154. குலமுத லறிவின் மிக்கார் கோத்திர முறையுந்
                               தேர்ந்தார்
 
  நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை
                               யேற்று
மலர்தரு முகத்த னாகி மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி யொத்த பண்பினா லன்பு
                              நேர்ந்தான்.
8

     (இ-ள்.) வெளிப்படை. குலம் - குடி முதலிய அறிவுகளிற்
சிறந்த முதியோர் அவ்வாறே சென்று சடையனார் சொல்லிய
மணத்திறத்தை அறிவிப்ப, அந்நன்மையை ஏற்றுக்கொண்டவராய்ச்
சடங்கவி சிவாசாரியர் முகமலர்ச்சியுடன் மணத்திற்கு
வேண்டுவனவாகிய பல உண்மைகளையும் பேசி ஒப்புமை
பெற்றதனாலே தம் மகனை மணஞ்செய்து தருவதாக அன்புடன்
இசைந்தார்.


     (வி-ரை.)
குலமுதல் அறிவு - குலத்திற் கின்றியமையாத
அறிவு. குலம் முதலியவற்றின் அறிவு என்றுமாம்.

     கோத்திரமுறை - கோத்திரம் - குலத்தின் உட்பிரிவு.
அதன் முறை - மணஞ்செய் கோத்திரமும் கிளைக்கோத்திரமும்
பிரவரமும் அவை அல்லாதவாறும். கோத்திரமும் பிறமுறைகளையும்
என்றும் கூறுவர்.

     நலமிகுமுதியோர்
- இருதிறத்தார்க்கும் நன்மை மிகும்படிச்
செய்வோர். மிகும் - மிகுவிக்கும் எனப் பிறவினைப் பொருளில்
வந்தது. மிக்கோரும் தேர்ந்தோரும் ஆகிய முதியோர் என்க.
இந்நாளிலே கைக்கூலிக்காக ஒருபுடை பேசும் கலியாணத்தரகர்
அந்நாளில் இலர்.

     நன்மை ஏற்றல்
- மனத்தின் செய்கை. மலர்தருமுகம் -
அதுகாரணமாகப் புறத்தில் நிகழும் மெய்ப்பாடு. ஏற்று - (சொல்லின்
நன்மையை) யங்கீகரித்து.

     மணம்புரி செயலின் வாய்மை பல பெயர் - கணம் - நூல்
முதலியவாக விதித்த மணப் பொருத்தங்களும் நிமித்தம் முதலிய
பிறவுமாம்.

     ஒத்த பண்பு - அவை வாய்மை விதிக்கு மாறுபடாது
இணங்கியிருத்தல்.

     அன்புநேர்ந்தான் - அன்புநிகழும்மணச்செயலுக்கு
இசைந்தான் என்றலுமாம்.

     அறிவின்மிக்க - அறிவுமிக்க - என்பனவும் பாடம். 8