2. ஊன டைந்த உடம்பின் பிறவியே
  தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழிற் றில்லையுள்
மாந டஞ்செய் வரதர்பொற் றாடொழ.
2

     (இ-ள்.) தேன்........தில்லையுள் - தேன் சேர்ந்த மலர்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த தில்லைப்பதியிலே; மாநடம்....தொழ -
பெருங் கூத்தைச் செய்கின்ற வரதனுடைய பொற் பாதங்களை
வணங்க; ஊன்........பிறவியே - ஊன் பொருந்திய உடம்புடன் சேர்ந்த
மானுடப் பிறவி எடுத்த உயிரே; தான்..........சாரும் ஆல் - தான்
பெற்ற உறுதிப் பொருளை அடையும்; தாள் தொழப், பிறவி
உறுதியைச் சாரும் - என்று கூட்டி முடிவு செய்க.

     (வி-ரை.) ஊன் அடைந்த உடபின் பிறவி - மற்றப்
பிறவிகளினின்றும் பிரித்து ஊனினால் ஆகிய விசேட உடம்பு பெற்ற மானுடரை உணர்த்திற்று. மரம் செடி முதலிய தாவரங்களுக்கும்
உடம்பும் பிறவியும் உண்டு. ஆயினும் அவ்வுடம்புகள் ஊனடைந்த
உடம்புகளல்ல. மற்ற ஆடு முதலிய உயிர்ப் பிராணிகளும்
ஊனடைந்த உடம்புடையன. அவற்றுள் புண்ணியக் கிரமத்திலே
மேலே வந்த சிறந்த அறிவுக்கு இடமாகிய ஊன் பொருந்திய உடம்பு
மானுட உடம்பே யாதலின் இங்குக் குறித்தது மானுடப் பிறவியை
என்க. இவ்வாறன்றி ஊன் என்பது உடம்பிற்குப் பொது
இலக்கணமாகக் கொண்டு சிறுபான்மை ஈ (ஈங்கோய்மலை), எறும்பு
(எறும்பியூர்), கழுதை (கரவீரம்), முதலியவை சிவபெருமானைப்
பூசித்த செய்தியை அடக்கி உரைத்தலுமாம். ஊன் அடைந்ததே
யாயினும் - உறுதியைச் சாரும் என்று உம்மை விரித்துரைக்க. ஆல்
- உறுதி குறிக்கும் அசைமொழி.

     உடம்பின் பிறவி - உடம்பிற்குள் வந்த உயிர் எடுத்த பிறவி;
உயிர் என்பது வருவிக்க. - தான் அடைந்த - அந்தந்த உயிரின்
பக்குவ நோக்கிப் பிறவி தரப்பெறுவதனாற் பெறுதற்குரிய;

“மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்து மாடு மரன்பணிக் காக வன்றோ
வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர்
ஊனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ”.

                           - சிவஞான சித்தியார்

என்ற ஞான சாத்திரமும் காண்க.

     இறைவனுடைய அடியைத் தொழுதலே மனிதர் பிறந்து அறிவு படைத்த தன் பயனாகும் என்பது “கற்றதனா லாய பயனென்கொல்
வாலறிவன் - நற்றாள் தொழாஅ ரெனின்” எனுந் திருக்குறள் முதலிய
பிரமாணங்களாலும் அறிக.

“கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்
எல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே”.

எனும் தேவாரத்திலே அப்பர் சுவாமிகள், மனிதர்கள் ஊனடைந்த உடம்பின் பிறவி தானடைந்த தன்மையை விரித்துக் கூறுவது காண்க.
ஊன் என்று தொடங்கியது அதன் உண்மைத்தன்மை காட்டி
வெறுக்கை தோன்றற்காக.

     தொழ........சாரும் - தொழப்பெறுமானால் பிறவி உறுதியைச்
சாரும்; வரதர் பொற்றாள் - வரதருடைய மாநடஞ்செய் பொற்றாள்
என்று நடஞ்செய்தலைத் தாள் உடன் கூட்டி யுரைத்தலும் ஒன்று.
வரதன் - வரங் கொடுப்பவன். பொன்தாள் - அழகிய பாதம். இது
தூக்கிய திருப்பாதம். “.......எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் -
மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே” என்று
இதனையே அருளினார் அப்பர் சுவாமிகள்.


     ஊன் அடைந்து வெறுக்கத் தக்கதேயாயினும் இக்காரியம்
செய்யுமாயின் விரும்பத்தக்கதாம் என்றபடி.

     “அந்த இடைமருதி லானந்தத் தேனிருந்த பொந்தைப்
பரவிநாம் பூவல்லி கொய்யாமோ”(திருவா); “ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பி”(திருவா).


     திருவாக்குக்களின்படி நடராசரையே தேன் என்றுரைத்தல்
ஒன்று. “இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து” என்றும், “மன்றுள
மாடும்மது”என்றும் பின்னர்க் கூறுதலும் காண்க.


     ஊன் - ஊனம், குற்றம் என்று பொருள்கொண்டு, மலமாகிய
குற்றத்தினால் உயிர் ஓர் உடம்பினுட் பிறந்த பிறவி
என்றுரைத்தலுமாம்.

     முதற்றிருப்பாட்டிலே ‘மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’
என்றார். அதன் பயன் யாது? என்பார்க்கு அந்த நடஞ்செய்
பொற்றாள் தொழப், பிறவியெடுத்த உறுதிசாரும். வேறு எதுதான்
அரிது? என்று இப்பாட்டினால் விடை கூறியவாறு. 2