17. நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
 
  மேய கால மலாமையின் மீண்டவன்
றூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய வன்னமுங் காணா தயர்க்குமால்.
7

     (இ-ள்.) நாயகன்...........மீண்டு - இறைவனது திருவடிகளைச் சேவிக்கச் சென்ற பிரமதேவர் அப்போது அதற்கு உரிய காலமல்லாத
காரணத்தால் திரும்பி வந்து; அவன்.....அயர்க்கும ஆல் -
அவ்விறைவனது தூய பெரிய கயிலை மலையினது வெள்ளிய
பேரொளியிலே மறைந்து வேறு காணப்படாத தன் ஊர்தியாகிய
அன்னப்பறவையை வேறு பிரித்துக் காண முடியாமல் வருந்துவார்.

     (வி-ரை.) நாயகன் - தலைவன். நடத்துபவன்; இங்கு
எல்லார்க்கும் தலைவன் இயங்குபவன் ஆகிய சிவபெருமானை
உணர்த்திற்று. கழல் சேவிக்க மேய நான்முகன - என மாற்றுக.

     காலம் அலாமை - சேவித்தலுக்கு உரிய காலமல்லாததால்.
இறைவனைச் சேவித்தற்கு அடியவர்களல்லாதார்க்கு ஒவ்வொரு
காலம் வரையறுக்கப் பெற்றுள்ளது. அடியவர்கள் எப்போதும்
பணிசெய்ய உரியவர்கள். மேய் என்பதனைக் காலம் என்பதுடன்
சேர்த்து உரைப்பாருமுண்டு. அப்பொருளில் உட்புகுந்தவனாகிய
என்று வருவித்துக்கொள்க. மீண்டவன் - என ஒரு சொல்லாக்கி
மீண்டவனாகி அயர்க்கும் என்று கூட்டி உரைப்பாருமுளர்.

     அன்னமுங்காணாது - நாயகனைக் காணப் பெறாமையுடன் அன்னமும் காணப்பெறாது என உம்மை இறந்தது தழுவிய எச்ச
உம்மை.

     தூயமால்வரைச்சோதி - தூய்மை வெண்மையின் குறிப்பு.
அது முன்னரும் வெண்ணீறு புனைந்தன (11) என்றதனாலும்
காணப்படும்.மூழ்கி ஒன்றாய - மலையின் வெள்ளிய ஒளியினுட்
பொருந்தியதால் தனித்து வேறாகக் காணமுடியாதிருத்தல். பொருள்
இரண்டாயினும் ஒரு தன்மைப்படுதலே ஒன்றாதல் எனப்பட்டது. கண்
ஒளியும் கதிர் ஒளியும்போல் ஒன்றித்துக் கலத்தல். இதனையே
இரண்டற்றதாகிய அத்துவிதக் கலப்பு என்பர் பெரியோர்.
ஆன்மாக்களைத் தனது அருட்சோதியிலே இரண்டறக் கலக்கும்படி
செய்வான் இறைவன்; அவனது திருமலையும் அத்தன்மை பெற்றது
என்ற குறிப்பும் தோன்றுதல் காண்க.

     மால்வரை - பெரியமலை. மால் (விட்டுணு) போன்ற மலை
என்றும். ஆம். “கடல் கடைந்திடச் சென்றிடும் வெள்ளைமால்
கடுப்ப” என்றபடி இப்பொருளில் இது உள்பொருள் உவமமாம்.
மாலே ஆகிய மலை என்று முரைப்பர். திருமால் சிவபெருமானை
இடபமாகத் தாங்கிநின்றமை புராணத்துட்கேட்கின்றோம்.

“தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ”
                              - திருவாசகம்

“அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாமென                                 வணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடையெதிர் நிற்ப”
         - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 378

என்று கூறுதல் காண்க.

     சோதியின் மூழ்கி ஒன்றாய - “..........கனகமலையருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே”
என்பது பொன் வண்ணத்தந்தாதி. பொன்மலையைச் சார்ந்த காகமும்
பொன்னிறமாம் என்பது பழமொழி. காக்கையின் கருமையாகிய
வேற்று நிறமும் மாற்றப்பெற்றுப் பொன்வண்ணமாகும் என்றால்,
வெள்ளிய தூய ஒளியில் அவ்வெள்ளை நிறமேயாகிய அன்னம்
மூழ்கி வேறாகப் புலப்படாமை பொருந்துவதாம் என்க.     7