205. “அருமறை நாவ லாதி சைவனா ரூரன் செய்கை  
  பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்
                         கியானு மென்பால்
வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற்
                                கோலை
இருமையா லெழுதி நேர்ந்தே னிதற்கிவை
                         யென்னெ ழுத்து.“
59

     (இ-ள்.) “அருமறை........செய்கை - மறையோர் வாழும்
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான்
இதன்மூலம் யாவருமறிய எழுதிவைக்கும் செய்தியாவது;
பெருமுனி........ஓலை - பெருமுனிவராய்த் திருவெண்ணெய்நல்லூரிலே
உள்ள பித்தனுக்கு நானும் என்வழி மரபிலே வருபவர்களும்
வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு
இந்த ஓலையை; இருமையால்.......எழுத்து - மனமும் செய்கையும்
இசைந்து எழுதிக் கொடுத்தேன்; இதற்கு இது என் கை எழுத்து. “

     (வி-ரை.) வேதியர் காட்டிய ஆளோலையின் வாசகம். இது
அவ்வோலையிற் கண்டு கரணத்தான் சபையோர்முன் வாசித்தது.
இருதிறத்தாரின் ஊருங் குலமும் பேரும் பிறவும் விவரித்து எழுதி,
உடன்படும் பொருளையும் எழுதிக், கைச்சாத்திட்டுச் சாட்சிகளும்
இட்டு முன்னாட் பத்திரம் எழுதும் மரபு இதிற்காணப் பெறும்.

     அருமறை நாவல்
- அரிய மறைநூல் வல்லார் வாழும்
திருநாவலூர்.

     ஆரூரன் - இது நம்பிகளது பேரனார் (பாட்டனார்) பெயர்.
தனது பெயரைத் தன் மகன் மகனுக்குத் தருதலால் இவரைப்
பேரனார் என்பது முன்னாள் மரபு. “உங்கள் பேரனார்“ என
வரும்பாட்டிற் கூறுவது காண்க. திருவாரூர்ப் பெரு
மானது பெயரை
அவரது அடிக்குடியாகிய நம்பிகளது மரபிலே பிள்ளைகளுக்கு இட்டு
அழைத்து வந்தனர். ‘ஆரூர்த் திருமூலத்தானத்தே அடிப்பேராரூரன்'
(11) என்ற நம்பிகளது செந்துருத்திப்பண் தேவாரமும், பிறவும்
காண்க. வரிசை 150-ம் பாட்டின்கீழ் உரை காண்க. கடவுளர்,
பெரியோர், பெயர்களைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்குதல்
தொன்று தொட்டு ஆன்றோரிடம் வழங்கும் நமது நாட்டு வழக்கு.
இதுவும் இக்காலம் அருகிவருதல் வருந்தத் தக்கதாம்.

     செய்கை
- மனமிசைந்து கருதிச் செய்தது. Solemn act
என்பர் நவீனர்.

     இருமையால்
- மனமும் செய்கையும் ஒத்து - உள்ளும்
புறமும் ஒருமித்து. மனம் வேறு, செய்கை வேறாயில்லாமல் -
மனப்பூர்வமாய் - என்றபடி. 59