144.
|
ஆரங்
கண்டிகை யாடையுங் கந்தையே |
|
|
பார
மீசன் பணியல தொன்றிலார்
ஈர வன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ. |
9 |
(இ-ள்.)
ஆரம்...........கந்தையே - (மேலும் இங்குள்ள
அடியார்கள்) ஆரமாகப் பூண்பது உருத்திராக்க வடமேயாம்.
ஆடையாக உடுப்பது கந்தை உடையேயாம்; பாரம்.........ஒன்றிலார் -
அவர் தாம் செய்யும் கடமையாகத் தாங்கி நிற்பது இறைபணியையே
யன்றி வேறொன்மில்லார்; ஈர அன்பினர் - (அப்பணியிலே
தங்களைச் செலுத்தவல்ல) தண்ணிய அன்பினை மிகவுடையார்;
யாதும் குறைவிலார் - ஒன்றினாலுங் குறைவு இல்லாதவர்;
வீரம்....தகையதோ - இவர்களது வீரம் என்னால் அளவிட்டுச்
சொல்லுந் தகைமையதோ? (அன்று என்றபடி).
(வி-ரை.)
ஆரம் -
மாலை. உடலுக்கு அணி செய்வது.
கந்தை - கிழிந்த பழைய துணி என்றும்,
பல துணிகளைச்
சேர்த்து இழையோட்டி ஒன்றாகத் தைத்த துணி என்றும் கூறுவர்.
இங்குக் கூடியிருக்கும் அடியார்கள் உருத்திராக்க மாலைகளைத்
தவிர வேறொன்றையும் தமது திருமேனிக்கு அணிகலமாக
வேண்டாதவர்கள். உடையின்றியிருக்க மரபில்லையாதலின் கிழிந்த
தைத்த ஒரு கந்தையைத் தவிர வேறொரு உடையையும்
விரும்பாதவர்கள். இந்த ஒருகந்தையைக்கூட மிகை அல்லது சுமை
அல்லது பற்று என்று உண்மை அடியார்களாகிய இவர்கள்
கருதுவார்கள் என்பது “கந்தை மிகையாங் கருத்து“ எனப் பின்னர்
அப்பர் சுவாமிகளின் நிலை கூறுதல் காண்க. “கருத்துணி
பலதொடுத்திசைத்த, ஒருதுணி யல்லது பிறிதொன்று கிடையாதாக“
என்று இந்நிலையை வேண்டுகின்றனர் குமரகுருபர சுவாமிகள்.
“..............துன்னற்
கோவணம் பரிக்கும் ஆடை
சீரெலாம் சிறந்த சாந்தம் தெய்வநீறு அணிபூண் கண்டி“ |
என்று மாணிக்கவாசக சுவாமிகளின்
நிலையைப்பற்றித்
திருவிளையாடற் புராணங் கூறும். இவற்றுள் முந்தியதாகிய
தெய்வநீற்றை முந்தைய முறையிலே வைத்து முன்னர் 6-வது
பாட்டுக்களில் “நீற்றொளியால்“ “பூசுநீறுபோல்“ என்று
பேசினமையால், இங்குக் கூறிற்றிலர். மணி என முன்னாப்
பொதுவகையாகக் கூறினாராயினும் இங்குச் சிறப்பு வகையாகக்
கண்டிகையும் கந்தையும் கூறப்பெற்றன.
பாரம்
- தம்மாற் செய்தே தீரவேண்டுவதாகிய கடமைப்பாடு;
உரிமையாகக் கொள்வது. “ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்“
என்னும் திருமூலர் திரு மந்திரத்தின் உண்மைப்பொருளை
அறியாதார் ஆடை கந்தையேயாயுள்ள ஞானிகளுக்கு நீறும்
கண்டிகையும் இறைவன் பூசையும் வேண்டுவதோ என்று ஐயப்படுவர்.
இறைவரது பணி அவர்க்கும் கடமையாம்என்று அவரது இயல்பு
கூறும் வகையினாலே இவர்களது ஐயத்தை நீக்கியவாறு. “ஏகனாகி
இறைபணி நிற்க“ என்பது சூத்திரம்.
ஈசன் பணி
- எல்லா உலகுக்கும் முதல்வனாகிய இறைவன்
பணி. இதற்கு - எல்லா உயிர்க்கும் தன்னைப் போலக் கருதிப் பணி
புரிதல்; எவ்வுயிர்க்கும் தீங்குசெய்யாமை;
பிறர் தீங்குசெய்யினும்
அதை அன்புடன் பொறுத்தல் முதலியவை ஆம் என்று உரை
கூறுவாரு முண்டு. இவை சீவகாருண்யம் எனும் சாமான்ய பசு
தர்மங்களின் பாற்பட்டு சொர்க்க நரகங்களுக்கு ஏதுவாய்
உள்ளனவே யன்றி மேலாகிய சிவ புண்ணியமாய் வீட்டுக்குக்
காரணமாகா. சண்டேசுர நாயனார், தண்டியடிகள், கோட்புலியார்,
சத்தியார் முதலியோரின் சரிதங்களில் இவற்றின் உண்மையியல்
விளக்கப்பெற்றதும், இறைவனது அன்பின் முன்னே இவை ஒரு புறம்
ஒதுக்கப் பெற்றதும் காண்க. அன்றியும் தேவாசிரிய மண்டபத்துள்ளே
எழுந்தருளியுள்ள திருக்கூட்டத்தவராய் இப்புராணத்திற் பேசப்பெறும்
அடியார்களது சரித்திரத்திலே பொருந்தாதனவுமாம். இப்புராணத்துட்
பின்னர்கூறப் பெற்ற அடியார்கள் சரிதச்சுருக்கமே இப்பகுதியாதலின்
அவற்றிற்குப் பொருந்தியதே உரையாகும். ஏனையவை உரையாகா.
