159. மாமறை விதிவ ழாமன் மணத்துறைக் கடன்க
                                ளாற்றித்
 
  தூமறை மூதூர்க் கங்குன் மங்கலந் துவன்றி
                                யார்ப்பத்
தேமரு தொடையன் மார்பன் றிருமணக் கோலங்
                                 காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவ னுதயஞ்
                               செய்தான்.
13

     (இ-ள்.) மாமறை......ஆர்ப்ப - (காப்புச் சேர்த்தபின்)
திருநாவலூரிலே அன்றிரவு மறை நூல் விதிப்படி செய்யவேண்டிய
ஏனைச் சடங்குகள் யாவும் தவறாது செய்து கொண்டு
மங்கலவாத்தியங்கள் கலந்து சத்தித்துக்கொண்டுமிருக்க;
தேமரு......செய்தான் - தேன் பொருந்திய மலர்மாலை யணிந்த
நம்பிஆரூரது திருமணக்கோலத்தைக்காணும் ஆசையுடையவன்போல
ஞாயிறு உதயமாயினன்.

     (வி-ரை.) இரவு முழுதும் மணச்சடங்குகள் நிகழ, இரவி
உதயமாயினன்.

     கங்குல்
- மணநாளுக்கு முன் நாள் இரவு - எனவே முன்
பாட்டிற் சொன்ன காப்புச்சேர்த்தல் பகலில் நிகழ்ந்தது என்பது
பெறப்பட்டது.

     காமுறு மனத்தான்போல - இதனைத் தற்குறிப்பேற்ற அணி
என்பர். இது அணியே என்று குறிக்கப் போல என்றார்.
இத்திருமணம் முற்றுப்பெறாது இறைவனாற் றடுக்கப் பெறுதல்
பின்னர்ச் சரிதத்திற் காண்போம் ஆதலின் திருமணங்காண என்னாது
திருமணக்கோலங்காண என்றார்.

     ஞாயிறு எழுதல் - ஞாயிறு படுதல்
- முதலியவற்றை
வருணித்துச் சொல்லுதல் பெருங்காவிய இலக்கணங்களில் ஒன்று.
ஆதலின் இப்புராணமாகிய பெருங்காவியத் தலைவராகிய நம்பி
ஆரூரர் திருமணத்தை ஒட்டி இங்குச் சூரிய உதயம் வருணிக்கப்
பெற்றதாம். அடியார்களின் களிப்பிலே தாம் களித்தலும் பிறவும்
காவிய ஆசிரியரது மனக்குறிப்பாம். அதனை இங்கு இரவிமேல்
ஏற்றிக் கூறுதலின் இது உண்மையிலே தற்குறிப்பேற்றமாயிற்று.
காமம் + உறு காமுறு என மருவிற்று. காமம் இங்கு ஆசை குறித்தது.

“உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை யிளைப்பஞ்சி னான்போலக்
"கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்...“
                  -திருஞான - புரா - 192

என்று ஞாயிறுபடுதலைக் குறித்தது காண்க.

     மறைமூதூர் - மறை முழக்கம் நீங்காத பழவூர். துவன்றி
ஆர்ப்ப - விகற்பமின்றி ஒன்றுபோலப் பொருந்தி நிறைந்து சத்திக்க.

     தேமருதொடையல் - புதிய நாண்மலர்களாகிய மாலை.
மார்பர் - நம்பிஆரூரர். முன் பாட்டில் தோளினார் என்றது காண்க.
ஒவ்வோர் சடங்கிலும் புதிய மாலைகளை யணிதல் வழக்கு. 13