

     அரந்தை தீர்க்கும் அடியவர் - தம்மை அடைந்து
வழிபடுபவர்க்குத் துன்பங்களின் மிக்க பிறவித் துன்பம் நீங்க
உபகரிப்பவர் அடியவராதலின் தீர்க்கும் என்றார். தீர்க்கும் அடி
என்று அடிக்கு அடைமொழியாக்கியும் உரைப்பர். தீர்க்கும நீறு
என்றுமுரைப்பர்.

     அரந்தை - வலிய துன்பம்; அல்லது பெருந்துன்பம். இங்குப்
பிறவித் துன்பத்தைக் குறித்தது. இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றுச்
சீவன் முத்தர்களாகிய பெரியோர்களும் சிவானுபவ நிட்டை
நீக்கியபோது ஓரொருகால் உலகத்தோற்றம் உண்டாகும். அப்போது
முன்பழக்கவாசனை வசத்தினாலே ஆணவமலம் வந்து தாக்கும்.
அக்காலத்தில் உடனிருந்து காத்து உபகரிப்பவர்கள்
அடியார்களேயாம் என்பது சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்துக்
காட்டிய உண்மை. இக்கருத்துப் பற்றியே மாணிக்கவாசக சுவாமிகள்
“அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே“
என்று அருளினார். சீவன்முத்த ஆன்மாக்களுக்கே இவ்வடியவர்கள்
உபகரிப்பவர்களென்றால், ஏனைய சாமான்ய ஆன்மாக்களுக்கு
இவர்கள் செய்யும் பேருபகாரம் எடுத்துச் சொல்ல வேண்டிய
தில்லை.

     தீர்க்கும் - வாராமற் பாதுகாக்கும் என்னும் பொருள்பற்றியது.
வாராமலே காக்கவல்லவர் எனவே, வந்தபோதும் எளிதிற்
காக்கவல்லவர் என்பதும் பெறப்படும். அடியடைதலால்
தீர்த்துக்கொள்ளும் என்று பொருள் கூறுவாருமுண்டு.

     நிரந்த நீற்று ஒளியால் - நிரந்த நீறு - நிரல்பட -
ஒழுங்குபெற - பூசிய திருநீறு. அதாவது சிவாகமங்களில் கூறியபடி
விதித்த தானங்களிலும், விதித்த அளவிலும், அணிந்த என்பதாம்.
உச்சி - நெற்றி - மார்பு முதலியவை தானங்கள். நெற்றி - தோள் -
மார்பு இவற்றில் ஆறு அங்குலங்களாகவும், உச்சி - கை -
முழங்கால் முதலிய இடங்களில் ஒவ்வோ ரங்குலமாகவும் அணிதல்
அளவு எனப்பெறும். திரிபுண்டரமாக அணிதல் - உத்தூளனமாக
அணிதல். முதலியவை
அணியும்வகை என்பர். இவ்வாறு விதித்த
இயல்பிலே காலங்களிலே நீறுதரிப்பவர் அடியவர் என்க.

     நீற்று ஒளி
- திருநீற்றினால் ஆகிய ஒளி. வெண்ணீறே
அணியப்பெறுவதாதலின் அவ்வொளி வெண்மையுடையதாம்.
“புண்ணியா பூசும் வெண்ணீறு“ என்பது வேதம். நீற்றின் வெண்மை
பாலின் வெண்மை போன்றுள்ளது. ஆதலின் நீற்றொளி பாற்கடலுக்கு
உவமேயமாயிற்று. “...பால் வெண்ணீறும்“ என்ற அப்பர் சுவாமிகளது
கோயிற்றிருவிருத்தத்தையுங் காண்க. (கருமை - செம்மை முதலிய
நிறமுடைய நீறு விலக்கப் பெறுவது.)

     நிறை தூய்மை
- அடியவர் உள்ளத்தே பிறவற்றிற்கு
இடந்தராது முழுதும் நிறைந்த பரிசுத்தத் தன்மை. இது அகத்தூய்மை.
இது வாய்மையாற் காணப்படும் என்ப. வாய்மை - வாயின்
தன்மையாம். வாயின் தன்மையாவது இறைவனை வாழ்த்தி அவன்
நாமத்தைப் பரவுதலாம். “நமச்சிவாய வாஅழ்க“ என்று
மாணிக்கவாசக சுவாமிகள் அருளியபடி வாழ்த்துதலாவது அவனது
திருவைந்தெழுத்தை ஓதுதலேயாம். எனவே, இது அகம்
தூய்ைமையினைக் காட்டும் அடையாளமாகலின் புரந்த
ஐந்தெழுத்தோசை என்று அடுத்துக் கூறினார். “பூசுநீறு போல்
உள்ளும் புனிதர்கள்“ என்பதுங் காண்க. மனத்தைத் தூய்மை
செய்யும் முறையினை,

“கருமுதற் றொடங்கிப் பெருநா ளெல்லாங்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் நிறத்து மதனுடை யடுசினத்
தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி யருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புற
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையிற் றொடர்ந்து கிடந்தவென் சிந்தைப்
பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தைநீ யிருக்க விட்டனன்....“

எனப் பட்டினத்தடிகள் (திருக்கழுமல மும்மணிக்கோவை)
விதந்தோதினது காண்க.

