173.
|
வருமணக்
கோலத் தெங்கள் வள்ளலார்
தெள்ளும்
வாசத் |
|
|
திருமணப்
பந்தர் முன்பு சென்றுவெண் சங்க
மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப் பரிமிசை யிழிந்து
பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு நிகழ்ந்தது மொழிவே
னுய்ந்தேன். |
27 |
(இ-ள்.)
வரும்........வள்ளலார் - இவ்வாறு
மணக்கோலத்துடன் வரும் எமது வள்ளலாகிய நம்பியாரூரர்;
தெள்ளும்......சென்று - மிகவும் வாசனை வீசும் மணப்பந்தரின் முன்
சென்று; வெண்.......இழிந்து எங்கும் வெண்சங்கங்கள் மேகம் போல
முழங்கக் குதிரையினின்றும் இறங்கி; பேணும்........உய்ந்தேன் -
உட்புகுந்து பேணியதாகிய அந்த ஒரு மணத்திலே நிகழ்ந்த
செய்தியை இனி எடுத்துச் சொல்வேனாகி அதனால் நான்
உய்தியடைந்தேன்.
(வி-ரை.)
வரும் மணக்கோலம் - மேற்சொல்லியவாறு
கண்டோர் மனங்கவர வருகின்ற மணக்கோலம். எங்கள் வள்ளலார்
- வரிசை 155 பாட்டின்கீழ்க் காண்க. வாசத் திருமணப் பந்தர் -
அலங்கரித்த பூமாலைகளின் வாசனை பொருந்திய பந்தர். திரு
வாசம் செய்யும் மணப்பந்தர் என்றலுமாம் பின்னர்த் தேவதேவன்
எழுந்தருளும் பந்தராதலின்.
வெண்சங்கம் ஆர்ப்ப
- நித்திய பூசையிலும், மணமுதலிய
பெருவிழாக்களிலும், திருவிழாக்களிலும் மங்கல வோசைகளுடன்
வெண்சங்க மூதுதல் மரபு.
நிலவெண்
சங்கும் பறையு மார்ப்ப...
-
திருநா - தேவாரம் - குறிஞ்சி -ஆரூரர் - 5 |
...விருப்போடு
வெண்சங்க மூதா வூரும்....
-
தனித்திருத்தாண்டகம் - 5 |
|
...மொய்குழலார்
தம்மை - நடுச்சங்க
நல்விலங்கு பூட்டும்... -
பட்டினத்தடிகள் |
முதலிய திருவாக்குக்கள்
காண்க.
பெருமழைக் குலத்தின்
ஆர்ப்ப - பெரும்பெயல் மேகத்தின்
ஓசைபோல முழங்க. மழைக் குலம் - மேகக் கூட்டம்.
அதன்
ஓசைக்கு ஆகுபெயர்.
பரிமிசை இறங்கி -
குதிரையின் மேலிருந்து இறங்கி.
பேணும் ஒரு மணத்திறம் - பேணியிருந்ததாகிய அந்த ஒப்பற்ற
மணத்திலே பரியினின்று இழிந்து நம்பிகள் பந்தரில் சென்று
அமர்ந்தனர்; மணவினை தொடங்க அமர்ந்தனர்; அவ்வாறு அமைந்த
மணத்திறத்திலே - என்று இடையின் நிகழ்ச்சி வினை முற்றுக்கள்
தொக்கு நின்றன. இங்குத் தொடங்கும் மணமாகிய வினை மேலே
சரித நிகழ்ச்சியிலே முற்றுப்பெறாது தொகுவதாகலின் இப்பாட்டிலும்
வினை முற்றுக்கள் வெளிப்படாது தொக்கு நின்று பேணும், என
எச்சமாய் நின்ற அழகு காணத்தக்கது.
மொழிவேன் - உய்ந்தேன்
- இனி மொழிவேன்; ஆதலின்
(இப்போதே) உய்தி பெற்றேன். மொழிவது எதிர்காலமாயினும்
அதனாலே தாம்பெறும் பேறு உறுதியாய் விரைவின் வருவதாதலின்
உய்ந்தேன் என இறந்த காலத்தாற் கூறினார்.
வாராக்
காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் என்மனார் புலவர். |
என்பது இலக்கணம். 27
|
|
|
|