153. தந்தையார் சடைய னார்தந் தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துட் டங்க ளரும்பெரு மரபுக் கேற்ப
வந்ததோர் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி
                      மறையோன் றன்பாற்
செந்திரு வனைய கன்னி மணத்திறஞ் செப்பி
                                விட்டார்.
7

     (இ-ள்.) வெளிப்படை. (ஆரூரருக்கு மணப்பருவம் வரவே)
சடையனார் தமது குலத்துக்கேற்குமாறு புத்தூரிலே சிவமறையோர்
மரபிலே பழங்குடியிலே வந்த சடங்கவி சிவாசாரியாரின் மகளைத்
தம் மகனுக்கு மணம் பேசுதற்கு முதியோரிடம் சொல்லியனுப்பினார்.

     (வி-ரை.) தந்தையார் சடையனார் - தந்தையாராகிய
சடையனார். காதற்றந்தையாம் நரசிங்க முனையரையர் உளராதலின்
தந்தையார் என்றதனோடமையாது சடையனார் என்று
சேர்த்துக்கூறினார். தனித் திருமகன் - ஒப்பற்றவராயும் திருவை
உலகத்திற்குத் தருவாராயும் உள்ள மகன். திரு - திருநின்ற
செம்மைநெறி.

     குலத்துள் தங்கள் அரும்பெருமரபு
- கன்னியை
மணம்பேசுதலிலே குலமும் மரபும் முதலிற் பேசற்பாலன என்பது
முன்னோர் வழக்கமும் அறநூல் விதியும் முறைமையுமாம். பின்வரும்
பாட்டும் காண்க. ஆணும் பெண்ணுமேயன்றி வேறொரு விதியும்
அறியாது இந்நாட் சிலர் கூறுதல் விதிக்கும் மதிக்கும்
மாறாகியதென்க.

“மற்றை மறையோன் றிருமனைவி வாய்ந்த மரபின் வந்துதித்தான்“          - சண்டீசர் - புரா - 11
 
“அரும்பெறன் மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள்“                  - கண் - புரா - 9
 
“புகழனார் தமக்குரிமைப் பொருவில் குலக்குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார்......“

                           - திருநா - புரா - 17
 
“குணம் பேசிக் குலம் பேசி......“ - திருநா - புரா - 24

முதலிய பலவும் காண்க. “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி“
என்ற திருமுருகாற்றுப்படையும் இங்கு உய்த்துணர்தற்பாலது.

     மணத்திறம்
- மணமகளாகப் பெறும் விருப்பம்.
செப்பிவிடுதல் - இது மணத்திற்கு முதற்படியாக நிகழும் செயல்.
இது ஆன்றோர் மரபு. கந்தபுராணத்தில் பார்வதியம்மையை
மணம்பேச ஏழு இருடியர் சென்றது காண்க. இது இந்நாள்
நாகரிகமென்ற பேரால் அருகி வருதல் வருந்தத்தக்கது. இதற்கும்
ஏனைய முன்னை ஒழுக்கங்களுக்கும் மாறாய் மணத்திறத்திலே
இந்நாள் நடக்கும் கேராச்செயல்கள் நாகரிகமென்ற பேர்கொண்ட
அநாகரிகக் கோரச் செயல்களென்பர் அறிவுடையோர்.

     முதியோரிடம்
- என்றது வரும் பாட்டிலிருந்து வருவித்
துரைக்கப்பட்டது. “மேலோரைச் செலவிட்டார்“ (திருநா - புரா - 23)
என்பது காண்க.

     வந்ததொல் சிறப்பில் - என்பதும் பாடம். 7