161. வாசநெய் யூட்டி மிக்க மலர்விரை யடுத்த தூநீர்ப்
 
  பாசனத் தமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொற்
                                  றிண்கால
ஆசனத் தணிநீ ராட்டி யரிசனஞ் சாத்தி யன்பால்
ஈசனுக் கினியார் மேனி யெழில்பெற விளக்கி
                                  னார்கள்.
15

     (இ-ள்.) வாசநெய்......பாங்கர் - வாசனையுடைய நெய்ப்புகை
யூட்டிய பாத்திரத்தில் உரிய மலர்களையும் வாசனைப்
பண்டங்களையும் பெய்த தூயநீரை நிரப்பி, அதன் பக்கத்திலே;
பருமணி.......ஆசனத்து - இடப்பெற்ற பொன் அரியாசனத்திலே
(எழுந்தருளுவித்து); அணி.......விளக்கினார்கள் - அன்பினாலே
இறைவனுக்கு இனியவராகிய நம்பியாரூரரை நீராட்டிச் சுண்ணம்
சாத்தி அவரது திருமேனி மேலும் அழகு பொருந்தும்படியாக
விளக்கினார்கள்.

     (வி-ரை.) வாசநெய் ஊட்டி - பாத்திரம்
சுத்தியாக்கற்பொருட்டு நெய்ப்புகை ஊட்டுதல் மரபு. இதற்கு,
வாசனைத் தைலத்தை ஆட்டி என்றும் பொருள் உரைப்பார்

     அரிசனம் - (கத்தூரி) மஞ்சள் கலந்த வாசனைத்தூள் -
திருப்பொற் சுண்ணம் போகந்தருதல் இதன்செயல் என்பர்.

     ஆசனத்து அணிநீர் ஆட்டி - ஆசனத்தில் அமர்த்தி
நீராட்டுதல் பெரியோர்களை மஞ்சனமாட்டும் முறை.

     ஈசனுக்கு இனியார் - சிவபெருமானுக்கு இனிய தோழராவார்.
எல்லாவுயிர்களும் ஈசனுக்கு இனிமையுடையனவாயினும் அன்பர்கள்
மிக இனியர் ஆதலின் அன்பால்இனியான் என்றார்.
அன்பால்விளக்கினார்கள் - என்று கூட்டலுமாம்.

     மலர் விரை - மலர்களும் விரையும் உம்மைத் தொகை. விரை
பொருந்திய மலர் என்றும், மலரின் விரை என்றுமுரைப்பாருமுளர்.
திருமஞ்சன நீரிலே வில்வம் பாதிரிப்பூ முதலிய பூக்களையும்,
விலாமிச்சை ஏலம் பசுங்கர்ப்பூரம் முதலிய விரைகளையும் இடுதல்
மரபாம். இதன் இலக்கணத்தை,

“பரிதிகுணக் கெழுமுன்னர்ப் பன்னிரண்டு புதுச்சாலின்
மருவுபுதுப் புனல்துகிலான் வடித்தெடுத்து மணல்பரப்பி
இருவிநிறை தொறும்ஏல முதலான திரவியங்கள்
பெருகுவிரை மலரோடு பெய்துமனு வாலமைத்து......“
                         - மருதவரைப்படலம் - 20

என்ற பேரூர்ப்புராணத்தா லறிக.

     தூநீர்ப்பாசனம - முதலாக விரித்துக் கூறியது இவ்வாறு வரும்
இலக்கணங்களை யுடையதெனக் குறித்தபடியாம் குளிக்கும் நீரைக்
கங்கை, யமுனை, சிவபாதநீர், சண்முகபாதநீர் முதலியனவாகத்
தியானித்தல் மரபாம். ஆதலின் தூநீர் என்றார்.

     “கங்கை யாடிலென்........எங்கு மீசனெனாதவர்க் கில்லையே“
- தேவாரம்.  15