180. என்றுரைசெ யந்தணனை யெண்ணின்மறை
                               யோரும்
 
  மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
‘நன்றுமது நல்வரவு நங்கடவ' மென்றே
‘நின்றதிவ ணீர்மொழிமி னீர்மொழிவ' தென்றார்.
34

     (இ-ள்.) என்று...அனையானும் - இவ்வாறு சொன்ன
அந்தணனை அங்கிருந்த அநேகவேதியர்களும் மணமகனாகிய
நம்பிஆரூரரும் நோக்கி; ‘நன்று...என்றார்' - ‘உமது வரவு நல்வரவு.
அது எமக்கு மிக நன்று. அது யாங்கள் செய்த தவப் பயனாம்'
என்று சொல்லி, ‘நீர்மொழிவதாகச் சொன்ன பொருளைச்
சொல்லுமின்' என்றார்கள்.

     (வி-ரை.) என்று - மேலே இவர் ‘எதிர் யாவரும் இந்தமொழி
கேண்மின்' என்றதை.

     எண்ணில்
- அளவில்லாத. இவர் மொழிவது மணத்திற்கு
மாறாய் முடியும் என்ற எண்ணமில்லாத என்பதும் குறிப்பு.

     மன்றல் வினை மங்கல மடங்கல் அனையான் - மணஞ்
செய்தற்கமைந்த சிங்க ஏறு போன்ற நம்பி ஆரூரர். இளமையும்,
வளர்ப்பும், காலமும், (பின்னர் ஓலைகீறும் வரை) சரித நிகழ்ச்சிக்
குறிப்பும் நோக்கி இவ்வாறு உவமித்தார்.

     மன்றல் வினை
- மணச் செயலில் அமைந்தமட்டிலே.
பின்னே, விழைவுறு மனம் கொள்வர் (48); பின்பு காந்தத்தின்
பின் இரும்புபோல ஈர்க்கப்பெற்றுச் செல்வம் (50); பின்
எண்ணமிக்கிருப்பர் (54); அதன் மேல் அவர் பின்பு செல்வர்
(65); பெருவிருப்போடும் அழைப்பர் (66); இறுதியில் ஈன்ற
ஆன்கனைப்புக்கேட்ட கன்றுபோல் அங்கம் புளகமாவர் (68);
ஆதலின், மடங்கல் போலிருந்தது, மணவினைக்கு அமைந்த
மட்டிலே என்பது குறிப்பாம். மங்கல மன்றல் வினை எனக் கூட்டுக.

     இவண் இங்கு
- இங்கே நீர் வந்து நின்ற வரலாறு பற்றி நீர்
மொழிவதை மொழிமின் என்க. 34