164. தூமலர்ப் பிணையன் மாலை துணரிணர்க் கண்ணி
                                   கோதை
தாமமென் றினைய வேறு தகுதியா லமையச் சாத்தி
 
  மாமணி யணிந்த தூய வளரொளி யிருள்கால் சீக்கு
நாமநீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலங்
                               கொண்டான்.
18

     (இ-ள்.) தூமலர்ப்பிணையல்......சாத்தி - தூய மலர்களால்
ஆகிய பிணையல் - மாலை - கண்ணி - கோதை - தாமம் என்ற
பலவகை மலர்மாலைகளையும் சாத்த அணிந்து; மாமணி.........சாத்தி
- ஒளி மிகுந்த மணிகளிழைத்த தூய பொன் மணி மாலைகளையும்
சாத்த அணிந்து; நன்.......கொண்டான் - நல்ல திருமணக் கோலத்தை
மேற்கொண்டனர்.

     (வி-ரை.) பிணையல், மாலை - முதலியன தொடுக்கும்வகை.
வடிவு - செறிவு - அணியும் இடம் - முதலியவற்றின்
வேறுபாடுகளினால் பெயரால் வழங்கும் பல வகைப்பட்ட
மலர்மாலைகள். இவற்றின் விரிவை முருகநாயனார் புராணத்துட்
காண்க.

     இருள் கால் சீக்கும் - இருளை முழுதும்போக்குகின்ற -
அதாவது ஒளிவீசுகின்ற.

     நாமம்நீள - நீள் நாமம் என மாற்றிக் கூட்டுக. பெரும்பேர்
படைத்த. நாமம் - புகழ். “பேராற் பெரியோனே“ என்ற பேரூர்த்
திருப்புகழ் காண்க. கோதை தாமம் - (வரிசை 158), மாலையுந்
தாரும் (வரிசை 160) என முன்னர்ச் சுட்டிக் கூட்டிய இருவகை
மாலைகளையும் இங்கு விளங்க வைத்து விரிவாய்க் கூறினார்.
மணவாளக் கோலமாதலின் பலவகையும் அணிதல் இயல்பு.
அன்றியும் இது நம்பிகளை இறைவனுக்கு அடிமையாக்கும் நித்திய
மங்கலக்கோலமாய்ப் பின்னர் நிகழ்வதாலும் இவ்வாறு சிறப்பித்துக்
கூறினார்.

     நன்மணக்கோலம - இந்தக் கோலங்கொண்ட மணம் நிகழாது
விடினும் அதனைவிட நித்திய மங்கலமாகிய பெருமணத்தை -
நித்திய நாயகனைக் கொள்ளும் அடிமைத்திறத்தை - விளைப்பதால்
இதனை நன்மணக் கோலம் என்றார். 18