198. அந்தண ரவையின் மிக்கார் ‘மறையவ ரடிமை
                                 யாதல்
 
  இந்தமா நிலத்தி லில்லை யென்சொன்னா யையா!'
                              வென்றார்;
‘வந்தவா றிசைவே யன்றோ வழக்கிவன் கிழித்த
                               வோலை
தந்தைதன் றந்தை நேர்ந்த' தென்றனன் றனியாய்
                               நின்றான்.
52

     (இ-ள்.) அந்தணர்........என்றார் - அவ்வந்தணரது சபையிலே
தலைவர்கள் இது கேட்டு, ‘ஐயா! மறையவர் பிறருக்கு அடிமையாகும்
செய்தி இந்த உலகத்திலே இல்லை; (அவ்வாறிருக்க நீ புதுமையாகச்)
சொன்னவாறு என்ன?' என்று கேட்டார்கள்; வந்தவாறு........நின்றான்
- அதற்குத் தனியாய் நின்ற வேதியர் ‘இந்த வழக்கு வந்த விதம்
இசைவின் மூலமாக அல்லவா? அந்த இசைவைக் காட்டும் சான்றாகி
இவனாற் கிழிக்கப்பட்ட ஓலை இவனது தந்தையின் தந்தை (இசைந்து
அடிமையை) ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்ததாம்' என்றனர்.

     (வி-ரை.) அந்தணர் அவையின் மிக்கார் - அச்சபையின்
தலைவர்கள். வேதபாரகரின் மிக்கார் என்று முன்னர்க் கூறியதுங்
காண்க.

     மறையவர் அடிமையாதல் இந்த மாநிலத்தில் இல்லை -
மறையவர் என்றதனால் இது வைதிக நிலையில் இல்லை என்பதும்,
நிலத்தில் என்றதனால் இது உலக நிலையிலும் இல்லை என்பதும்
குறித்தவாறு. சாத்திர நிலை - உலக நிலை என்ற இரண்டிலும்
உமது பேச்சு மறுக்கப்படுகின்றது என்பது. ‘அறிவனூற் பொருளும்,
உலகநூல் வழக்குமென இருபொருளும் நுதலி எடுத்துக்கொண்டனர்'
என்று பேராசிரியர் திருக்கோவையாருரையிற் கூறியமை காண்க.

     வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு - வழக்கு வந்தவாறு
இசைவே யன்றோ என்று மாற்றிக் கூட்டுக. இசைவு வழக்கு என்பது
வழக்கு வகைகளில் ஒன்று. சில வழக்குகள் தருமநூல் தாயநூல்
உலகநூல் என்றிவற்றின் விதிகளின்படி வரும். சில இசைவு
அஃதாவது ஒப்புதலின் மேற்கிளம்பும். இவ்வழக்கு மேற்சொல்லிய
நூல்களின் வழியேயன்றி இசைவுட்பட்டதாம் என்றார். அந்தணர்
அவையின் மிக்கார் கூற்றை நாதனாம் மறையோன் உடன்பட்டு
மறுத்தாராயிற்று. இதனால் அந்நாளில் வழக்கு மூலங்கள்
அறியப்பெறுகின்றன. பொது உரிமைகளின் பேரில் நூல் வழக்குப்படி
வரும் வழக்குகள், (Causes based on Common law rights
etc) ஒப்பந்தப்படி வரும் வழக்குகள், (Causes based on
agreement) என்று இக்காலத்தவர் வகுக்கும் வழக்கு முறையும்
காண்க. எனவே இவை தமிழர்க்குப் புதியனவல்ல என்பதறியலாம்.
வந்தவாறு இசைவு - நான் இங்கு வந்தது திருமலையில் நான்
அருளியது பற்றியல்லவா? இது என் வழக்கம் என்ற குறிப்பும்
காண்க.

     நேர்ந்தது - இசைந்தது. எழுதிக் கொடுத்தது என்னாது
(உண்மையின் மாறுபடாது) நேர்ந்தது என்ற குறிப்புக் காண்க.

     தனியாய் நின்றான் - (1) தம்மோடு சேர்ந்து பேச
அக்கூட்டத்தில் ஒருவரும் இல்லாமல் தனித்து நின்றவன். (2)
ஒப்புயர்வற்றவன்; தனக்குவமையில்லாதான். (3) வழக்கிலும்
ஒருவராலும் சொல்லப்படாத தனிமையுடையவன்.

     தந்தைதன் தந்தை - பாட்டனார். பேரன் என்பது அக்கால
வழக்கு. மகன் மகனுக்கு இப்பேரை இட்டு வழங்கும் வழக்குப் பற்றி
எழுந்த பேர். ‘உங்கள் பேரனார்' என்று வரிசை 206-ம் பாட்டிற்
காண்க. 52