18. காதில்வெண் குழையோன் கழற்றொழ நெடியோன்
     காலம்பார்த் திருந்தது மறியான்
 
  சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையிற்
     றுதிக்கையோ னூர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செஞ்சுடரின்று
     வெண்சுட ரானதென் றதன்கீழ்
ஆதியே னமதா யிடக்கலுற் றானென்
     றதனைவந் தணைதருங் கலுமுன்.
8

     (இ-ள்.) காதில்.......அறியான - காதிலே வெண்சங்கக்
குழையை அணிந்த இறைவனது பாதங்களைத் தொழுவதற்கு
நெடியோனாகிய திருமால் உரிய காலத்தை எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருந்த செய்தியை அறியாதவனாகி; சோதி......கண்டு
- வெள்ளை ஒளியுடைய கயிலையின் சாரலில் உள்ள ஒருமுழையிலே
விநாயகருடைய வாகனமாகிய பெருச்சாளியைப் பார்த்து; மீது...என்று
- முன் காலத்தில் மேலே எழுந்த செஞ்சுடராகிய அக்கினித்
தூணமானது இன்று வெள்ளை யொளித் தூணாய் நிற்கின்றதென்ற
எண்ணத்தாலே அதனை ஆதிப்பன்றி உருவெடுத்து அடிதேடி
நிலந்தோண்டி நிற்கின்றான் திருமால் என்று கருதி;
அதனை........கலுழன - கருடன் அப்பெருச்சாளியை வந்து சேரும்.

     (வி-ரை.) இது வெள்ளி பாடல் என்பர். அஃதாவது ஒரு
வெள்ளியம்பலத்தம்பிரான் என்பவரால் இடைச் செருகலாய்ச் சேர்க்கப்பட்ட பாட்டு என்று கூறுவர். இதன் கருத்தும் பொருளும்
மேற்பாட்டையே அனுவதித்துக் கூறியதாக வெள்ளையாகவே
காணப்படுகின்றது. மேற்பாட்டிலே பிரமனுக்குச் சொன்ன கருத்தும்
பொருளுமே இப்பாட்டில் விட்டுணுவுக்கும் சொல்லப்பட்டது.
மேற்பாட்டில் ஊர்தியை யுடையவன், ஊர்தியைக் காணாது
மயங்குகின்றான். இப்பாட்டில் ஊர்தி, உடையவனைக் காணாது
மயங்குகின்றது.

     வெண் குழையோன் - சிவபெருமான் - நெடியோன் -
விட்டுணு - முழை - மலையிற் பொந்து - பெருந் துவாரம்.

     துதிக்கையோன் ஊர்தி - பெருச்சாளி. இது உருவத்தால்
பன்றிபோல் தோற்றப்பட்டு விட்டுணுவினது ஆதிப் பன்றி
நிலையைக் கருடனுக்கு நினைப்பூட்டிற்று. பெருச்சாளியும் மலையின்
ஒளியால் வெள்ளையாய்த் தோன்றியபடியால் இது மாலாகிய
வெள்ளைப்பன்றியோ என்று கருடன் எண்ணியது.

     கருடன் தனது தலைவனாகிய திருமாலைக்காணாது தேடிற்று;
திருமலையடியில் ஒரு வெள்ளிய பெருச்சாளியைக் கண்டு அது
வெள்ளைப்பன்றியோ என்று நினைத்தது; முன்னோர்கால்
செங்சுடராகிய அண்ணாமலையைப் போலவே இது ஒரு வெண்சுடர்
மலை என்று நினைத்துத்தனது முன் வடிவில் வெள்ளைப் பன்றியாக
மண்ணைத் தோண்டி அடிதேடுகின்றானோ தன் தலைவன்?
என நினைத்து அதனைச் சார்ந்தது; என்பது இப்பாட்டின்
கருத்தாம். 1


     1. இவ்வாறு வரும் வெள்ளிப் பாடல்கள் பல மேலும் பல
இடங்களிற் காணலாம். அவற்றைப்பற்றிச் “சேக்கிழார்”என்ற
லில்“இடைச்செருகல்கள”(201 - 224) என்ற தலைப்பில்
விரித்தெழுதியுள்ளேன்; ஆண்டுக் காண்க.