149.
|
மாதொரு
பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் |
|
|
வேதியர்
குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி
யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார். |
3 |
(இ-ள்.)
மாதொரு........தோன்றி - உமாதேவியாரை
ஒருபாகத்தில் வைத்த சிவபெருமானுக்கு வழிவழியாக
அகம்படித்தொண்டுசெய்யும் சிவமறையோர் மரபிலே தோன்றியவராய்;
மேம்படு.......செய்தார் - மேம்பட்டு விளங்கிய சடையனாருக்குக்
குற்றமற்ற கற்புடைய இல்வாழ்க்கைக்குரிய மனைவியாராகிய இசை
ஞானியார் திருவயிற்றினிடமாக உலகம் தீமை நீங்கவும் உய்தி
பெறவும் திருவவதாரம் செய்தருளினார் (ஓலைகாட்டி ஆண்டவர்).
ஓலை காட்டி யாண்டவர் என்ற எழுவாய் வருவித்துரைக்க.
(வி-ரை.)
மாதொரு.....தலம் - இதுவே ஆதிசைவமரபு.
சிவப்பிராமணர் என்பார் இவர்களே. இவர் இன்றைக்கும்
திருக்கோயிற் பூசையாகிய அகம்படித் திருத்தொண்டு தவிர வேறு
தொழில் செய்யாமை காண்க. இவர்களைப்பற்றிச் சிவமறையோர்
திருக்குலத்தார், அருவிவரை வில்லாளிக்கு அகத்தடிமையா மதனுக்,
கொருவர்தமை நிகரில்லார் என்றும், தங்கோனைத் தவத்தாலே
தத்துவத்தின் வழிபடுநாள் என்றும் புகழ்த்துணை நாயனார்
புராணத்திலேயும், (வரிசை 4127 - 4128)
எப்போது
மினியபிரா னின்னருளா லதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய்
முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர் |
என்றும்,
...........வழிவழியே
திருத்தொண்டின்
விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன........ |
என்றும், முப்போதுந் திருமேனிதீண்டுவார்
புராணத்திலேயும்
கூறியவாற்றால் பிரமதேவர் முகத்திலிருந்து தோன்றிய ஏனை
வேதியர்போலல்லாமல் இவர்கள் சிவபெருமானது
ஐந்துதிருமுகங்களினின்றும் அதிகரித்து வந்தமையும், ஆகமங்களின்
வழியே சிவபெருமானை அருச்சிக்க உள்ள இவர்களதுரிமையும்,
பிறவும் விளங்கும். மகா சைவராகிய ஏனைய வேதியரிடமிருந்து
பிரித்து உணர்தறபொருட்டு ‘வழி வழியடிமை செய்யும் வேதியர்'
என்றார். இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்துவாசர்,
கௌதமர் என்ற ஐவரின் கோத்திரங் கொண்டவர்கள்; இவ்வைவரும்
இப்பேர்கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர். இவர்கள் சிவமரபினர்,
இவர்களுக்கு வேதபாரம்மிய மில்லை என்பாரை நோக்கி
மறுக்கும்வகையில் வேதியர்குலம் என்றார்.
பிரமதேவர் முகத்தினின்று தோன்றிய வேதியர்வேறு;
சிவவேதியர்வேறு. பிரமன் வழித் தோன்றியவரே, தக்கயாகத்தில்
வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள்
வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால்
சபிக்கப்பெற்றும் இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள்.
இவர்களது வரலாறு கந்தபுராணம் முதலியவற்றுட் காண்க. சிவவேதியர்களாகிய இவர்கள் முன்
சொல்லிய எவ்விதச்
சிவாபராதங்களுக்கும் உட்படாதவர்களாய்ச் சிவபெருமானை
எப்போதும் ஆன்மார்த்தம் - பரார்த்தம் என்ற இருநிலையிலும்
வழிபட்டுச் சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள். இவர்கள் தம்
பெருமை தானறியாத் தன்மையர்களாய் மற்ற அவ்வேதியர்களுக்குத்
தாழ்ந்த நிலையில் தம்மை நினைத்தும் ஒழுகியும் வருகின்றார்கள்.
இவர்கள் பெருமைகளைப் பற்றி மேலே குறித்த நாயனார்
புராணங்கள் முதலியவற்றிற் காண்க.
வழி வழி அடிமை
- தாய்மரபு, தந்தைமரபு என்ற இருமரபும்
அடிமைசெய்வோராய் வந்தவர். ஆதலின் வழி என்னாது வழிவழி
என்றார். மழவிடையார்க்கு வழிவழியாளாய் என்ற திருவிசைப்பா
(திருப்பல்லாண்டு) காண்க.
