190. ஆவணம் பறிக்கச் சென்ற வளவினி லந்த
                               ணாளன்
 
  காவணத் திடையே யோடக் கடிதுபின்
                        றொடர்ந்து நம்பி
பூவணத் தவரை யுற்றா ரவரலாற் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட
                              வல்லார்?
44

     (இ-ள்.) ஆவணம்......அளவினில் - இவ்வாறு ஓலையை வலிந்து
பறிக்கும்படி நம்பி ஆரூரர் சென்றபோது; அந்தணாளன்.....ஓட -
அந்தணாளன் மணப்பந்தரினுள்ளே ஓடவும்; கடிது.....உற்றார் - அந்தப்
பூவணத்தவரை விரைவாய்ப் பின் தொடர்ந்து சேர்ந்து பிடித்தனர்;
அவரலால்......வல்லார்? - திரிபுர மெரித்த மலை வில்லவராகிய அவரை
நம்பிகளல்லாது வேறு யாவர் தாம் தொடர்ந்து எட்ட வல்லார்?
(ஒருவருமில்லை என்றபடி.)

     (வி-ரை.) ஆவணம் - ஓலை. இங்கே அவர் ‘ஆளோலை
யீதால்' என்று குறித்த அடிமை ஓலை.

     அந்தணாளன் - எல்லா உயிர்களிடத்தும் ஒப்பச் செந்தண்மை
பூண்டு ஏற்றபடி அருளுதலால் இவரே அந்தணாளராவார் என்க.

     காவணம்
- பொதுப்பெயர். இங்கு மணப்பந்தரைக் குறித்தது.

     பூவணத்தவர் - பூ - அழகிய - வண்ணத்தவர் -
திருமேனியுடையார். கண்டார் மனங்கவரும் அழகிய வண்ணமுடையார்.
மேலே 32, 42 பாட்டுக்களிற் கூறியதற்கேற்பப் பூவணத்தவர் என்றார்.
திருப்பூவணத் தலத்திலே எழுந்தருளிய இறைவர் என்றுரைத்தலுமாம்.
(பூவணம் - பூவின் தன்மை) பூவும் மணமும் போன்று பிரிவின்றி
வியாபித்தவர் என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.

     புரங்கள் செற்ற ஏவணச் சிலை
- திரிபுரங்களை அழித்த
அம்பு பொருந்திய வில். சிலை - வில் என்றும், மலை என்றும்
இருபொருளும் பெற நின்றது. - அம்பு. திரிபுர மெரித்தகாலையில்
மேருமலையே சிவபெருமானது திருக்கரத்தில் வில்லாக அமைந்தது
என்பது சரிதம்.

     ஏவணச் சிலை
- சிலையினின்று புறம் போகாமற் கூடியிருந்தே
காரியம் நிகழ்ந்துவிட்டமையால் எரித்த காலத்தும் அம்புடன்
கூடியசிலை என்பார் ஏவணச் சிலையினார் என்றார். “ஓரம்பே முப்புர
முந்தீபற; ஒன்றும் பெருமிகை யுந்தீபற“ என்றதிருவாசகமும், “ஏவணச்
சிலையினாரை யாவரே எழுதுவாரே“ என்ற அப்பர்சுவாமிகள்
தேவாரமும் காண்க. இவ்வாறு செற்றது பிறர் யார்க்கும் அரிய செயல்
என்பது.

“குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே.......“
                         - சீகாமரம் - திருவாமாத்தூர் - 1

என்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத்தாற் காண்க.

     “மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக, ஏவர் பொருதா ரிமையோரில்“
என்று பாராட்டினார் பிற்காலப் புலவரும். தொடர்ந்து எட்ட யார்
வல்லார் என்று மாற்றுக. மும்மல காரியமான முப்புரங்களையும்
எரித்தவராதலின் வெகுளியுடையாரால் அணுகப்பெறார். ஆயினும்
இங்கு நம்பிஆரூரர் வெகுண்டு தொடரலுற்றார்க்கு அணுகப்பெற்றனர்
இது அக்குற்றங்களின் பாற்பட்டதன்றாதலின். வெகுண்டு தொடர்ந்தார்
பிறர் யாவரேயாயினும் எட்டமாட்டாத பெருமான் வெகுண்டு தொடர்ந்த
நம்பிக்கு எட்டினாராதலின் அவரலால் யார் வல்லார் என்று இவ்வாறு
கூறினார். பிறர் காணப்பெறாமை மாலயன் தொடராதானை என
மேற்பாட்டிற் குறித்தார். “அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி“
என்றபடி திருவருள் கூட்டிய வழியே நிகழ்ந்ததாதலின் இவ்வெகுளி
குற்றமாய் அருளை மறைக்காது அருளை எட்டச்செய்தது. 44