189. ‘ஓலைகாட்' டென்று நம்பி யுரைக்க‘நீ யோலை
                                 காணற்
 
  பாலையோ வவைமுன் காட்டப் பணிசெயற்
                          பாலை' யென்ற
வேலையி னாவ லூரர் வெகுண்டுமேல் விரைந்து
                                சென்று
மாலயன் றொடரா தானை வலிந்துபின் றொடர
                                லுற்றார்.
43

     (இ-ள்.) ஓலை...உரைக்க - இவ்வாறு ‘ஓலை காட்டு' என்று
நம்பி சொல்லவும்; நீ...வேலையில் - (அது கேட்ட வேதியர்) ‘நீ
ஓலைபார்த்தறியத் தகுதியுள்ளவனா? (அன்று); சபை முன்னே காட்ட
அவர் முடிவு கூறியபின் அதன்படி பணிசெய்தற்கு மட்டும் தக்கவன்'
என்று சொன்ன அளவிலே; நாவலூரர்....தொடரலுற்றார் - நாவலூர்
நம்பிகள் கோபித்து மேற்கிளம்பிச் சென்று பிரமவிட்டுணுக்களுக்கு
மெட்டாத அவ்விறைவனை வலிந்து தொடரலாயினர்.

     (வி-ரை.) நீ...பாலை - இது பின் நிகழ உள்ள சரிதமுடிபை
இறைவன் முன்னரே நம்பிக்குச் சொல்லியதாம்.

     பாலையோ - வன்மையுடையவனா? தக்கவனா? எதிர்மறைப்
பொருளில் வந்த வினா. அல்லை - என்றபடி.

     பாலை - ஆனால் நான் எதற்குத் தகுதியுடையவன்?
என்பாயேல், பணிசெய்யவே வல்லவன் என்றபடி.

     வேலையில் - வேளையில். என்ற - வேதியர் எனும்
எழுவாய் தொக்கு நின்றது.

     வெகுண்டு - கர்மத்தை ஊட்டிக் கழிப்பிக்கும் பொருட்டு
இறைவனது திரோதான சத்தி, அதாவது மறைப்புச்சத்தி தொழில்
செய்தலாலே, பணிசெயற்பாலை என்று அறிவிப்பவும் அறியாராகிக்
கோபங் கொண்டார் என்க. மாங்காய் முதலிற் பிஞ்சாகி உவர்த்துப்,
பின் காயாகிப் புளித்துப், பின்பழமாகி இனித்தல் போல, இறைவன்
செயலாகிய இதுவும், முதவில் இங்கே வெறுப்பும் வெகுளியும்
உண்டாக்கிப், பின் இதுவே அருட்சத்தியாக மாறி, அருட்டுறையிலே
இன்பம் பயந்தது காண்க. உண்மை யறிவேன் என்று மேற்கொண்ட
உள்ள நேர்மை கோபமேலீட்டால் அழிந்து உள்ளங்
கவர்ந்தெழுந்தோங்கு சினமாய் எழுந்தது. ஆதலின் செய்வது
தவிர்வது அறியாது பின்வருமாறு செய்தனர் என்க.

     வலிந்து - வலிமை செய்ய எண்ணி
- அதாவது அவர்
கையிலிருந்து ஓலையை வலிமையிற் பறிக்க எண்ணி. தொடராதான்
- தொடர்ந்து எட்டமுடியாதவன்.

     தொடரலுற்றார்
- தொடர்ந்து பிடிக்கலாயினர். 43