178. மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ  
  அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென வையமுற வெய்தி.
32

     (இ-ள்.) இத்தகைய வேடம - இவ்வாறு கண்ட
திருவேடமானது; மொய்த்து......வடிவேயோ - செறிந்து வளர்கின்ற
பேரழகே முதிர்ந்து மூப்பாகிய வடிவமோ;
அத்தகைய.......படிவமேயோ - அன்றி அவ்வாறு உள்ள மூப்பினது
உண்மை உருவமோ; மெய்த்த......முதலேயோ - அன்றி உண்மை
வைதிக நெறியை உலகில் விளைவித்த மூலப்பொருளோ;
என.......எய்தி - என்று அங்குக் கண்டார் யாவரும் ஐயம்
கொள்ளும்படியாக வந்து;

     (வி-ரை.) அழகு முத்த வடிவு - மூப்பினால் அழகை
இழப்பது உலக இயல்பு. இவ்வடிவம் அவ்வாறன்றி அழகே முதிர்ந்து
மூத்தது என்று சொல்லும்படி தோன்றிய வடிவம். இனி, அழகு
எப்போதும் மூப்படையாது என்றால் இது அழகிய மூப்பின்
வடிவமேயோ என்னும்படி என்பார் அத்தகை (அழகிய) மூப்பின்
வடிவமோ என்றார்.

     விளைத்த முதல்
- வைதிக நெறியை உலகத்திற்கு
விளைவித்துக் கொடுத்த மூலம். வேதத்தைக் கொடுத்தாராதலின்
அந்நெறியை விளைத்த முதல் என்றார். முதல் - மூல முதல்வன்
என்ற குறிப்புமாம். இத்தகைய வேடம் - நேரே அணிமையிற்
கண்டார்களாதலின் அண்மைச் சுட்டினாற் கூறினார். வையமுற -
பூமியிலே - என்றலுமாம்.

     விளைந்த முதல்
- என்பதும் பாடம். 32