200. ‘அனைத்துநூ லுணர்ந்தீ! ராதி சைவனென் றறிவீ!
                               ரென்னைத்
 
  தனக்குவே றடிமை யென்றிவ் வந்தணன் சாதித்
                                 தானேன்
மனத்தினா லுணர்தற் கெட்டா மாயை! யென்
                       சொல்லு கேன்யான்?
எனக்கிது தெளிய வொண்ணா' தென்றன
                        னெண்ண மிக்கான்.
54

     (இ-ள்.) வெளிப்படை. இதற்கு எண்ணம்மிக்கு அசைவின்றி
நின்ற ஆரூரர் ‘எல்லா நூல்களும் உணர்ந்த சபையோர்களே! நீங்கள்
என்னை ஆதிசைவன் என்று அறிந்துள்ளீர்கள்; அப்படி யிருக்க
இவ்வந்தணன் என்னைத் தனக்கு வேறு அடிமை என்று
சொல்வானானால் இது என் மனத்திற் கெட்டாத மாயையாயுள்ளது.
எனக்கு இதனை இன்னபடி எனத் தெளிந்து அறிந்து
சொல்லக்கூடவில்லை' என்று சொன்னார்.

     (வி-ரை.) அனைத்து நூலுணர்ந்தீர் - இது சபையாரை
விளிக்கும் முறை. இக்காலத்தும் நீதிபதிகளை இவ்வாறு
விளிக்கும்முறையும் காண்க. 1வழக்கிடுவோர் சபையோர்களின்
நோக்கத்தைத் தங்கள் பக்கமாக்கவேண்டி இவ்வாறு புகழ்ந்து
கூறுதல் வழக்கமாம். அன்றியும் ‘புனித நான்மறையோர்', ‘நல்ல
அந்தணர்', என்று இறைவனே இவர்களைப்புகழ்ந்துள்ளதும் காண்க.
நூல்வழக்கும் இசைவு வழக்கும் என்ற இரண்டும் நீதி நூல்களிற்
பேசப்பட்டிருத்தலின், நீங்கள் எல்லா நூல்களையும்
உணர்ந்தவர்களாதலின், எனது இவ்வழக்கை உணர்ந்து உண்மை
காண்பீர்கள் என்றபடியுமாம். ‘மூதறிவீர்' என்று (வரிசை 197) -
வேதியர் கூறியதும் காண்க.

     ஆதிசைவர்
- சிவப்பிராமணர். வரிசை 149-ம் பாட்டின் கீழ்க்
காண்க. சிவன் அநாதி சைவன். ஆதி சைவர் அநாதி சைவனாகிய
சிவபெருமானுக்கே ஆளானவர்கள். வேறு ஒருவருக்கும்
ஆளாகாதவர்கள்.

     அறிவீர்
- நீங்களே அறிவீர்கள். நான்
சொல்லவேண்டுவதில்லை. வேறு வகையில் நிரூபிக்கவும்
வேண்டியதில்லை. நீதிச் சபையினரே அறிந்துகொள்ளக் கிடந்தது. A
fact which the court can take judicial notice of and which
does not require proof என்பர் இந்நாள் வழக்கர்.

     தனக்கு வேறடிமை
- பிறரது அடிமைத்திறத்தினின்றும்
வேறுபட்ட விசேடத் தன்மையுடைய அடிமைத்திறம். முன்னரும்
வேறடிமை (வரிசை 183) என்பது காண்க. வரிசை 197-ல் காதல்
என் அடியான் என்ற குறிப்பும் உன்னுக.

     சாதித்தானேல் - அப்படியிருந்தும் இல்லாததொரு பொருளை
உண்டென இவன் சாதனையாய்ச் சொன்னால்.

     மனத்தினால் உணர்தற் கெட்டா மாயை - இவன்
சாதிக்கும் சாதனை எவருடைய மனத்தினாலும் எட்டமுடியாத
மாயையாம். உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனது செயலாதலின்
இதுவும் மனத்தினாலுணர்தற் கெட்டாதாயிற்று. மனம், ஞான கர்ம
இந்திரியங்களுக்கு மேலாய் நின்று அவற்றை இயக்கும்; மனத்தை
ஆன்ம அறிவு இயக்கும்; ஆன்ம அறிவை மாயை விளக்கும்;
அம்மாயையையுடையவன் மகேசன்; அவனே இவ்வந்தணனாதலின்
இவன் செய்கை “மனத்தினா லுணர்தற்கெட்டா மாயை“ ஆயிற்று
என்க.

     எனக்கு இது தெளிய ஒண்ணாது
- எவரும் மனத்தாலும்
நினைக்கக்கூடாத ஒரு புதுமையை இவர் வாயாற் சொல்லவும் - பலர்
கேட்க அறைகூவவும் - அதற்கு ஒரு ஓலை காட்டவும் - பின்னும்
சபைமுன் சாதனையாக வழக்கிடவும் - நிகழ்வதைக் கண்ணாற்
கண்டாராதலின் இதனை மனத்திற்குமெட்டா மாயையே என்றார்.
ஆதலின் இது தெளியமுடியவில்லை என்றாராகும்.

     எண்ணம் மிக்காள் - சூழலில் அகப்பட்டாராதலின்
அதனின்றும் வெளியேறும் வழிதேடிக் கவலை கொண்டார். 54


1Your Honour - Your Lordship - என்னும் ஏனைய மேன்மையும்
பெருமையுங் கருதாது, நூலுணர்தலே நீதிபதிக்கு இலக்கணமாகக்
கொண்டது அந்நாள் வழக்கு.