155. மற்றவ னிசைந்த வார்த்தை கேட்டவர் வள்ள
                                றன்னைப்
 
  பெற்றவர் தம்பாற் சென்று சொன்னபின் பெருகு
                                  சிந்தை
யுற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை யுவந்து
                                 சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பத் குறித்தநா ளோலை
                                விட்டார்.
9

     (இ-ள்.) வெளிப்படை. இசைந்ததனை அவ்வாறு கேட்ட
முதியோர் ஆரூரரைப் பெற்றோரிடம் சென்று அறிவித்தனர். அவர்
மனமிக மகிழ்ந்து, ஆரூரர் காதற் றந்தையாகிய அரசர் சிறப்புக்
கேற்றபடி திருமணத்தை அறிவிக்குமாறு குறித்து எழுதிய
நாளோலையைப் பெண் வீட்டாருக்கு அனுப்பினார்கள்.

     (வி-ரை.) கேட்டவர் - மணத்திறம் செப்பிப் பெண்கேட்க
வந்தவர். இந்த வார்த்தையை நேரே கேட்டவர் என்றலுமாம்.

     வள்ளல் - நம்பிஆரூரர். தென்றிசை வாழ்ந்திடவும்
தீதகன்றுலகமுய்யுவும் தேவார அருண்மொழிகளை வரையாது
கொடுப்பவர். உலகமுய்யும் வழிகளை அருள்பவர்.

     கொற்றவர் திருவுக்கேற்பக் குறித்த - நாளோலையிற்
குறித்த பொருள்கள் நம்பியாரூரரைப் பெற்ற சடையனாரது மரபுக்
கேற்பனவோ? அன்றிக் காதற்றந்தையாகிய நரசிங்கமுனையரையர்
தகுதிக் கேற்பனவோ என்று ஐயம் நிகழ்த்துவோரை நோக்கி
இவ்வாறு கூறினார்.

     நாளோலை - ஒரு சொல் நீர்மைத்தாய் மணநாளும் ஓரையும்
குறித்தெழுதிய ஓலையைக் குறித்தது. இது மணமகன் வீட்டார்
மணமகள் வீட்டார்க்கும் எழுதுவது. இவற்றின் விரிவைத்
திருஞானசம்பந்த நாயனார் புராணத்துட் காண்க.

     குறித்த - நாள் குறித்து. நாள் ஓலை என்று பிரித்து, ஓலை
குறித்து என்றும் அரசர் திருவுக்கேற்ப நாள் என்றும் கூட்டி உரை கூறுவாருமுளர்.

     குறித்துநாள் - என்பதும் பாடம். 9