148.
|
பெருகிய
நலத்தான் மிக்க பெருந்திரு நாடு
தன்னில் |
|
|
அருமறைச்
சைவ மோங்க வருளினா லவதரித்த
மருவிய தவத்தான் மிக்க வளம்பதி வாய்மை
குன்றாத்
திருமறை யவர்க ணீடுந் திருநாவ லூரா மன்றே. |
2 |
(இ-ள்.)
பெருகிய...........தன்னில் - நீடிய நலங்கள் பலவும்
மிகுந்த பெரிய அத் திருமுனைப்பாடி நாட்டிலே; அருமறை........
வளம்பதி - அரிய வைதிக சைவ நெறி உலகத்திலே ஓங்கிவளரும்
பொருட்டுத் திருவருளினாலே (முன்கூறிய ஓலைகாட்டி ஆண்டவர்)
அவதரிப்பதற்குப் பொருந்திய பெருந்தவத்தைச் செய்த வளமுடைய
பதியாவது; வாய்மை............ஊராம் - உண்மைநெறி பிறழாத
திருமறையவர்கள் நிலைத்துவாழும் திருநாவலூர் ஆகும். அன்று,
ஏ - அசை.
(வி-ரை.) ஓலை காட்டி ஆண்டவர் என்ற எழுவாய்
மேற்பாட்டிலிருந்து வருவிக்க.
பெருகிய நலம்
- உலகுக்கு உதவுவதாகிய நன்மை. இந்த
நாடு உதவிய நலமானது நாளும் நாளும் பெருகிக் கொண்டே
போவதாம். அந்நலமாவது அருமறைச் சைவம் ஓங்கச் செய்தது. இது
ஆரூர் நம்பிகளது அவதாரத்தில் உண்டாகியது. இதுபோலவே
இந்நாடானது அருமறைச் சைவத்தின் இன்னொரு ஆசாரிய
மூர்த்திகளாகிய அப்பர் சுவாமிகளையும் உலகிற்கு உதவி
நலஞ்செய்ததாம். இவ்விரு பெருமக்கள் நலமும் பெருகிக்கொண்டே
வருவது ஆதலின் பெருகிய நலத்தான் மிக்க பொருந்திருநாடு
என்றார். இதனையே மறந்தரு தீநெறிமாற எனும் திருநா - புராணம்
11-ம்பாட்டில் விளக்கியருளினார். பெருகிய
- (மிக்க) பெருந்திரு -
என்றமையால் எதிர்காலமும் கொள்ளப்பெற்றுப் பின்னர்
ஸ்ரீமெய்கண்ட சுவாமிகள், ஸ்ரீ அருணந்தி சிவாசாரியார் என்ற சைவ
சித்தாந்த சந்தான ஆசாரியர்களையும் கொடுத்த பெருமை
பெறுவதையும் இங்கு நினைவு கூர்க.
பெருந் திருநாடு - அழியா ஐசுவரியத்தை
உடையநாடு.
மேலேசொல்லியநாடு.
அருமறைச் சைவம் -
வேதத்தின் பயனாயுள்ள சைவம்.
இதுவே வைதிகசைவம் எனப்படும். இதுவே சைவசித்தாந்தம் எனவும்
பெறும். ஓரும் வேதாந்தமென்றுச்சியிற் பழுத்த, சாரங் கொண்ட
சைவசித்தாந்தத் தேனமுது என்றார் பெரியோரும். மௌன மோலி
அயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தி னமர்ந்தது வைதிக
சைவம் என்பர் தாயுமானார். வேதத்தின் பயன் சைவம் என்பதே
ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் கருத்து எனச் சண்டேசுர நாயனார்
புரணாம் 9-வது திருப்பாட்டில் வேதப்பயனாம் சைவமும்போல்
என்பதனால் அறியலாம்.
