207. அந்தணர் கூற ‘வின்னு மாளோலை யிவனே
                              காண்பான்
 
  றந்தைதன் றந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண்
                                 டாகில்
இந்தவா வணத்தி னோடு மெழுத்துநீ ரொப்பு
                                நோக்கி
வந்தது மொழிமி' னென்றான் வலியவாட்
                       கொள்ளும் வள்ளல்.
61

     (இ-ள்.) அந்தணர் கூற - அந்தணர்கள் இவ்வாறு கூற;
‘இன்னும்.......மொழிமின்' - ‘இந்த ஆளோலை கண்டு தெளிதற்கு
இன்னும் இவனோ வல்லவன்? இவனது பாட்டன் தான் எழுதிய
வேறு கைச்சாத்துக் கிடைக்குமானால் அதை வர வழைத்து இந்த
ஓலையின் கையெழுத்துடன் அதனை நீங்கள் ஒத்துப்பார்த்து உங்கள்
மனத்திற்கு நியாயம் என வருவதைத் தீர்ப்பாகக் கூறுங்கள்;
என்றான்.........வள்ளல் - என்று வலிய ஆட்கொள்வாராகிய வள்ளல்
தானே முந்திக்கொண்டு சொன்னார்.

     (வி-ரை.) அந்தணர் - எல்லாரிடத்திலும் செந்தண்மை பூண்டு
ஒழுகுவோராதலின் இங்கு நம்பியாரூரரிடத்திலும் வைத்த தட்பத்தால்
இவ்வாறு கேட்டனர் என்பதாம்.

     இன்னும் - ‘மனத்தினா லுணர்தற்கெட்டா மாயை' - ‘எனக்கிது
தெளிய வொண்ணாது' என்று முன்னரே சொல்லித் தனது
மாட்டாமையை வெளிப்பட அறிவித்திருந்தும், இந்த எழுத்தைப்
பார்த்து அறியமாட்டா இளைஞராயிருந்தும், இன்னும் அவரைக்
கேட்கின்றீர்களே என்ற குறிப்பு.

     இவனே - ஏகாரம் எதிர்மறை வினாப்பொருளில் வந்தது.

     தான் முன் எழுது வேறு கைச்சாத்து
- தானே தன்
கைப்பட எழுதிய கை எழுத்து - genuine and admitted signature
and hand writing - என்பர் நவீனர். மேற்பாட்டிலும் ‘பேரனார் தம்
தேசுடை எழுத்தே' என்றதும் காண்க. இவ்வோலையில் உள்ளது
பாட்டனார் தாமே எழுதியதா? அல்லது வேறொருவர் அவர் கை
எழுத்துப்போல எழுதிவிட்டதா? என்பது கேள்வியாதலின் அதனை
நிச்சயிக்க அவர் தாமே எழுதிய வேறு கைச்சாத்தைக்கொண்டு
ஒத்துப்பார்க்க என்றார். இது நீதிமுறை ஆராய்ச்சிகளில் ஒன்றாய்
இந்நாளிலும் கையாளப்படுவது.

     இங்கு வேதியர் ‘தந்தைதன் தந்தை தான் எழுது வேறு
கைச்சாத்து' என்று சொல்லியது, இவ்வோலையில் உள்ளது தனது
மாயை வன்மையால் உண்டாகியதாயினும் அவர் தானே
எழுதியதனோடு ஒப்பிட்டால் சரியாயிருக்கும் என்னும் குறிப்புமாம்.

     உண்டாகில் - இருந்தால் அதனை வரவழைத்து - என
வருவித்துக் கொள்க.

     எழுத்து - நீர் ஒப்பு நோக்கி
- நீர் அந்த எழுத்தை
ஆவணத்தின் எழுத்தினோடு ஒப்புப்பார்த்து.

     வந்தது - உங்கள் மனத்திற்றோன்றி வாக்கில் வந்தபடி.
உங்களுள் நானிருந்து பிரேரித்து வாக்கில் வரச்செய்ய அவ்வாறு
வந்தது எதுவோ அதனை என்றதும் குறிப்பு.

     வலிய ஆட்கொள்ளும் வள்ளல் - இவ்வழக்கினால்
நம்பியாரூரரையும், இந்த முறை அறிவித்து நல்வழிப்படுத்துதலாலே
சபையாரையும், இதுவேயுமன்றி இதன் மூலம் எல்லா உயிர்களையும்
அவை வேண்டாமலே தாமே வலிய ஆட்கொண்டு ஈடேற்றுவதே
தொழிலாகக் கொண்ட வள்ளற்றன்மை யுடையான். ‘தொழுவாராவர்
துயராயின தீர்த்தலுன தொழிலே' என்பது நம்பிகள் தேவாரம். 61