192. அருமறை முறையிட் டின்னு மறிவதற் கரியான்
                                   பற்றி
 
  யொருமுறை முறையோ வென்ன வுழைநின்றார்
                          விலக்கி யிந்தப்
பெருமுறை யுலகி லில்லா நெறிகொண்டு பிணங்கு
                                  கின்ற
திருமறை முனிவ ரேநீ ரெங்குளீர் செப்பு
                               மென்றார்.
46

     (இ-ள்.) அருமறை......என்ன - அரிய வேதங்கள் எல்லாம்
ஓலமிட்டுத் தேடியும் இன்னும் எட்டியறியப்பெறாத இறைவன்
நம்பியாரூரரைப் பிடித்துக்கொண்டு ஒருதரம் இதுமுறையோ என்று
ஓலமிடவும்; உழைநின்றார்.......என்றார் - சுற்றுமிருந்த சுற்றத்தார்
இவ்விருவரையும் விலக்கிட்டு (வேதியரைநோக்கி) ‘இவ்வாறு உலகப்
பெருவழக்கிலே இதுவரை இல்லாத ஒரு புது வழக்கினை
மேற்கொண்டு பிணக்கம் (மாறுபாடு) செய்கின்ற மறைமுனிவரே!
நீவிர்தாம் எங்குள்ளவர்? சொல்லும் என்று கேட்டார்கள்.

     (வி-ரை.) மறைமுறையிட்டு இன்னும் அறிவதற்கரியான் -
வேதம் பிரணவத்தினும், பிரணவம் நாதத்திலும் தோன்றும்.
இறைவனோ தத்துவம் கடந்தவன் - தத்துவாதீதன். ஆதலின்
வேதம் அறியாதென்பர்.

“வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்.....“ (2) எனவும்,
 
“பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞா னத்தாலே
நேசமொடு முள்ளத்தே நாடி......“

                        (1) சித்தியார் - 9 - சூத்திரம

எனவும் வரும் சாத்திரமும் காண்க.

     அருமறை - எழுதற்கரிய, முழுதும் உணர்தற்கரிய மறை.
மறை முறையிடுதலாவது - இறைவனது இறைமைக் குணங்களை
எடுத்து எடுத்துக் கூறித் துதித்தல். “அல்லை யீதல்லை யீதென
அருமறைகளும் அண்மைச் சொல்லினாற் றுதித்திளைக்கும்“ என்பது
திருவிளையாடல்.

     முறையோ - இது அநீதி நிகழ்ந்தபோது பொறாது அது
செய்தாரைக் குறித்துச் சொல்லும் ஓலச்சொல். ‘முக்கணா முறையோ
மறையோதீ' என்ற நம்பிகள் தேவாரமும் காண்க. இத்தேவாரத்திலும்
முறையிடும் போது மறைகளால் முறையிட்டு ஓதப்பெறுபவன் என்று
குறிப்பதும் கவனிக்க.

     பற்றி - இதுவரை இவன் அடியான் என்ற சொல்லாற்
பற்றியவர் இப்போது செயலாலும் கையினாற் பற்றினார்.
தீமைசெய்தாரை இவ்வாறு கையாற் பிடித்து முறையிடுதல் வழக்கு
மேலிடுதற் கென்க. இது உலக வழக்கிற் காண்க. முன்பாட்டிற்
கூறியபடி நம்பி இறைவனைத்தொடர்ந்து பற்றினாராதலின் இறைவனும்
அவரைப் பற்றினார் என்பதும் இங்குக் காண்க. கிழிபட்ட ஓலையைப்
பிடித்துக்கொண்டு என்பாருமுளர். மூலவோலை காட்டி எனப்
பின்னர்க் கூறுதலின் அது பொருளன்று.

     இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி - உலகியல்
வழக்கில் இல்லாத புதுவழக்கு. இது பெருமான் கயிலையில் அருளிய
சாலுமொழியால் விளைந்ததேயன்றி உலக வழக்கில் வந்ததன்று.
உலகத்திற்கு ஆட்பட்டு உழலும் சிறு நெறிகளிற் சேர்தலில்லாத
பெருநெறி என்றதும் குறிப்பாம். இக்குறிப்புக்கு உலகில் இல்லா
இந்தப் பெருமுறை நெறி என்று கூட்டுக. ‘சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும் வண்ணம்' என்பது திருவாசகம்.

     உழைநின்றார் - பக்கத்திலே மணப்பந்தரிலே சூழ்ந்த
வேதியர். வரிசை 166-ம் பாட்டில் உழையர் என்றதும் காண்க.

     விலக்கி - இறைவனது பற்றிலிருந்து நம்பிஆரூரரை
விலக்கிவிட்டு, “சுற்றமென்னும் தொல்பசுக் குழாங்கள் - பற்றி
யழைத்துப் பதறினர் பெருகவும்“ என்ற திருவாசகமும் காண்க.
பெரும் பற்றாகிய இறைவன் தாமே வலியப் பற்றவும் அதை
இடையிட்டு விலக்கினார் என்பது குறிப்பு.

     பிணங்குதல் - மாறுபடுதல்; வேறுபடுதல். ‘யாவையுஞ்
சூனியம் சத்தெதிராதலின்' என்பது சாத்திரம். உலகமும் உலகச்
சார்பும் இறைவன் முன் நில்லாது பிணங்கும். இறைவன் உலகத்தைப்
பிணங்குவன்.

     எங்குளீர்? - இது இருவகை யறியாமையை வெளிப்படுத்தியது.
(1) இங்குக் கண் முன் இருப்பவராயினும் காணாமை. (2) எங்கு
மிருப்பாரை எங்குளீர் என்றமை. 46