140. அத்தர் வேண்டிமுன் னாண்டவ ரன்பினான்  
  மெய்த்த ழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியு மெண்ணிலார்.
5

     (இ-ள்.) அத்தர்..............ஆண்டவர் (இங்கு எழுந்தருளியுள்ள
அடியார்கள்) உலகத் தந்தையாகிய சிவபெருமானால் விரும்பி
முன்னே ஆட்கொள்ளப் பெற்றவர்கள்; அன்பினால்........சிந்தையார் -
அன்பு மேலீட்டினாலே தம்மேனியில் மயிர்ப்புளகமும் உடற்கம்பமும்
நிகழும்படியான மனக் கசிவுள்ளவர்கள்; கை......கடப்பாட்டினார் -
தமது கடமையாகவே கொண்டு கைத்தொண்டு செய்பவர்;
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார் - இத்தன்மை
உடையவர்களுடன் எண்ணிலாத அடியார்கள்.           


     (வி-ரை.) அத்தர் - தந்தை. உலகத்தின் தோற்றம், நிலை,
ஒடுக்கங்கட்குக் காரணராதல்பற்றி அத்தர் என்றார். “அத்தர்
பியன்மேலிருந்து இன்னிசையா லுரைத்த பனுவல்“ என்பது
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.வேண்டி முன் ஆண்டவர் -
உலகத் தந்தையாராகலின் உலகரை வழிப்படுத்த வேண்டி உலகர்
முன்னே வெளிப்பட ஆட்கொள்ளப் பெற்றவர்.

“.................தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தோர் விரும்பி யுய்யு
மந்நெறி காட்டு மாற்றால் அருட்சிவ யோகி யாகி“.
           - திருநீலகண்ட நாயனார் புராணம் - 10

“..................மாயை வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.“

                         - இயற்பகை புரா - 4

“செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு
                                 மெய்யினால்
அல்ல னல்குர வான போதினும் வல்ல ரென்றறி
                                   விக்கவே.“
                         - இளையா - புரா - 6

என்பனவாதி திருவாக்குக்களினால் இத்திருக் கூட்டத்திலே உள்ள
அடியார்களை அத்தர் வெளிப்பட ஆண்டது அவர்களது
பெருமையைக் காட்டி உலகவர்களை வழிப்படுத்த வேண்டியே
என்பது விளங்கும். ஆண்டவர் - ஆட்கொள்ளப்பெற்றவர் என்று
செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது. “அகலிடத்தவர் முன்
ஆளதாக“ என்பது சுந்தரர் தேவாரம்.

     இவ்வாறன்றி “அத்தர் வேண்டி முன் ஆண்டவர்“ என்பதற்குச்
சிவபெருமானால் விருப்பத்தினாலே முற்காலத்தே ஆட்கொள்ளப்
பெற்றவர்கள் என்பாருமுண்டு. “.......உறழ்ந்த கல்வி யுடையானும்
ஒருவன் வேண்டும்என இருந்து, துறந்த முனிவர் தொழும் பரவை
துணைவாநினைத் தோழமை கொண்டான்“ என்றும், “.....பாடும்
பணிநீ கூடும் பொருட்டு..நின்னைத் தொண்ட னென்னக்
கொண்டனன்“ என்றும் வருவனவாதி பாட்டுக்களை நோக்கி
இவ்வாறு கூறுவர். இது உபசார வழக்கென்க, எல்லா உயிர்களையும்
இறைவன் விரும்பி ஆட்கொள்வான் ஆதலால்.

     அன்பினால் - ஆளாகக் கொண்டதாற் பொங்கி எழுகின்ற
அன்பு காரணமாக. அன்பினால் ஆண்டவர் என்றும், அன்பினால்
தழைந்து என்றும் ஈரிடத்தும்கூட்டி உரைப்பதுமாம்.