     பாற்கடலின் தூய்மை - இறைவனுடைய தூய
திருமஞ்சனத்திற்கு உதவும் சாதிபற்றிப் பாலும் தூய்மையுடையதாம்.

     புரந்த அஞ்செழுத்து - உயிர்களைச் சென்ம நோயினின்றும்
காத்துவரும் மகாமந்திரமாகிய சீபஞ்சாக்கரம் என்க. மந்திரம் என்பது
காப்பது - இரட்சிப்பது - என்னும் பொருளுடையது. இது
மகாமந்திரமாகலின் மந்திரங்களினுடைய தன்மையாகிய காத்தல்
சிறக்கப்பெற்றது என்பார் புரந்த அஞ்செழுத்து என்றார். காக்குந்
தன்மை ஒரு மந்திரத்திற்கு உண்டு எனில் அது இதன்
தன்மையேயாம்; இது எல்லா மந்திரங்களுக்கும் மேலானதும்
ஆதியாயதுமாம் என்பது,

“ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே“

- (திருஞா - புரா - 698)

என்ற இடத்துத் தேற்றம் பெற எடுத்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.
தெப்பம் என்ற இடத்துத் தேற்றம் ஆழாமற் காக்கின்ற
செயலையுடையதாதலின் புனை என்றும் கூறுவர். “அஞ்செழுத்தின்
புணைபிடித்து“ என்பது திருவாசகம்.


“வெம்பிறவி வேலைதனில் வீழ்பவர்க ளெல்லாம்
நம்புசிவ நாமமெனும் நற்புணை பிடித்தால்
எம்பர னருட்கரை யேறுதுறை யாமால்
அம்புவி மொழிந்துள பெருந்துறை யதன்பேர்“

எனத் திருவாதவூரர் புராணம் போற்றியிருத்தலும் காண்க.

     அஞ்செழுத்து - காரணம், சூக்குமம், தூலம் என
மூன்றாகவும், இன்னும் பல வேறு வகையாகவும் சொல்லப்பெறும்.
இதன் இயல்புகளைத் திருவாசகம், திருமூலர் திருமந்திரம், மூவர்
முதலிகளது தேவாரப் பஞ்சாக்கரப் பதிகங்கள் முதலிய தமிழ்
மறைகளும், சைவ சித்தாந்த சாத்திரங்கள் முதலிய அருள்
நூல்களும் எடுத்துப் பேசுவனவாம். இவற்றின் விரிவுகளை
நல்லாசிரியரை அடுத்து முறையாய்த் தெரிந்துகொள்க.

     நடேசப்பெருமானின் அருள் நடனம் திருவைந்தெழுத்தின்
அருள்நிலையே அமைந்தது என்ப. பஞ்சாக்கரத் திருப்பதிகத்தாலே
சம்பந்த சுவாமிகள் திருநல்லூர்ப் பெருமணத்திலே, அதைக் கேட்ட
ஆன்மாக்கள் அனைவரையும் பிறவியில் வாராமற் செய்து முத்தியிற்
செலுத்தி யருளினர். பஞ்சாக்கரத் திருப்பதிகத்தாலே திருநாவுக்கரசு
சுவாமிகள் பாசக்கயிறு அறுபட்டுக் கல்லே தெப்பமாகக் கொண்டு
கடலினின்றும் கரைசேர்ந்தருளினார். இவையும் மற்ற சரிதங்களும்
இங்குப் புரந்த என்ற இடத்து நினைவு கூர்தற்பாலன.

“காத லாகிக் கசிந்துகண் ணீர் மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது“

- திருஞா - தேவாரம்

“வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட
அருளும்மெய் அஞ்செழுத்து.........“

என்று ஆசிரியர் எடுத்துக் காட்டித் திளைக்கும் தன்மையுங் காண்க.

     ஓசை - தனித்தனி ஒவ்வொருவரும் எண்ணிச் சொல்லும்போது
ஒலி உருவமாய் நின்ற அந்த மகாமந்திரம் பலர் சொல்லும்போது
விரவி ஓசைத் தன்மையில் வரும். ஆதலின் ஓசை என்றார்.
பாற்கடலின் ஓசை அதனுடைய அலைகளால் ஆயிற்று.

     ஆயிரம் - அநேகம் - எண்ணிறந்த - என்பது பொருளாம்.
அடியவர் ஒவ்வொருவரும் நீற்றொளியும், தூய்மையும், ஓசையும்
உடைமையால் ஒவ்வொரு பாற்கடல் போன்றவராவர். ஆதலின்
அனேகம் அடியார்கள் உள்ள இக்காரணம் பற்றி அநேகம்
பாற்கடல்கள் போன்றிருந்தனர் என்று குறித்தார். பாற்கடலில் பள்ளி
கொள்ளும் விட்டுணுவினது உள்ளத்தில் வீற்றிருப்பவராதலாலும் அம்
முறையே பாற்கடலிற்றங்குபவராதலின், பாற்கடல்கள்போல் விளங்கா
நின்றவர்களாகிய அடியவருள்ளங்களில் தங்குபவர் இறைவன்
என்பதும் குறிப்பாம். 3