166. இயம்பல துவைப்ப வெங்கு மேத்தொலி யெடுப்ப
                                    மாதர்
நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை யொலியி
                                  னோங்க
 
  வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க் கின்பஞ்
                                  செய்தே
யுயர்ந்தவா கனயா னங்கண் மிசைக்கொண்டா
                            ருழைய ரானார்.
20

     (இ-ள்.) இயம்பல.......விரும்ப - பலவகை வாத்தியங்களும்
முழங்கவும், எங்கும் சிறப்புச் சொல்லும் (சத்தம்) ஒலி பெருகவும்,
மங்கலப் பெண்கள் விருப்பத்துடன் பல்லாண்டு வாழ்த்தவும்,
வேதவொலிகள் மேலெழுந்து ஓங்கவும், உலகத்தார் வியப்பும்
விருப்பமும் கொள்ளவும்; வந்து.......ஆனார - மண எழுச்சி காண
வந்து கூடியவர் யாவர்க்கும் மகிழ்ச்சி செய்து சுற்றத்தார்கள்
அவரவர் தத்தமக் கேற்ற உயர்ந்த பல்லக்கு முதலிய
வாகனங்களின்மீது ஏறிக்கொண்டார்கள்.

     (வி-ரை.) துவைப்ப - எடுப்ப - போற்ற ஓங்க - விரும்ப
- இன்பஞ் செய்து - உழையரானார் - மிசைக்கொண்டார் - என்று
முடிக்க.

     துவைப்ப - இயங்களை முழக்க. எடுப்ப - பின்னர் மாதர்
போற்ற என்பதனால் இவர்கள் பலவகை ஏத்துச்சொல்வோர்; மாகதர்
- வந்தியர் முதலியோர். நம்பிஆரூரர் மன்னவர்
திருவுமுடையாராதலின் இவர்களும் கூடினர் என்க.

     ஏத்தொலி - ஏத்துகின்றதால் எழும் ஒலி. புகழ்களைச்
சொல்லும் மொழிகள் ஏத்து - எனப் பெறுவன. பல்லாண்டு -
மங்கல மாதர்கள் போற்றும் மங்கல வாழ்த்து.

     நான் மறை ஒலியின் ஓங்க - ஒலியே உருவமாய் உள்ள
வேதப்பகுதிகளை உரிய உயர்ந்த சுரங்களோடு மறையவர் சொல்ல.
இவை மணம் முதலிய சுபங்களிற் சொல்லும் வேதப்பகுதிகள்.

     வாகன யானங்கள - குதிரை முதலிய வாகனங்களும்
சிவிகைகளும் என்க. சிவிகைகளாகிய வாகனங்கள் என்றலுமாம்.

     உழையர் - பக்கத்தே சூழ்ந்து வரவேண்டியவராகிய
சுற்றத்தார்களும் பரிசனமும். உடன் இருக்க வேண்டியவராதலின்
உழையர் என்றார். சுற்றியிருத்தலின் சுற்றம் என்பது பெயராம்.
“சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல்“ என்பது குறள்.

     இன்பம் செய்தே.....மிசைக்கொண்டார் - என்று கூட்டுக.
வந்தவர்களுக்கு இன்பமாகிய பாராட்டுக்களைச் செய்தபின்
யானங்களில் ஏறினர்.

     இன்பம் - இனிய மனத்தோடு, சொல்லும் உபசரிப்புச்
சொற்களும், செய்யும் செயல்களுமாம். செயல் - தாம்பூலம் முதலிய
வழங்கி உபசரித்தல். 20