ஓங்க -
அருமறைச் சைவம் நம்பியாரூரரது திரு
அவதாரத்தாலே ஓங்கி வளர்ந்ததாம். இதுபற்றித் திருமலைச் சிறப்பிற்
கூறியவை காண்க. தென்திசையிலே பல தலங்களும் விளக்கம்
பெற்றுச் சிவபெருமானது பணி பெருகியது. திருத்தொண்டத்தொகை
அருளினமையால் சிவனடியார் பொலிவு பெறுகிற்று. ஆதலின்
அருமறைச் சைவம் ஓங்க அவதரித்த என்பதாம். இதுபோலவே நமது
பரம ஆசாரிய மூர்த்திகளாகிய அப்பமூர்த்திகளும், சம்பந்தப்
பெருந்தகையாரும் அவதரித்தமையால் அருமறைச் சைவம் ஓங்கிற்று
என்று அவ்வவர் புராணங்களிற் கூறுவதுங் காணக். அருமறையின்
தூய சிவாகம நெறிவிளங்க மாணிக்கவாசகப் பெருமான்
அவதரித்தார் என்பது திருவாதவூரர் புராணத்திலே காண்க.
அருளினால் - திருமலையிலே ஆதிமூர்த்தி
அருளியபடி.
வரிசை 37-வது திருப்பாட்டுக் காண்க. ஓங்கும்படி வைத்த
அருளினால்.
அவதரித்த -
அவதாரம் என்பது இறங்குகை என்ற
பதப்பொருள்தரும். திருமலையினின்றும் இங்கு இறங்கி
வருகின்றாராதலின் அவதரித்த என்றார். அவதரித்தல் என்பது
தம்பொருட்டன்றிப் பிறர் பொருட்டுப் பிறப்பை மேற்கொள்ளும்
பெரியோர் பிறப்புக்குப் பெயராகும்.
மருவிய தவத்தான் மிக்க வளம்பதி -
இப்பதி முன்பு
மிகுந்த தவஞ்செய்து தன்னிடத்தே நம்பிகள் அவதரிக்கும்
பேறுபெற்றது என்பதாம். முன்னர் மாதவம் செய்த தென்றிசை
என்றதும் காண்க. திருஎருக்கத்தம்புலியூரைப் பற்றி ஐயர் நீர்
அவதரித்திட இப்பதி அளவின் மாதவம் முன்பு செய்தவாறு எனத்
திருஞான சம்பந்தப்பெருந்தகை சொல்லியருளிய கருத்து இங்கு
நினைவு கூர்தற்பாலது. பதியிலுள்ளாரது தவம் பதியின் மேல்
ஏற்றப்பெற்றது.
..........................................இதுபாலிசூழ்
நாடு செய்ததவம்! நீடு குன்றைவள நகரி செய்ததவம்!
நிகரிலாப்
பீடு செய்தபகி ரதிகு லத்திலகர் சேக்கிழார்செய்த
பெருந்தவம்! |
என்ற உமாபதி சிவாசாரிய
சுவாமிகள் திருவாக்கும் காண்க.
வளம்பதி
- நாட்டிற் கேற்றபடி பதிதானும் வளங்களையுடையது.
வாய்மை குன்றாமை -
மறையவர் குணங்களில் இது
சிறந்ததாம். வேதத்தில் விதித்த தருமம் சர - சத்யம்வத என்ற
இருதருமங்களில் ஒன்று. பின்னர் இப்பகுதியிலே நம்பிகளது
திருமணம் இறைவனால் தடுக்கப்பெற்ற சரிதத்திலே மறையவர்களின்
குணமேன்மையில் வைத்து இதனைக் கண்டுகொள்க. சரிதப்
பின்னிகழ்ச்சியைக் குறிப்பிக்கவே இந்த அடைமொழியாலே
மறையவர்களைச் சிறப்பித்தனர்.
நீடும்
- என்றும் நிலைத்து வளர்ந்திருப்பதற்கு இடமாகிய.
திருநாவலூர்
- திருமுனைப்பாடி நாட்டின் அரசர்கள்
வாழ்தற்குரிய தலைநகரங்களில் ஒன்று. இத்தல விவரங்கள் (பின்னர்)
வரிசை 224-ம் பாட்டின் கீழ்க் காண்க. 2
|
|
|
|