185. நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்  
  மிக்கான் மிசையுத் தரியத்துகி றாங்கி மேற்சென்
றக்காலமுன் றந்தைதன் றந்தையா ளோலை
                               யீதால்
இக்காரி யத்தைநீ யின்று சிரித்ததென் னேட
                               வென்ன.
39

     (இ-ள்.) நக்கான்.........சென்று - அவ்வாறு சிரித்த நம்பிகள்
முகத்தை நேரே பார்த்து, நடுங்கித் தள்ளாடிக் கொண்டு இறைவன்
கீழே சரிந்த உத்தரியத்தை மேலே எடுத்துஇட்டுத் தாங்கிக்கொண்டு
அணுகச்சென்று; ‘அக்காலம்........ஏட' என்ன - ‘இதோ! அந்நாளிலே
உனது தந்தையின் தந்தை எழுதிக் கொடுத்த ஆள் ஓலை உள்ளது.
இன்று நான் சொன்ன இக்காரியத்தை இகழ்ந்து நீ சிரித்தது என்ன?
ஏடா!' என்று சொல்ல.

     (வி-ரை.) இப்பாட்டுக் குளகம். மிக்கான் - என்ன - வள்ளல்
- என்றார் - எனக்கூட்டி முடிக்க.

     முகநோக்கி - “இவன் அடியான்“ என்று (வரிசை 183)
சபையோரைப் பார்த்துச் சொன்ன அவர் இப்போது நக்காராகிய
நம்பியை நேரே நோக்கிச் சொன்னார்.

     நடுங்கி நுடங்கி
- கோபக்கிளர்ச்சியால் நடுங்குதலும்
மூப்பினால் நுடங்குதலும் உண்டாயின. “தள்ளுநடைகொள்ள“
(வரிசை 177) என்றமையும் காண்க.

     யார்க்கும் மிக்கான் - எல்லார்க்கும் மிகுந்தவன்.
மாசங்காரகாலத்தில் யாவரும் ஒடுங்கவும் தான் மிகுந்து நிற்பவன்.
மிக்கான் - மேலானவன் என்றலுமாம்.

     மிசை உத்தரியத்துகில் தாங்கி - அசைவினாலே சரிந்த
உத்தரியத்தை மேலே எடுத்து இட்டு. முன்னரும் மீதுபுனை -
வெண்டுகில் நுடங்க என்றது காண்க. (வரிசை 176) கோபித்து
வழக்குமேற் கொள்வார் உத்தரியத்தை இழுத்து மேலே
இட்டுக்கொள்ளும் இயல்பும் குறித்தவாறு.

     அக்காலம் - முன்னே - இன்னதென்றறியப்படாத அநாதி
காலம் என்பது குறிப்பு. தந்தைதன் தந்தை - முன்னோர். இங்குப்
பேரன் (பாட்டன்) என்பது வெளிப் பொருள் - “எம்பிரான் எந்தை
தந்தை தந்தையெங் கூட்டமெல்லாம்“ ஏயர்கோன் - புரா - 392,
“என்றாயோ டென்னப்பன் ஏழேழ்பிறவியும், அன்றே சிவனுக்
கெழுதிய வாவணம்“ என்ற திருமூலர் திருமந்திரம், முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     இக்காரியம் - அநாதியே அடிமையாகிய மூலகாரணத்தால்
நிகழ்ந்ததாதலால் காரியம் என்றார். ஏட - அடிமைகளை அழைக்கும்
வழக்குப்பற்றிய விளிச்சொல்.

     ஏடவென்றார் - ஏடவென்றான் - என்பனவும்
பாடபேதங்கள். 39