209. ‘நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர்
                               தோற்றீர்
 
  பான்மையி னேவல் செய்தல் கட'னென்று
                          பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி ‘விதிமுறை யிதுவே
                                 யாகில்
யானிதற் கிசையே னென்ன விசையுமோ' வென்று
                                நின்றார்.
63

     (இ-ள்.) நான்மறை......விளம்ப - (இவ்வாறு நீதிமுறை
விசாரணையை முடித்துக்கொண்டு) சபையோர் ‘நம்பியாரூரரே! நீர்
இவ்வழக்கிலே நான்மறை முனிவருக்குத் தோற்றுவிட்டீர்;
பான்மையினாலே அவருக்கு நீர் ஏவல் செய்தலே உமது
கடமையாகும்' என்று தீர்ப்புச் சொல்ல; நம்பி.......நின்றார் -
(அதுகேட்ட) நம்பி ‘இதுவே விதிமுறையாகிய முடிபானால் நான்
இதற்கு இசையமாட்டேன் என்று சொல்லக் கூடுமோ? கூடாது' என்று
அமைந்து நின்றார்.

     (வி-ரை.) பான்மையில் - (1) அவர் ஏவல்கொள்ளும்
தன்மைப்படி. ஏவலை அவர் இட்டபான்மையிற் செய்தல் கடமை
என்க. (2) முன் ஊழ் விதியினாலே. பான்மை - ஊழ் என்பன
ஒருபொருட் சொற்கள். இப்பொருளில் முன் பான்மையினாலே
இப்போது ஏவல் செய்தல் கடன் என்க.

     பண்பில் மிக்க மேன்மையோர் - மேலே செவ்விய
மறையோர் - என்பது முதலாக விதந்து கூறியதற்கேற்ப இங்கும் நீதி
முதலிய பெருமைகளால் மிகுந்த மேன்மையுடையோர் என்றார்.
பண்பு
- வேதியர் பிறர்க்கு ஆளாதல் தகுமோ என்று மாறுபாடு
கொண்டு ஒருதலைச் சார்புபற்றாமல் வழக்கை நீதிமுறையிலே தீர்த்த
தன்மை. வேதியர்களும் நீதிமன்றத்தவர்களும் இவ்வாறு தமது குலம்
முதலியவற்றை ஒதுக்கிவைத்துத் தாம் வேறாக நின்று நீதி
வழக்கறுத்தல் அருமை என்பது குறிப்பு. தமது குலத்துக்கு
விதிக்காததும் ஆட்சியில்லாததும் ஒவ்வாததும் ஆகிய
தீர்ப்பாயிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது நியாயம்
சொல்லுதல் மேன்மை எனப்பெற்றது.

     விதிமுறை இதுவே ஆகில் - முன் நின்ற விதியும்,
நீதிமன்றத்தவர் சொன்ன முறையும், கூடிமுடிந்தது இந்த
முடிபேயானால். விதியும் முறையும். உம்மைத் தொகை.

     இசையேன் என்ன இசையுமோ - சொல்லணி.
உட்படமாட்டேன் என்று சொல்லுதல் பொருந்துமோ? பொருந்தாது
என்றபடி.

     நின்றார் - தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நின்றார்.
ஒன்றின்மேலொன்றாகப் பல நீதிமன்றங்கள் ஏறினும் அவற்றின்
தீர்ப்புக்குள் அமையாது கொக்கரித்து நிற்பது இக்காலத்து மாக்களின்
ஆணவப் பெருக்கின் இயல்பு. அதனை, இங்குக் குலம் - நலம் -
இளமை - காலம் முதலிய எல்லாவற்றையும் விட்டு ஒழித்து,
ஆவணத்தினை முற்றும் அடிப்படுத்திச், சபையார்தீர்ப்புக்கு
உட்பட்டு, ஆட்செய்ய இசைந்து நின்ற நம்பிகளின் உண்மை
நிலையுடன் ஒப்புநோக்கி உண்மை கண்டு பின்பற்றத்தக்கது.

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாத்தில்லைக் கண்டனே.

என்ற திருவாசகக் கருத்துக்களை ஓர்ந்து நோக்குக. சாதி குலம் -
முதலிய பாகுபாடுகள் உலக நிலைக்கு வேண்டப்பெறுவன என்றும்,
உலகினர்க்கு ஆளாதல் ஒழிந்து இறைவனுக்கு ஆட்செய்யும்
நிலைபேறு கைவந்தபோதே அவை கீழ்ப்பட்டு வெல்லப்பட்டு ஒழியும்
என்றும், அப்போதே ஆணவம் அறவே ஒழிந்து இன்பநிலை வரும்
என்றும், இவற்றால் விளங்குதல் காண்க. இவ் வகை - தொகை -
நிலைகளை அறியாதார் இவ்வரலாற்றினால் உலக ஆட்சியும்
வழக்கும் வீழ்ந்து பட்டன என்று கூறுவர். அது
பொருந்தாமையறிக. 63