தோன்றி மேம்படு சடையனார்
- தாம் அந்த மரபில்
தோன்றியதினாலே மேம்பாடு அடைந்தவராதலின் தோன்றி என்று
இறந்த காலத்தாலும், நம்பிகள் தமது திருமகனாராய் இனி
அவதரிப்பாராதலின் மேம்படு என்று எதிர்காலத்தாலும் கூறினார்.
மேம்படு என்றதனாலேயே மூன்று காலத்தும் மேம்பாடு அடையும்
என்க. சடையனார் - இது சிவபெருமானுக்கே சிறப்பாய்
உள்ள
திருநாமங்களில் ஒன்று. அதனைத் தமக்குப்பெயராக இடப்பெற்றவர்
நம்பிகளது தந்தையார். கடவுட் பெயர்களையும் பெரியோர்
பெயர்களையும் மக்களுக்கு இடுதல் பண்டை நாள் முதல் நம்
நாட்டுப் பழக்கமாம். இவருடைய பிதாவுக்கு ஆரூரர் என்ற பெயர்
வழங்கியதும், அப்பெயரையே இவர் தமது மைந்தனார்க்கு
வைத்ததும் இக்கருத்தே பற்றியன. ஆரூரன் பேர் முடிவைத்த -
முதலிய தேவாரங்களாலே அறிக. இதுபற்றிப் பின்னரும் காண்க.
சடையான் - சடை- என்பவை பற்றி வரிசை 131-ம்
பாட்டினுரையுட்
காண்க. சடையனார்க்கு மகனாக என்று வருவித்துக் கொள்க.
ஏதமில் கற்பு
-குற்றமற்ற தீங்கில்லாத. இது கற்புக்கு உரிய
இயற்கையடைமொழி. கற்பின் இயல்பைக் குறிப்பதாம். இதனை
வாழ்க்கை என்பதனோடு கூட்டி ஏதமில் வாழ்க்கை
என்றுரைப்பினுமாம். கற்புக்கும் வாழ்க்கைக்கும் வரக்கூடிய
ஏதங்களைத் திருக்குறள் முதலிய அறநூல்களுட் காண்க.
கற்பின் வாழ்க்கை
- இல்வாழ்க்கை - இல்லறம். மனை -
மனைவி - இல்லக்கிழத்தி - வீட்டுக்குரியவள். வீட்டுக்காரி என்பது
உலக வழக்கு.
இசை ஞானியார்
- நம்பிகளது தாயார் பெயர். நம்பிகள்
தமது தேவாரங்கள் பலவற்றிலும் தம் தாய் தந்தையர் பெயர்களைக்
குறித்துள்ளமை காணப்பெறுவதாம். நன்சடையன் இசைஞானி
சிறுவன். இசைஞானி யம்மையார் (திருவாரூர்) கமலாபுரத்திலே
சிவகோதம கோத்திரத்திலே ஞானசிவாசாரியார் குடும்பத்தில்
அவதரித்த மகாளவார் என்பது கல்வெட்டுக்களாற் கிடைக்கும்
செய்தி.1
தீதகன்று உலகம் உய்ய
- தீதகன்று - பாச நீக்கம் பெற்று;
உய்ய - சிவப்பேறு பெற; இவை யிரண்டும் வெவ்வேறு
நிலைகளைக்
குறிக்கும் எனக் காட்ட உலகம் என்பவை இவையிரண்டுக்கும்
இடையில் வைத்தார். இவை யிரண்டுமே சிவஞானபோதம் 10, 11,
12-ம் சூத்திரங்களின் கருத்தாவன. உலகத்தாரைத் தீமைபோக்கி
உய்விப்பதற்கே நம்பிகள் அவதரித்தார் என்பதை முன்னர்க்
கூறினார்.
உலகம்
- உயிர்கள். உய்தல் - நம்பிகள் நடந்துகாட்டிய
சிவ
வழிபாட்டில் நிற்பதாலும், சொல்லிக்காட்டிய திருத்தொண்டத்தொகை
அருண்மொழி பயில்வதாலுமாம்.
அவதாரம் செய்தல்
- பிறரை உய்விக்க வருதல். ஆதலின்
உலகம் உய்ய அவதரித்தார் என்றார். மேற்பாட்டினுரையிற் காண்க.
பிற இடத்தும் இவ்வாறே கொள்க. 3
1. 73 of 95.S.I.I.Vol
& Vol. II P. 153.
்
|
|
|
|