     மெய்த் தழைத்து - மெய் - மேனி. தழைந்து -
விதிர்ப்பினால் மயிர்க் கூச் செறிந்து பொங்கி. மெய்விதிர்த்தல் -
உடல் நடுக்கம் உண்டாதல்; அன்புமேலீட்டால் உண்டாகும்
மெய்ப்பாடுகளில் ஒன்று. “மெய்தான் அரும்பி விதிர்
விதிர்த்து“ -
திருவாசகம். விரிப்புறு சிந்தையார் - அன்பின் நிறைவினால்
உடலிலே தழைத்த அசைவை உறச் செய்யும் சிந்தையுடையார் என்க.
“திருமேனி கன்னில் அசைவும்“ என்று பின்னர்க் கூறுதலுங் காண்க.
இவ்விளைவுகளின் தன்மையை,

“..........ஐயனார்க் காளாகி யன்புமிக்கு அகங்குழைந்து
மெய்யரும்பி அடிகள்பாதங் கையினாற் றொழும்
                                அடியார்.......“

என்ற திருத்தாண்டகத்தால் அறிக.

     கைத் திருத்தொண்டு
- உழவாராப்பணிவிடை செய்தல்,
திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல், திருநந்தவனம்
வைத்தல், திருமாலை கட்டுதல் முதலான கைத் திருத்தொண்டு
செய்தல். இவை சரியையின்பாற் படும். இதனை “நிலைபெறுமா
றெண்ணுதியேல்“ எனும் திருத்தாண்டகத்தில் அருளினார் அப்பர்
சுவாமிகள்.

     கடப்பாடு
- கையினாலும் மெய்யினாலும் செய்யும்
கடமைப்பாடு. “கைகாள் கூப்பித் தொழீர்“, “தலையே நீ வணங்காய்“
முதலிய திருவாக்குக்களிற் கண்டபடி அந்தந்த அவயங்களின்
கடமையை நிறைவேற்றல்.

     திருநாவுக்கரசு சுவாமிகள் முதலிய பெரியார் பலரும்
கைத்திருத்தொண்டு செய்தல் கை முதலிய புறக் கரணங்களைச்
சிவத்திலே தொழிற்படுத்தலாகிய கடமையை நோக்கியே யல்லது
இப்பெரியார்கள் சரியை மட்டில் நிற்பவர்கள் என்று கொள்ளற்க
என்னும் கருத்தை வைத்துக் கடப்பாட்டினார் என்றார். சீவன்
முத்தர்களுக்குச் சிவாலய சேவை விதித்த சிவஞானபோதம் 12-ம்
சூத்திரத்தின் கருத்தை நோக்குக. அன்றியும் கடப்பாடு என்றதனால்
இவர்கள் கைத்தொண்டு செய்தல் ஒரு பலனையும் விரும்பியன்று
என்பதும் பெற்றாம். “என்கடன் பணி செய்து கிடப்பதே“- தேவாரம்.
“நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே“ -
திருவாசகம். இங்ஙனம் தொண்டு செய்வோர் ஒரு பலனையும்
விரும்பிச் செய்யாவிடினும், “செய்வினையும் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும்
விதித்தபொருள்......“ என்று சாக்கிய நாயனார் புராணத்தில்
அறிகின்றபடி இவர் செய்யும் கைத்தொண்டுக்கு உரிய பலன்
இறைவனால் தரப்பெறுவதாம். இதனையே “என்கடன் பனி செய்து
கிடப்பதே“ என்ற அப்பர் சுவாமிகள், முன்னர் “தன்கடன்
அடியேனையுந் தாங்குதல்“ என்றருளினர். அவன் தாங்குதலால் பணி
செய்வோம் என்றும், பணிசெய்தலால் தாங்குவன் என்றும்
இருவகையும் ஆம். கைத்தொண்டின் பயனைப் “பெரும்புலர் காலை
மூழ்கி“ எனவும், “விளக்கினார்பெற்ற இன்பம்“ எனவும் வரும்
அப்பர் சுவாமிகள் தேவாரங்களாலும் பிறவாற்றானும் அறிக.
“கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்“ எனத்
திருஞான சம்பந்த சுவாமிகள் பாராட்டியதும் காண்க. இத்தொண்டின் சிறப்பினாலே திருவீழிமிழலையில் அப்பர் சுவாமிகள் வாசியில்லாக்
காசு பெற்றனர் என்பதையும் இங்கு நினைப்போமாக.

“......கைத்தொண்டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி பெற்று வந்தார் வாசீகர்...“
                         - திருநா - புரா - 260

     எண்ணிலார் - இப்பாட்டுக் குளகமாய் “எண்ணிலார்“ என்னும்
எழுவாய் “புனிதர்கள்“ என்னும் பெயர்ப்பயனிலை கொண்டு
முடிந்தது. 5