162. அகில்விரைத் தூப மேய்ந்த வணிகொள்பட் டாடை
                                    சாத்தி
 
 

முகினுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த துகில்கொடு குஞ்சியீரம் புலர்த்தித்தன் தூய
                                  செங்கை
யுகிர்நுதி முறையிற் போக்கி யொளிர்நறுஞ் சிகழி
                                யார்த்தான்.

16

     (இ-ள்.) அகில்....சாத்தி (நீராட்டிய பின்னர்) அகிற்புகை
கமழும் அழகிய பட்டாடை சாத்தி; முகில்நுழை......புலர்த்தி -
கைவல்லானொருவன் முன்கையிற் கொண்ட வெள்ளத் துகிலை
நம்பிகளது நீண்ட கரிய குடுமியினுள்ளே, முகிலுக்குள் நுழையும்
வெண்மதிபோலச் செலுத்தி ஈரம் போக்கி; தன்தூய......போக்கி -
தனது கையின் நக நுனியினாலே குஞ்சியின் சிக்கறுத்து;
ஒளிர்.......ஆர்த்தான் - விளங்கிய சிகழியைக் கட்டி முடித்தான்,

     (வி-ரை.) அகில் - தூபம் - ஆடைகளுக்குப் புகையிடுதல்
வாசனைப் பொருட்டும், அவற்றைக் காத்தற் பொருட்டுமாம்.

     முகில்நுழை மதியம் போல - கரிய நீண்ட குடுமியின்
இடையே முன்கையிற் சுற்றிய வெண்டுகில் கொண்டு ஈரம்புலர்த்துதல்
கரியமுகிலினிடையே நுழையும் வெண்மதி போன்றிருந்தது என்றார்.
குடுமி கத்தரித்து ஆரவாரிக்கும் இக்காலத்து மணமக்களுக்கு இது
விளங்காத உவமானமாம். அவர் இப்பாட்டின் சுவை அறிந்து
அனுபவித்த லியலாதாகும்.

     கைவலான - இவ்வாறு பணிவிடை செய்வதிற் கைதேர்ந்தவன்.
மணமகனின் தோழன். குஞ்சி ஈரம் புலர்த்தல், சிக்கறுத்தல்,
சிகழிசேர்த்து முடித்துக் கட்டுதல் முதலிய பணிகள் செய்வதிற்
கைத்தேர்ச்சி வேண்டப் பெறுமென்க. எனவே, நம்பி ஆரூரர்க்கு
நீண்ட கரிய குடுமி வளர்ந்து விளக்கமுற்றிருந்தது என்பதாம்.

     உகிர்துதி - நகத்தின் நுனி. விரலைவிட்டு மயிர்ச்சிக்கறுத்து.
சிகழி - முடிப்பு. ஆர்த்தான் - செய்தான். முடித்துக காட்டினான். 16