201.
|
அவ்வுரை
யவையின் முன்பு நம்பியா ரூரர்
சொல்லச் |
|
|
செவ்விய
மறையோர் நின்ற திருமறை முனியை
நோக்கி
‘இவ்வுல கின்க ணீயின் றிவரையுன் னடிமை
யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற வேண்டு'மென்
றுரைத்து
மீண்டும்.
|
55 |
(இ-ள்.)
அவ்வுரை......சொல்ல - நம்பி ஆரூரர் சபையின்
முன்னே இவ்வாறு சொல்லிவிடவே; செவ்விய மறையோர்.......உரைத்து
- அச்சபையிலிருந்த செம்மையந்தணர்கள் நின்றவராகிய திருமறை
முனிவரைப் பார்த்து ‘இந்த உலகத்திலே நீ இன்று இவரை அடிமை
என்ற வசை வழக்கை எங்கள் முன்பு நிரூபித்துக் காட்டவேண்டும்'
என்று சொல்லி; மீண்டும் - மேலும் (சொல்வாராயினர்).
(வி-ரை.)
அவை - சபை. இங்கு நீதிமன்றம்.
செவ்விய மறையோர் - அந்தணரவையின் மிக்கார் -
வேதபாரகரின் மிக்கார் - என்று முன்னர்க் கூறியதற்கேற்ப இவ்வாறு
கூறினார். செம்மைக் குணமுடையோர். ஒருபால்பற்றிச் செல்லா
நடுநிலையே மனச்செம்மையாம்.
நின்ற திருமறைமுனி
- (1) முன்னே வழக்குத்
தொடுத்துநின்ற மறைமுனிவர் (2) அருமறை முடிவில் நடுவினிற்
சிரத்தில்நின்ற முனி (3) நின்ற திருத்தாண்டக முதலிய வேதங்களிலே
சொல்லியவாறு எல்லாமாய் நிறைந்து நின்ற முனிவர்.
இவ்வுலகின்கண்...வெவ்வுரை - இவ்வுலகின்கண் - உலகியலில்
நிகழாதது; நீ - உன்னைத்தவிர வேறு எவரும்
சொல்லாதது;
அடிமை என்ற- அடிமையல்லாதாரை அடிமையாக்கியது;
வெவ்வுரை - காதால் கேட்கவும் தகாதது; என்றிவ்வாறு
சொற்றோறும் பொருளழுத்தம் பெறக் கூறினார்.
எம்முன்பு ஏற்றவேண்டும் - எமது சபை முன்னர்
நிரூபிக்கும் பொறுப்பு உம்முடைய பேரில் உள்ளது. Burden of
proof என்பர் நவீனர்.
மீண்டும் -
எம்முன்பு ஏற்றவேண்டும் என்று சொல்லியதைத்
தொடர்ந்து, அவ்வாறு ஏற்றுதற்கு இன்னின்னவற்றை நீ காட்டுதல்
வேண்டும் என்று நியாய வரம்புகளை அறிவித்துக்காட்டியவாறு. இது
நியாய விமரிசனம் செய்து காட்டும் முறை. நீதிச் சபையாரது
கடமைகளில் ஒன்று. ‘ஏற்றவேண்டும்; அதற்காக' என்று தொடங்கிப்
பின்வருமாறு விவரிக்கின்றார்கள்.
இவ்வுலகின்கணின்றிங்கிவரை - என்பதும் பாடம். 55
|
|
|
|