143.
|
கேடு
மாக்கமுங் கெட்ட திருவினார் |
|
|
ஒடுஞ்
செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். |
8 |
(இ-ள்.)
கேடும்....திருவினார் - குறைவதும் மிகுவது மில்லாத
நிலைத்த ஐசுவரியத்தை உடையவர்கள்; ஓடும்...நோக்குவார் - மண்
ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்;
கூடும்...விளங்கினார் - (இறைவனை மனத்திலே) கூட்டி வைக்கும்
அன்பு மேலீட்டினாலே அவனைக் கும்பிடும் பிறப்பு ஒன்றேயன்றி
வீட்டையும் விரும்பாத வன்மையுடையார்.
(வி-ரை.)
கேடும் ஆக்கமும் கெடுதல் - எக்காலத்தும்
மிகுதிப்பாடாவது குறைவுபாடாவது இல்லாமல் என்றும்
ஒருபடித்தாகவே நிலைத்திருத்தல். இது இவர்கள் அடைந்த திரு
(செல்வம்)வின் இயல்பு. உலகிலே ஏனைய மாக்கள் செல்வமாக
எண்ணுகினற் மற்ற ஐசுவரியங்கள் போலல்லாமல் வறுமையாலும்
செல்வத்தாலும் வரும் துன்ப இன்ப முனைப்புக்கள் இந்தத்
திருவினிடத்தே செயற்படாமற் கெட்டொழியும். ஆதலின் கெட்ட
என்றார். இத்திருவின் இயல்பும் மற்ற உலகங்களின் ஏனைய
இயல்பும் இளையான்குடி மாறநாயனார் புராணத்தும் பிற இடத்துங்
காண்க.
திரு -
இது இறைவனது தன்மையாய் எக்காலத்தும்
இன்பமாகவே நிற்கும்நிலை. இதுவே ஈசுவரத் தன்மை - ஐசுவரியம் -
எனப் பெயர் பெறும். இறவாத இன்ப அன்பு என்பதும் இது.
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குதல் - ஓடு - பிச்சைபுக்கு
உண்ணும்நிலையும் செம்பொன் - செல்வ நிலையும் குறித்தன. ஓடு
-
பிச்சை ஓடு. வறுமையையாரும் வெறுப்பர்; செல்வத்தை யாரும்
விரும்புவர். அடியவர்கள் இவ்வாறன்றி இவ்விரண்டு நிலையிலும்
மனம் மாறாது ஒன்று போலவே நின்று தம்பணிசெய்து நிற்பர்.
செல்வ
மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியும்
மெய்யினால்
அல்ல னல்குர வான போதிலும் வல்லர்...
-
இளையான் - புரா - 6. |
முதலிய நிலைகளைக் காண்க.
அன்றியும் - பொன்னும் - ஓடும்
என்ற இரண்டு பதங்களிற்பட்ட உலகப்பொருள்கள் எல்லாம்
ஒன்றுபோலவே மனிதர் நன்னெறிக்கு இடைஞ்சல் விளைப்பன என
எண்ணி ஒதுக்குவர் என்பதுமாம்.
புல்லோடுங்
கல்லோடும் பொன்னோடு மணியோடுயஞ்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த..........
|
அப்பர்
சுவாமிகள் திருப்புகலூரில் திருமுற்றத்திற்கிடந்த
பருக்கைக் கற்களோடு நவமணியையும் உழவாரத்தில் ஏந்தி
வாவியிற்புக எறிந்தனர் என்பதும், இவை முதலிய பிறவுங் காண்க.
மேலும், ஓட்டினைப்போலப் பொன்னும் மாயா பௌதிகப்
பொருளாகிய மண் - எனவும், இவ்வாறே எல்லாப் பொருள்களும்
அவ்வவற்றின் தத்துவங்களில் நிற்பன எனவும் கண்டு,
தத்துவங்கடந்த இறைவனிடம் மனத்தைச் செலுத்தும் - என்பதுமாம்.
ஒட்டினை
எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவீர்..... |
என்று [ஒளிவிடும் பொன்
- தானே பிரகாசிக்கும் பொன் -
சுயம்பிரகாசமுள்ள பொன் - இரேடியம் (Radium) என்பர்.]
சித்தர்களின் தன்மையும் வன்மையும் தாயுமானாராற் பேசப்-
பெறுமாயின் தொண்டர்களின் நிலைசொல்லவுங் கூடுமோ?