ஆதலின் பின் சரிதங்களின் உள்ளுறையை நோக்காது உரை கூறுதல்
பொருந்தாது என்க. மேற்பாட்டிற் கூறியனவும் காண்க. ஈசன்பணி
என்பதற்கு உயிர்களின் பணி என யாண்டும் எவ்வாறானும் பொருள்
வாராமையும் உணர்க. ஈசன்பணி என்பதனோடு அவன் அடியார்
பணியும் இனம்பற்றி உரைத்துக்கொள்வது சாத்திர சம்மதமாகும்.
ஆனால் எல்லா உயிர்களும் இறைவனது அடிமைகளே யாயினும்
அடிமைத் தன்மையை உணராதபோது அவைகள் பந்தப்பட்ட
ஆன்மாக்களேயாம். அவற்றினிடத்து இரக்கம் வைத்தலேயன்றி
வணக்கம் செலுத்துதல் யாண்டும் விதிக்கப்படாமை யுணர்க.
“எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணியிரங்க“ என்றார் தாயுமானார்.
ஈர அன்பினர் - தண்ணளி. நமது நாட்டு
வழக்கமும் அது.
அன்பை எப்பொழுதும் குளிர்ந்த நோக்கமுடைதாய்க் காண்பதே
மரபு.
யாதுங் குறைவிலார்
- ஒன்றாலும் குறைவில்லாதவர்.
“ஒன்றினாற் குறையுடையோமல்லோ மன்றே“ முதலிய
திருவாக்குக்கள் காண்க. இவர்கள் பாரமாய்ச் செய்யும் ஈசனது
பணியிலேயும் யாதும் குறைவிலாது செயும் பேறு பெற்றவர்கள்.
இறைவன் பணி நிற்கும்போது உளவாகும் குறைகளை அன்பினாலே
நிரப்புவர். ஆதலின் அவர் பணிக்கு எக்காலும் ஒருகுறைவும்
இல்லை என்பதாம். “தேடாதன அன்பினில் நிரப்பி“ என்ற
சண்டேசுரர் புராணமுங் காண்க. “போதும் பெறாவிடில் பச்சிலை
யுண்டு புனலுண்டெங்கும், ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டு“ என்பது
பட்டினத்துச் சுவாமிகள் திருவாக்கு.
வீரம்
- தமது கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் மாறாக எது
வரினும் அஞ்சாது எதிர்த்து நின்று வெற்றி பெறுதற்கான மன நிலை,
அரசனது கோபங்கொண்ட பட்டத்து யானையை வெட்டி வீழ்த்திய
எறிபத்த நாயனார் சரிதமும், கோபமூட்டித் தம்மே லேவப்பட்ட
யானையைக் கண்டு “அஞ்சுவ தியாதொன்றுமில்லை; அஞ்ச வருவது
மில்லை“ என்று இருந்து அதனைப் பணிவித்த அப்பர் சுவாமிகள்
சரிதமும், திருப் பூமண்டபத்துக் கிடந்த பூவை மோந்த
அரசர்தேவியின் மூக்கை அறுத்த செருத்துணைநாயனார் சரிதமும்,
இவை போல்வன பிறவும் இங்கு வைத்துக் காணின், அன்பர்களின்
வீரம் இத்தகையது என விளங்கும். யாதுங் குறைவிலார் என்ற
குறைவின்மைக்கு அன்புகாரணமாம். குறைவின்மை வீரத்திற்குக்
காரணமாம். இங்கு எழுந்தருளிய அடியார்களே இவ்வீரத்தை
உடையார்கள் என்பது பின்னர்த் தடுத்தாட்கொண்ட புராணம்
201-வது பாட்டில் “அழியா, வீரத்தார் எல்லார்க்குந் தனித்தனி
வேறடியேன்“ என்று முடித்துக் காட்டியதால் அறியப் பெறுவதாம்.
“தறிசெறு களிறுமஞ்சேன், தழல்விழியுழுவை யஞ்சேன்“ அச்சப்பத்து
முதலிய திருவாசகத் திருவாக்குக்களையும் நோக்குக. உலகிற்
கொள்ளும் ஏனைய எந்தவீரமும் இவர்களது வீரத்தின் முன்
நிற்கமாட்டா.
என்னால் விளம்புந்
தகையதோ? - இது கூறும் ஆசிரியரே
இறைவன் அடியார்களது அன்புக்காகப் பேரரசின்
அமைச்சுரிமையைப் பொருட்படுத்தாது விடுத்துப் போந்த மகா வீரர்
என்பதைக் கூர்ந்து எண்ணுக. 9
|
|
|
|