16. நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
 
  நாடு மைம்பெரும் பூதமு நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி யாடும் பரப்பது பாங்கெலாம்.
6

     (இ-ள்.) நீடுதேவர் நிலைகளும - தேவர்களின் நீடிய
பதங்களையும்;வேண்டிடின் - விரும்பினால்; நாடும் ஐம்பெரும்
பூதமும் - உலக காரணமாக நாடும் ஐம்பெரும் பூதங்களையும்;
நாட்டுவ கோடி கோடி குறள்சிறு பூதங்கள் - தாம் எண்ணியபடி
நிலைநாட்ட வல்லனவாகிய கோடி கோடியாகிய அனேகம் சிறு
குறள் வடிவுள்ள சிவபூதகணங்கள் ; பாடி ஆடும் பரப்பது பாங்கு
எல்லாம் - பக்கங்களில் எல்லாம் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்
உள்ள பரந்த இடங்களையுடையது அத்திருமலை.

     (வி-ரை.) நீடு தேவர் நிலை - தேவர்களது நீடுநிலை என
மாற்றிப் பொருள் உரைக்க.

     வேண்டிடின் - நடுநிலைத் தீவகமாய், வேண்டிடின் நிலைகளும்,
வேண்டிடின் பூதங்களும், நாட்டுவ என முன்னும் பின்னுங் கூட்டி முடிக்க.

     நாட்டுவ - நாட்டுவன; வினைப்பெயர். நாட்டுவனவாகிய -
நாட்டும் வலியுடைய பூதங்கள் என்க. மற்றவர்களைப் பார்க்க
தேவர்களது நிலைகள் நீடுவன ஆயினும் சிவகணங்களின்
வலிமையையும் கால அளவையும் நோக்க அவை குறைந்தனவாகி
அழியுந் தன்மையுடையன என்பார் நீடு நிலைகளும் நாட்டுவ என்று
சிறப்பும்மை தந்து கூறினார். “கேடிலாப் பேய்க்கணஞ்சூழ
என்பது திருஞான சம்பந்த நாயனார் தேவாரம்.(குறிஞ்சி
அச்சிறுபாக்கம் - 3)
.

     கோடிகோடி குறட்சிறு பூதங்கள - இவை சிவகணங்களாகிய
பூதங்கள். இவற்றின் எண்ணும், உருவும், வலியும், ஆனந்தமும் கூறியவாறு. அப்பர் சுவாமிகளுக்குத் திருத்தோளில் இடபமும்
சூலமும் பொறித்ததும், திருஞான சம்பந்த நாயனாருக்கு ஆயிரம்
பொன் அடங்கிய உலவாக்கிழி தந்ததும், முதலியவற்றைத்
திருவருளாணையின் வழிச் செய்தன இந்தப்பூதங்களேயாம். “ஆளும்
பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன்றனை” (தேவாரம்) என்பது
முதலிய திருவாக்குக்கள் காண்க. சிவபெருமான் பூதநாயகனாதலாலும்,
அவனது கணங்களாகிய பூதங்கள் அவனது திருமலையைச் சுற்றி
ஆனந்தித்திருப்பன ஆதலாலும் இவ்வாறு கூறினார். பார்வை
யளவிலே குறட்சிறு பூதங்களாயினும், ஆணை வலியினாலே பெரியன
என்பார் குறட்சிறு பூதங்கள் பெரும் பூதமும் நாட்டுவ என்று இலகு
தோன்றக் கூறினார். வேண்டிடின் நாட்டுவ என்று சொல்லவே,
ஆக்கலும், அழித்தலும் செய்யவல்லன என்பது பெற்றாம். ஐம்பூதச்
சேர்க்கையாலாகிய, இவ்வுலகத்தையும் தேவர் நிலைகளாகிய பிரம
உலகம், விட்டுணு உலகம், முதலியவற்றையும் நாட்டும்
வலிமையுடையன சிவகணங்களாகிய இப்பூதங்கள் என்றபடி.
ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆக்கலும், அவற்றின் ஒவ்வொன்றன்
மிகுதிப்பாட்டால் அழித்தலும், படும் இவ்வுலகம். அதனால்
உலகத்தார் இவற்றையே பெரிதென மயங்கிப் பயந்து இவற்றிற்குப்
பூசை முதலியனவும் செய்வர். ஆயின் அப்பூதங்களையே ஆக்கியும்
அழித்தும் நாட்டவல்லன இந்தக் குறட் பூதங்களாம் என்று
கூறினமையால் சிவபூதங்களின் சிறப்பும் இவற்றினாற் சேவிக்கப்பெற்ற
இறைவனது பெருமையும் அவனது மலையின் சிறப்பும்
உணர்த்தியவாறு.


     இப்புராணத்துப் பேசப்பெறும் அடியார்களும் சிவபெருமானது
அருள்வழி நின்று திருக்கயிலையிற் கணங்களாகவும்
கணநாயகர்களாகவும் பெற்றார்கள். கணநாதனார்.

“தூநறுங் கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால்
                                    வரையெய்தி
மானநற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி
                                  னிலைபெற்றார்”

                    - சேரமான் பெருமாள் நாயனார்,
(6)

“...............நன்மைசேர் கணநாதரா யவர்செயு நயப்புறு தொழில் பூண்டார்.....”         -வெள்ளானை - 49
                                 
என்று வருவனவாதிய அடியார் பேறுகளைக் காண்க.

     பாடி ஆடும் - சிவனை அனுபவித்திருக்கும் சிவானந்த
மேலீட்டின் மெய்ப்பாடுகள். “ஆடுவதும் பாடுவது மானந்த
மாகநினைத், தேடுவது நின்னன்பர் செய்கை பராபரமே” (தாயுமா).

     குறட் பூதங்களின் வலிமை கந்தபுராணம - மகாசாத்தாப் படலம் -மகா காளர் வருகைப் படலம் முதலிய சரிதங்களிற் காண்க.
இவை மண்ணையும் விண்ணையும் நாட்ட வல்லன என்று கூறும்
இன்னும் மற்ற மாபுராணங்கள் இதிகாசங்களிலும் காண்க.

     இத்திருமலைப் பாங்குகள் எல்லாம் வேண்டிடின் தேவர்
நிலைகளும் ஐம்பூதமும் நாட்டுவனவாகிய சிறு பூதங்கள் பாடியாடும் பரப்பினையுடையது அத்திருமலை என்க. குறள் - சிற்றுருவம்.    6