195. வேதிய னதனைக் கேளா ‘வெண்ணெய்நல் லூரி
                                   லேநீ
 
  போதினு நன்று மற்றப் புனிதநான் மறையோர்
                                முன்னர்
ஆதியின் மூல வோலை காட்டிநீ யடிமை யாதல்
சாதிப்ப' னென்று முன்னே தண்டுமுன் றாங்கிச்
                               சென்றான்.
49

     (இ-ள்.) வெளிப்படை. ஆரூரர் சொன்னதை மறையவர்
கேட்டு ‘நீ வெண்ணெய் நல்லூரிலே போந்தாலும் நல்லதே;
அவ்வூரிலுள்ள தூய வேதியர்களின் முன்பு ஆதியில்
எழுதித்தரப்பெற்ற மூலவோலையைக் காட்டி எனக்கு நீ அடிமை
தான் என்பதைச் சாதித்துக் காட்டுவேன்' என்று சொல்லிக்கொண்டு
தண்டு ஊன்றி முன்னே சென்றார்.

     (வி-ரை.) வெண்ணெய் நல்லூரிலே போதினும் நன்று -
அங்குப் போனாலும் எனக்கு நல்லதே; நீ எண்ணியபடி அதில்
எனக்கு ஒன்றும் இழுக்காவதில்லை. உம்மை சிறப்பும்மை. இங்கு
இருப்பினும் நன்று; அங்கும் நன்று என்றலுமாம். இப்பொருளில் எச்ச
உம்மை. யான் எங்கும் உள்ளவனாதலின் என் வழக்கும் எங்கும்
நன்கு செல்லும் என்பது குறிப்பு.

     மற்று அப் புனிதம் நான்மறையோர் - ‘இவன்
என்நினைந்தான் கொல்?“ என்று என்வழக்கைக் கேட்டலும் சென்று
வெகுண்டு சிரித்த இவ்வூர் வேதியர்போலாது (வரிசை 184) மற்று
அவ்வூர் வேதியர் என் வழக்கைத் தக்கவாறு ஏற்கும் புனிதம்
பெற்றவர். இக்கருத்துப்பற்றியே “வேதிய னாளாமோ என்னாது
வெண்ணெய் நல்லூர்ச், சோதி வழக்கே புகழ்ந்தார் சோமேசா........“
என்று வியந்து பாராட்டி இவர்களை முதுமொழிக்கு
நல்லிலக்கியமாக்கினார் எமது மாதவச் சிவஞான சுவாமிகள்.

     ஆதியில் முல ஓலை - முதலில் எழுதப்பெற்றது; அதனோடு
மூல ஓலையுமாம். பிறிதொன்றினைப் பார்த்துப் படியெடுத்து
எழுதப்பெற்றதன்று. (இக்கால வழக்குப்படி நகல் அன்று; அசல்
ஓலை).

“என்றாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தவன் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே“ - திருமூலர்.
 
‘பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை'
                       - திருக்குடமுக்கு - 1. (அப்பர்)

என்ற திருவாக்குக்கள் காண்க. மூலவோலை - ஓலை
கிழித்துவிடப்பட்டமையால் எனது சாட்சி போய்விட்டது என்று
எண்ணவேண்டாம் எனக் குறிக்க இதனைச் சுட்டினார்.

     சாதிப்பன்
- வழக்குச் செய்யப் பின்வாங்கமாட்டேன்;
இங்குப்போலவே அங்கும் சாதிப்பன்.

     முன்னே தண்டு முன்தாங்கிச் சென்றான்
- தண்டு தாங்கி
முன்னே சென்றார். இவர்க்கு முன் தண்டு சென்றது.

     கேட்டு
- என்பதும் பாடம். 49