19. அரம்பைய ராடல் முழவுடன் மருங்கி
     லருவிக ளெதிரெதிர் முழங்க
 
  வரம்பெறு காதன் மனத்துடன் தெய்வ
     மதுமலரிருகையு மேந்தி
நிரந்தர மிடைந்த விமான சோபான
     நீடுயர் வழியினா லேறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
     பொலிவதத் திருமலைப் புறம்பு.
9

     (இ-ள்.) அரம்பையர் ... முழங்க - அரம்பை முதலிய
தெய்வப்பெண்கள் ஆடலுக்கேற்ப முழக்கும் முழவுகளோடு,
பக்கத்தே ஓடும் மலையருவிகள் எதிர் எதிர் இசைப்பனபோலச்
சத்திக்க; வரம்பெறும் ... ஏந்தி - இறைவனிடத்தே தாங்கள் குறித்த
வரங்களைப்பெறவேண்டும் என்னும் ஆசையுடைய மனத்தோடு
தேன்நிறைந்த கற்பகப் புதுப்பூக்களை இரண்டு கையிலும்
ஏந்திக்கொண்டு; நிரந்தரம் ... ஏறி - நெருங்கிய விமானங்களுடன்
கூடிய படிவழியேறி வந்து; புரந்தரன் ... புறம்பு - இந்திரன்
முதலிய தேவர்கள் துதிக்க விளங்குவது அத்திருமலையின்
வெளிச் சாரல்.

     (வி-ரை.) ஆடல் முழவு - ஆடலுக்கிசைய முழக்கப்படும் முழவு. “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர”
(திருஞானசம்பந்தசுவாமிகள் தேவாரம் - திருவையாறு)

     வரம்பெறு காதல் மனம் - போகபதங்களின் நாயகர்களாதலின் தங்கள் தங்கள் பதவிகளுக்கு உரிய இன்பங்களைத் தரப்பெறவும்
அவற்றிற்கு வரும் துன்பங்களைப் போக்கவும் வேண்டும் வரம்பெறும்
மனம்.

     தெய்வ மதுமலர் - கற்பக முதலிய தேவ வுலகத்து மலர்கள். மதுமலர்- தேன்நிறைந்த புதுப் பூ.

     நிரந்தர மிடைந்த விமான சோபான நீடு உயர் வழி - எங்கும் நெருங்கி - விமானங்களுடன் கூடிய படிகளையுடைய நீண்டு
உயர்ந்த வழி. படிஏறும் வழியிலே நெருக்கமான மண்டபங்களும்
அவற்றிலே விமானங்களும் உண்டு என்க.

     புரந்தரன் முதலாம் கடவுளர், மலர், கைஏந்திச் சோபானவழியினால் ஏறிப்போற்றத் திருமலைப் புறம்பு பொலிவது
என்று முடிக்க.

     இந்திரன், மால், பிரமன் முதலிய பற்பல தேவர்களும்
தங்களுக்கு அசுரர்களாலே துன்பம் நேர்ந்தபோது, திருக்கயிலை
சென்று வரங்கிடந்து வேண்டியவற்றைப் பெற்ற வரலாறு
கந்தபுராணம் முதலிய மாபுரணங்களிற் காண்க.

     மேற்கூறிய மூன்று பாட்டுக்களாலும் பிரமன் முதலிய
தேவர்கள் இறைவனை வணங்கி வரம்பெறக் காத்துக்
கொண்டிருந்தார்கள் என்றும், அவ்வாறு அவர்கள் காத்து நிற்பது
திருமலையின் வெளிப்புறங்கள் என்றும், அவர்கள் தங்கள்
பக்குவத்திற்கேற்பச் சோபானக் கிரமத்திலே சிவபெருமானைப்
பூசித்து வரம்பெற உள்ளவர்கள் என்றும், குறித்தவாறு. “தடஞ்சிலா
தலசோபா னத்தாலேறி, வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள்
வாயில”்என்று தென்கயிலையாகிய திருக்காளத்திக் கோயில்
வாயிலைக் கூறுதல் காண்க. (திருஞான - புரா - 1022).

     கடவுளர் - தேவர்கள், முழுமுதற் கடவுள் அல்லர் என்பது
வரம்பெறும் என்றமையானறிக, உபசாரவழக்கில் இவர்களும்
கடவுளர் எனப் பெறுவார்கள்.

“அரியய னிந்திரன் சந்திரா தித்த ரமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங்
                                 காக்கிடந்தார்;
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;
எரிதரு செஞ்சடை யேகம்ப! வென்னோ திருக்குறிப்பே”
“உந்திநின் றாருன்ற னோலக்கச் சூளைகள்
                                 வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலும்; மதிற்கச்சியாய்!
இந்தநின் றோ;மினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே”

என்பனவாதி திருவிருத்தங்களையும் காண்க.

     இக்கருத்தை மேல்வரும் பாட்டு விளக்குதலும் காண்க.  9