206. வாசகங் கேட்ட பின்னர் மற்றுமே லெழுத்திட்
                                 டார்கள்
 
  ஆசிலா வெழுத்தை நோக்கி யவையொக்கு
                           மென்ற பின்னர்
மாசிலா மறையோ ‘ரையா மற்றுங்கள் பேர
                                 னார்தந்
தேசுடை யெழுத்தே யாகிற் றெளியப்பார்த் தறிமி'
                               னென்றார்.

60

     (இ-ள்.) வாசகம் கேட்ட பின்னர் - இவ்வாறு கரணன்
வாசித்த ஓலை வாசகத்தைக் கேட்டபின்; மற்றும்.......பின்னர் -
எழுதிக் கொடுத்தவரது கைஎழுத்துக்குப் பின், சாட்சியிட்டவர்களது
கை எழுத்துக்களையும் பார்த்து, அவை சரியாயிருப்பக் கண்டபின்பு;
மாசிலா.......என்றார் - குற்றமற்ற சபையார்கள் நம்பி ஆரூரரைப்
பார்த்து ‘ஐயா! இவ்வோலை உங்கள் பாட்டனாருடைய உண்மையான
எழுத்தாயிருந்தால் அதனைத் தெளிய முழுதும் சோதித்துப் பார்த்துத்
தெரிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்.

     (வி-ரை.) மேலெழுத்திட்டார்கள் - சாட்சிக்காகக் கை
ஒப்பமிட்டவர்கள். எழுதிக்கொடுப்பவர் கைச்சாத்துக்கு மேலே
எழுதப்படுவதால் சாட்சி ஒப்பத்தை ‘மேலெழுத்து' என்பது அந்நாள்
வழங்கிய பெயர். (attestation).

     பேரனார்
- பாட்டனார். முன் பாட்டின் முன் உரை காண்க.

     ஆசிலா எழுத்தை நோக்குதல் - அவை அவர்களது
எழுத்துத்தானா என்று ஆராய்ந்தறிதல்; அல்லது அவற்றைப் பிற
நீரூபங்களால் அவையேயாம் என்று துணிதல். இந்நாள் வழக்கர்
இதனை Proof of attestation என்பர்.

     அவை ஒக்கும் - அவை உண்மையே - சரியே
-
அவர்களுடையனவே. ஆவணத்தில் முதலிற் கண்டு நிச்சயிப்பது
மேலெழுத்துக்களின் உண்மையே என்பது அந்நாள் விமரிசன
முறையாம்.

     பின்னர் - முறைசொன்னோரின் - வாதியின் -
வாய்மொழியையும் சாட்சியத்தையும் ஆய்ந்து தெளிந்த பின்னர்,
முறை சொல்லப்பட்டோரை - பிரதிவாதியை - நோக்கி அவர்
வாய்மொழியையும் சாட்சியையும் கேட்பது முறையாம் என்ற
நீதிமுறைபற்றிச் சபையார் பின்னர் நம்பிகளை வினவியபடியாம்.
நம்பி ஆரூரரை நோக்கி என்பது வருவித்துக் கொள்க.

     மாசிலா மறையோர் - புனித நான்மறையோர் - நல்ல
அந்தணர் - செவ்விய மறையோர் - செல்வ நான்மறையோர் -
என்றவைகளுக்கேற்ப இவ்வாறு கூறினார். உலகம் வழங்கும் வழக்கை
நியமிக்கும் இறைவனது வழக்கையே உண்மையில் நின்று தீர்க்குமாறு
அவனருளாலே “தெருள்பெற்றவர்“ களாதலின் இவ்வாறு
பன்முறையும் கூறினார்.

     மற்று உங்கள் போனார் - உங்களைப்போல அடிமையை
மறத்துவழக்கிடாது இசைவு தந்த பாட்டனார். (பேரனார் -
பாட்டனார்).

     தேசுடை எழுத்து - உண்மை விளங்கும் கை எழுத்து. தேசு
- விளக்கம் - ஒளி.

     தெளியப்பார்த்து அறிமின் - தெளிவு பெறுமாறு
நன்குபார்த்து ஊன்றி அறியுங்கள். வரிசை 200-ம் பாட்டிலே
“எனக்கிது தெளிய வொண்ணாது“ என்று தமது அறிவுக்கு
இவ்வழக்கின் உண்மை புலப்படாமை கூறிச் சபையாரிடம் தம்மை
ஒப்புவித்தாராதலின், அதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் இவ்வொரு
செய்தியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். பார்த்து அறிமின் -
கண்ணாற் பார்த்து மனத்தால் ஊன்றியறிந்து தெளிமின்
என்க.

     அறிதிர் - என்பதும் பாடம். 60