172. ஆண்டகை யருளி னோக்கின் வெள்ளத்து
                      ளலைந்தோ மென்பார்
 
  தாண்டிய பரியு நம்பாற் றகுதியி னடந்த
                               தென்பார்
பூண்டயங் கிவனே காணும் புண்ணிய மூர்த்தி
                               யென்பார்
ஈண்டிய மடவார் கூட்ட மின்னன விசைப்பச்
                               சென்றார்.


26

     (இ-ள்.) வெளிப்படை. ஆண்தகையாகிய இவரது அருள்
நோக்கப் பெருக்கில் அகப்பட்டு மீளும் வகை யறியாது என்றார் சிலர்;
இவர் ஏறிவரும் குதிரையும் தகுதிபெற நம்மிடம் போந்தது என்றார்
சிலர்; அணிகள் பூண்ட இவரே நாம் கண்டு வாழும் புண்ணிய மூர்த்தி
என்றார் சிலர்; அங்குக் கூடிய பலப்பல மடவாரும் இவ்வாறு பாராட்டிப்
பேச நம்பியாரூரர் சென்றனர்.

     (வி-ரை.) ஆண்டகை - ஆண்மக்களிலேமிக்க பெருந்தகை.
அருளின் நோக்கின் வெள்ளம்
- பார்வையாகிய அருள்வெள்ளம்.
தம்பிரான் தோழராதலின் அருள் என்றார். அலைதல் - கரை காணாது
திளைத்தல். அருள் இல் நோக்கம் - அருளில்லாத நோக்கம் என்று
முரைப்பர், அருளுடன்கூடிய நோக்கமாயின்
அலைந்தோமென்னாராதலின்.

     தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் அடைந்தது - பிற
இடங்களிலெல்லாம் தாண்டிச் செல்லும் தன்மையுடைய அவரது
குதிரையும் நமது தகுதி நோக்கி அவ்வாறு தாண்டிச் செல்லாமல்
நமக்கு இவரது காட்சி தரும் பொருட்டு நடந்து வந்தது என்பார்
தாண்டிய பரியும் நடந்தது என்றார்.

     தகுதியில்
- அருள் பெறுவார் தகுதிக் கேற்றபடி
என்றுரைத்தலுமாம். நமது மென்மை, விருப்பம் முதலிய தகுதிநோக்கி.
“வேண்டுநடை நடக்கும் வெள்ளே றேறி“ என்ற தேவாரமும் காண்க.
அருளின் ஆண்டகையைப் பரித்ததாதலின் அதன் தகுதிக்கேற்ப
என்றுமாம்.

     பூண் தயங்கு இவன் - அணிகள் கிடந்தசையும் மேனியுடைய
இவர். இவரது இயற்கை யழகு பூண்களுக்கு இல்லாமையால் அவை
தயங்குதற்கு இடமாகிய மேனியுடையார் என்றதும் குறிப்பு.

     காணும் புண்ணிய மூர்த்தி - காணத்தகுந்த புண்ணிய
சொரூபர். புண்ணியமே உருவானவர் சிவபெருமான்; ஆனால் அவர்
காணப்பெறாதவர்; இவரோ அவ்வாறன்றிக் காணப்பெறுவர்
என்றுரைத்தலுமாம்.

     மேற்பாட்டிலே மணங் கண்டு வாழ்ந்தோம் என்ற பெண்கள் தாம்
கண்டது போலவே அவரும் யாவரையும் அருளுடன் கண்டனராதலின்
அக்காட்சியில் கரை காணாது அலைந்தனர்; அவ்வாறு அலைவாரிடம்
பரியும் நடந்து சேர்ந்தது; சேரவே அவரது காட்சியை நேரே கண்டு
இவனே காணும் புண்ணியமூர்த்தி என்றனர் - என இக்கருத்துக்களை
ஒன்றுபடுத்தி உரைத்துக் கொள்க.

     ஈண்டிய - மணங் காணத் திரண்டு கூடிய. இன்னன -
இவற்றையும் மற்றும் இவ்வாறான பலவற்றையும். இசைப்பச் சென்றார்
- இசைத்துக்கொண்டிருக்கத் தாம் சென்றனர்.

“பெருகொளி முத்தின் பைம்பொற் சிவிகைமேற் பிள்ளையார்தாம்
வருமழ கென்னே என்பார்......“
    - திருஞான - புரா - 803

என்று முதலாக வரும் கருத்துக்களை இங்கு வைத்து நோக்குக.

     தாண்டியமாவும் - தகுதியினடைந்தது - என்பனவும் பாடங்கள். 26