கூடும் அன்பு
- இறைவனோடு அந்நியமின்றி ஒட்டிக்
கூடுவதற்குக் காரணமாகிய அன்பு. ஒட்டிட்ட பண்பின் உருத்திர
பல்கணத்தார் என்னும் பண்பே இங்குக் கூடும் எனப்பெற்றது.
அந்நிலை பெறுதற்கு அன்பே காரணம் ஆதலின் கூடும் அன்பு
என்றார்.
(அன்பினிற்) கும்பிடல்
- கும்பிட்டு நிற்கும் பிறப்பு என்க.
இது ஆகுபெயர். மேலே வீடும் வேண்டா என்பதற்கேற்பக்
கும்பிடும் பிறப்பே வேண்டுவர் என்றுரைக்கப்பெற்றது.
வீடு -
பிறப்பின்மை; விடுபடுதல். பிறவித்துன்பத்தினின்று
விடுபடுதேலே வீடு.
கூடும் அன்பினிற் கும்பிடல்
- காணப் பெற்றால்,
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று அப்பர்
சுவாமிகள் அருளியதும். நின்றிருவடிக்காம் பவமே யருளு
கண்டாய் என்று மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும்,
கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம்
இன்பமாம் என்று வன்றொண்டர் வேண்டியதும் இக்கருத்துப்
பற்றியே என்க. தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை
சாதித்தார் என்பது சேக்கிழார் சுவாமிகள் கருத்துமாம்.
இவ்வாறன்றிக் கும்பிடல் என்பதற்குக் கூடுமன்பினில்
இறைவனையும் உயிர்களையும் தொழுது பயன் கருதாப் பணிசெய்வது
என்றும், அது (பயன் கருதாத் தொண்டு) வீட்டினிற் சிறந்ததென்றும்,
வீட்டில் இன்பம் உண்டென்று எண்ணித் தொண்டு செய்வதும் பயன்
கருதுவதாய் முடியும் என்றும், இவ்வாறெல்லாம் தத்தம் மனதுக்
கிசைந்தவாறு உரை காண்பாரும் உண்டு. இறைவனைத்தொழுதலே
யன்றி உயிர்களையும் தொழுது பயன் கருதாத் தொண்டு செய்தல்
என்பது இச்செய்யுளில் எங்குப் பெறுவதோ?. அன்றியும், உயிர்களைத்
தொழுதல் பணியாம் என்பதற்கு விதி யாதோ? அறிகிலோம்.
உயிர்களிலே பந்தம் நீங்கப்பெற்ற முத்த ஆன்மாக்களும்
அடியார்களுமே தொழுவதற்கு உரியார் என்பது ஞான நூல்களின்
முடிபு. ஏனைய உயிர்கள் யாவையும் நம்போற்
பாசபந்தப்பட்டவையே; அன்றியும் கும்பிடல் என்னும் மொழிக்குப்
பயன் கருதாப் பணிசெய்தல் என்னும் பொருள்கொள்ளும் வகையுங்
காணப்பெறவில்லை. மரபுபற்றி உரைகூறாது இவ்வாறு அவரவர்
கொள்கைகளைச் சைவசமய சம்பிரதாய சாத்திரங்களிற் புகுத்துவது
ஆசிரியர் கருத்துக்கும் நூன்மரபுக்கும் உரைமரபுக்கும் பொருந்தாமை
உணர்க.
முன்னர்ச்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலாயத்தில்
கும்பிட்டுக்கொண்டு வாழ்ந்த நிலையைவிட இறைவன் அருள்
நடனத்தைக் கும்பிடப்பெற்றதால் இப்பிறவியையே சிறந்ததாகக்
கருதினார் என்ற பொருள் இங்கு உணர்ந்து அனுபவிக்கத் தக்கது.
இவ்வாறன்றிக் கூடுமன்பினில் கும்பிடுதல் என்பதனுக்கு எல்லா
உயிர்களும் இறைவனைக்கூடி இன்பம் அடைக என்னும் கருத்தால்
கும்பிடுதல் என்றுரைப்பினும் ஆம். வையகமுந் துயர் தீர்கவே
என்பன வாதி திருவாக்குக்களின் கருத்தை நோக்குக. 8
|
|
|
|