184. என்றா னிறையோ னதுகேட்டவ ரெம்ம ருங்கு  
  நின்றா ரிருந்தாரிவனென்னினைந் தான்கொ
                                 லென்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார்திரு நாவ லூரா
னன்றான் மறையோன் மொழியென்றெதிர் நோக்கி
                                 நக்கான்.
38

     (இ-ள்.) என்றான் இரையோன் அதுகேட்டவர் - முதல்வன்
இவ்வாறு சொல்லியதைக் கேட்டவர்களாகிய;
எம்மருங்கும்.......சிரித்தார் - பந்தலிலே எங்கும் நின்றார்களும்
இருந்தவர்களும் “இவர் என்ன எண்ணி இது சொன்னார்“ என்று
அவர் பக்கத்துப் போனார்களும் வெகுண்டார்களும்
சிரித்தார்களுமாயினர்; திருநாவலூரான்...நக்கான் - நாவலூர் நம்பிகள்
‘இம்மறையோன் மொழி நன்றாயிருக்கிறது' என்று அவரெதிரே
இகழ்ச்சி தோன்றச் சிரித்தார்.

     (வி-ரை.) என்றான்...எம்மான் என மேற்பாட்டிலே
முடித்ததையே மீளவும் ‘என்றான் இறையோன்' என
எடுத்துக்கொண்டது அவர்செயலின் உறுதியையும் பெருமையையும்
உணர்த்தற்கு. என்றான் அது என்றது வினைமுற்று எச்சப்பொருளில்
வந்தது.

     இறையோன் - முதல்வன்; எசமானன். மேற்பாட்டிலே
‘யாவரையும் டிமையா வுடையான்' என்றார். இவர்கள் அதனை
உணராது மேற்செயல் செய்கின்றார்களாதலின் அதனைக் குறிக்க
இறையோன் என்ற பெயராற் கூறினார்

     நின்றார் - இருந்தார் - மணப் பந்தரில் இடம் பெறாது
சுற்றும் எம்மருங்கும் நின்றவர்களும் இடம் பெற்று அதனுள்
வீற்றிருந்தவர்களும். சென்றார் முதலிய வினைமுற்றுக்களில் தொக்க
உம்மை விரித்து, ஆயினர் என ஆக்கச் சொல் வருவித்து உரைக்க.

     இவன் - என் - நினைந்தான் - மேலே (வரிசை 180) சென்றார்
முதலியவை பலரும் செய்த பல்வேறு செயல்கள். உமது நல்வரவு
எனப் பன்மையிற் கூறிய இவர்கள் இங்கு ஒருமையிற்கூறியது
இகழ்ச்சியையும் வெகுளியையும் குறித்தது.

     நன்றால் மறையோன் மொழி
- வேதங்களைச் சொன்ன
இவனது இம்மொழி மிக நன்றாகயிருக்கிறது என்ற இகழ்ச்சிக் கூற்று
எதிர்மறை குறித்தது - நன்றன்று - என்பது வெளிப் பொருள்.
பின்னர் நன்மையே பயப்பதாம் - என்ற ஒரு உட்பொருள்
குறிப்பதும் காண்க.

     எதிர் நோக்கி - ‘இவன் என் அடியான்' என்று தம்மைச்
சுட்டிக் கூறியதற்கு மாறாக. முன்னும், “நம்பி எதிர்“ (179 வரிசை)
நாவலர் பெருந்தகையை நோக்கி - (181 - வரிசை) - என இவரையே
நோக்கி என்றதால் தாமும் அவரை எதிர் நோக்கி என்க. அவர்
முகத்தை நேராகப் பார்த்து - என்றலுமாம். இவர்களது மனக்குழப்பங்
குறிக்க இதுவும் வரும் பாட்டும் ஏற்றபடி வேறு யாப்பினால் உறுதல்
கவியழகு. 38