174.
|
ஆலுமறை
சூழ்கயிலை யின்கணருள் செய்த |
|
|
சாலுமொழி
யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற வகழ்ந்து
மாலுமிரு வர்க்குமரி யாரொருவர் வந்தார். |
28 |
(இ-ள்.)
ஆலும்.......மொழியால் - சத்திக்கின்ற வேதங்களாற்
சூழப்பெற்ற கயிலைத் திருமலையிலே அருட்கண்ணுடைமையால்
அருளிச்செய்த சால்புடைய அருண்மொழியின்படியே;
வழி.........கொள்வான் - தடுத்தாட்கொண்டு வழிப்படுத்தும் பொருட்டு;
மேலுற.......வந்தார் - மேலே எழுந்து பறந்தும் கீழே அகழ்ந்து
போயும் மயங்கிய பிரம விட்டுணுக்களுக்கு அரியவராகிய ஒருவராம்
இறைவர் வந்தார்.
(வி-ரை.)
ஆலும் - சத்திக்கின்ற . நாதவடிவாகிய. மறைசூழ்
- திருக்கயிலையைத், துதிக்கின்ற வகையாலே நாதவடிவாய் மறைகள்
சூழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதாம். நாதத்தின்மீது சிவன்
விளங்குவன் என்பது சாத்திரம்.
அருள் செய்த சாலும்மொழி - ஆலாலசுந்தரர்க்குக்
கொடுத்த திருவாக்கு - திருமலைச் சிறப்பு - 27, 28, 29 பாட்டுக்கள்
காண்க.
வழிதடுத்து அடிமை கொள்வான் - தடுத்து வழிஅடிமை -
என மாற்றுக. ஆன்மா வழுவிப்போகும் வழியிலிருந்து தடுத்து
அடிமை என்றுமாம். தடுத்து அடிமையாக்கிக்கொள்ளும் பொருட்டு
என்க.
மேலுற எழுந்து
- பிரமன் அன்னமாகிப் பறந்து சிவபிரானது
முடிதேடச் சென்ற சரிதங் குறித்தது.
மிகு கீழ் உற அகழ்ந்து
- பன்றியாய் நிலந்தோண்டி
விட்டுணு சிவபிரானது அடிதேடச் சென்ற சரிதங் குறித்தது.
மாலும் இருவர் - மயங்கி நின்ற - தருக்கி
நின்ற இருவர்.
நாம் அறிவோம் என்ற அகந்தையாலே தேடிய இருபெருந்
தேவர்க்கும் அரியராயின பெருமான் தமது அருளை வேண்டிப்
பெற்றவரைத் தாமே வலிந்து தடுத்தாட்கொள்ள வந் விளவார்
கனிபட நூறிய கடல்வண்ணணும்...... என்ற திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரத்தாலும், அப்பர் சுவாமிகளது இலிங்க புராணக்
குறுந்தொகைத் திருப்பதிகத்தாலும்,
........இனைய
னாகிய தனிமுதல் வானவன்
கேழற் றிருவுரு வாகி யாழத்
தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்
தூழி யூழி கீழுறக் கிளைந்துங்
காண்பதற் கரியநின் சுழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசுரம் அனைத்தும் உதவிய
பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
காண்டி லாதநின் கதிர்நெடு முடியும் |
என்ற (பதினொராந் திருமுறை) பட்டினத்தடிகள் திருவாக்காலும்,
பிற பிரமாணங்களாலும் இவ்வரலாற்றின் தன்மை அறியப்பெறும்.
இதனைப் பின்னர் வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
என்று திருஞான - புரா - 78 - பாட்டிலே விளக்கியருளினார்
ஆசிரியர். அவ்வாறு பெருந்தேவர்க்கும் அரியனாகிய பெருமான்
அன்புசெய்வார்க் கெளியனென,
நல்லசிவ
தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்
ஆரேனுங் காணா வரன் |
என்ற சாத்திரத்தால்
அறியலாம். அகந்தை கொண்ட இருவர்க்கும்
அரியவர், தாமே அன்புடைய ஒருவர்க்கு எளியவராயினமையும்,
அவர்கள் தேடவும் ஒளித்தவர் இவர் மறுப்பவும் விடாது
வழக்கிட்டுப் பற்றியமையும் குறிப்பு.
ஒருவர்
- ஒப்பற்றவர். தனக்குவமை யில்லாதவர். ஒருவராய்த்
தனித்து வந்தார் என்றலுமாம்.
மாலு மயனுக்கு மரியார்
- என்பதும் பாடம். 28
|
|
|
|