199. ‘இசைவினா லெழுது மோலை காட்டினா னாகி
                                 லின்று
 
  விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி
                                யாமோ?
தசையெலா மொடுங்க மூத்தான் வழக்கினைச்
                        சாரச் சொன்னான்;
அசைவிலா ரூர ரெண்ண மென்?; னென்றா
                        ரவையின் மிக்கார்.
53

     (இ-ள்.) வெளிப்படை. (வேதியர் சொல்லக் கேட்ட) சபையின்
மிக்கார், நம்பி ஆரூரரை நோக்கி ‘இசைவுப்படி எழுதிய ஓலையை
இவர் காட்டினால்
இன்று விரைவிற் பற்றிக் கிழிப்பது உமக்கு
வெற்றிதரும் செயலாமோ? தசை எல்லாம் ஒடுங்குமாறு மிக
மூத்தாராகிய இவர் தமது வழக்கைப்பொருந்த எடுத்துச் சொன்னார்.
ஆரூரரே! இதற்கு உமது கருத்து என்ன?' என்று கேட்டனர்.

     (வி-ரை.) இசைவினால் எழுதும் ஓலை - உமது தந்தையின்
தந்தை இசைந்து நேர்ந்ததென்று இவர் சொல்லும் ஓலை.

     கிழிப்பது வெற்றியாமோ - கிழித்தலாகிய உமது செய்கை
இவர் வழக்கிற்குத் துணை செய்து உமக்குத் தோல்வி தருமேயன்றி
வெற்றி தராது என்றபடி. ஆமோ - எதிர்மறைப் பொருளில் வந்த
வினா. ஆகாது - என்பதாம். ‘கிழித்துத் தானே நிரப்பினான்
அடிமை' (வரிசை - 193) - என வேதியர் முன்னர்க் கூறிய
நியாயத்தைப் பற்றி அவையின் மிக்காரும் கூறியவாறு. இது வழக்கு
நிதானிக்கும் நீதிமுறை.

     தசைஎலாம் ஒடுங்க முத்தான்
- உடம்பிலே தசை முழுதும்
வற்றிப்போய் வெறும் எலும்பும் தோலுமாகும்படி மூப்பு
அடைந்தவன். தனது விசுவத் திருமேனியிலே மாயையால் உண்டாய்
விரிந்த இவ்வுலக முழுமையும் தன்னுள்ளே ஒடுங்கவும் மேலும் தான்
நிற்கும் பழமையுடையான் என்பது தொனிப்பொருளாம். “தோற்றிய
திதியே ஒடுங்கி மலத்துளதாம்“ என்பது சூத்திரம். “மூத்தானை
உலகுக் கெல்லாம்“ என்பது நம்பிகள் தேவாரம். பின்னர்
“திசையறியா வகை செய்த தென்னுடைய மூப்புக்காண்“ என்றதும்
(வரிசை 232) காண்க. ‘தானாடத் தசையாடும்' என்பது முதுமொழி.
“தசையெலா மொடுங்க மூத்தாய்“ (திருவிளை - விறகு - 16).

     சார - காண்டல் - கருதல் - உரை என்ற மூன்று
அளவைகளுக்கும் பொருந்த.

     அசைவில் - வேதியர் வழக்கினாலும் தமது செய்கையாலும்
விளைந்த விளைவுகளாலே மயங்கி இன்னது செய்வதென்று ஒன்றும்
தோன்றாமல் பதுமைபோல் அசைவற்று நின்ற என்றபடி.
வரும்பாட்டில் ‘மனத்தினாலுணர்தற் கெட்டாமாயை என்சொல்லுகேன்
யான்? எனக்கிது தெளிய ஒண்ணாது' என்பது காண்க.

     எண்ணம் என்? - ‘நீர் இத்தனைக்கும் ஒன்றும் பேசாமல்
அசைவற்று நிற்கின்றீரே - உமது மனத்திலே ஏதோ எண்ணமிட்டுக்
கொண்டு இவ்விதம் நிற்பதாகத் தோன்றுகின்றது. இதற்கு உத்தரமாய்
நீர் உட்கொண்ட அந்த எண்ணம் யாது?' என்றார். “எண்ணம்
மிக்கான்“ என வரும் பாட்டிற் குறித்ததும் காண்க.

     அவையின் மிக்கார் - முன்பாட்டுக்களின் உரையிற் காண்க.
சபையிற் பேசும் உரிமையாளர். 53