| 21. 
              | 
	      நெற்றியிற் 
            கண்ணர் நாற்பெருந் தோளர் 
                 நீறணி மேனிய ரனேகர், 
             | 
	  | 
	 
	
	      |   | 
	      பெற்றமேல் 
            கொண்ட தம்பிரா னடியார், 
                 பிஞ்ஞகன் றன்னருள் பெறுவார், 
            மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் 
                 மலர்க்கையிற் சுரிகையும் பிரம்பும் 
            கற்றைவார் சடையா னருளினாற் பெற்றான் 
                 காப்பதக் கயிலைமால் வரைதான். | 
	11 | 
	 
	 
	
        
       
            (இ-ள்.) 
        நெற்றிக்கண்ணர் ... அருள் பெறுவார் - 
        நெற்றிக்  
        கண்ணும் நான்கு தோள்களும் திருநீறு பூசிய மேனியும்  
        உடையவர்களாயும், இடபவாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானது  
        அடியவர்களாயும், பெருமானது திருவருளைப் பெறுபவர்களாயும்  
        அனேகர்களாகிய; அவர்களுக்கெல்லாம் தலைமைஆம் பணியும் -  
        அவ்வடியார்களுக்கெல்லாம் தலைவராகிய திருப்பணிவிடையும்;  
        மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும் - மலர்போன்ற கையிலே 
         
        உடைவாள் பிரம்பு ஆகிய இவைகளையும்; கற்றைவார்சடையான் ...  
        வரைதான் - கற்றையாகக் கட்டிய நீண்ட சடையையுடைய  
        சிவபெருமானது திரு அருளினாலே பெற்றவராகிய நந்தி  
        யெம்பெருமானாற் காக்கப்படுகின்றது இந்தக் கயிலைப் பெருமலையேயாம்.  
         
             (வி-ரை.) 
        நெற்றியிற் கண்ணர் ... மேனியர் - சரியை, 
        கிரியை, யோகம், என்னும் மூன்று பாதங்களுக்கும் முறையே  
        சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் மூன்று பதமுத்திகளை  
        வகுத்தது சைவ சாத்திரம். இங்குக் கூறியவர்கள் சிவபெருமானது  
        திருவுருவத்தைப் பெற்ற அடியார்கள்; யோகத்தாற் சாரூபம்  
        பெற்றோர் என்க. தம்பிரான் அடியார் என்றும், அருள் பெறுவார்  
        என்றும் கூறும் இருவகையினரும் முறையே கிரியை சரியைகளாற்  
        பேறுபெற்றவர்கள். 
         
             யோக நிலையை உலகத்தில் விளக்கிக் காட்டும் 
        ஆசாரியராய்  
        அவதரித்தவர் நம்பிகள். ஆதலின் அவர் எழுந்தருளும் சோதியானது  
        அதுபோலவே யோகநிலையில் பயனைப்பெற்றுச் சாரூபம் கொண்டவர்களாகிய அடியார்களிடையே 
        யோக ஒளியாய்ப் புகுகின்ற  
        நிலை இங்குக் குறிப்பிட்டவாறு; யோக நிலையினர் சாரூபம் பெறுதல்  
        சாத்திரத்துக் காண்க. 
         
      
        
          |  
             சினமலி 
              அறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி                                        நிறுவிய 
              மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும்  
                                                   
              உணர்பவர் 
              தனதெழில் உகுவது கொடுஅடை தகுபரன்  
                                - 
              திருச்சிவபுரம் - நட்டபாடை - 5 
             | 
         
       
      என்ற திருஞானசம்பந்த 
        சுவாமிகள் தேவாரத்துள், மனன்  
        உணர்வொடு நியதமும் உணர்பவர் என்ற குறிப்பையும் பின்னர்  
        உபமன்னியமுனிவர் “சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம்  
        தழைக்கின்றான்” என்பதனையும் நோக்குக. “நறைமலி” 
        என்ற  
        மேற்படி பதிகம் 4-வது பாட்டுச் சரியையினையும் கிரியையினையும்  
        கூறுதல் காண்க.  
            நெற்றிக்கண் 
        - நான்குதோள் முதலியன இறைவனது உருவம். அனேகர் - இவ்வுருவம்பெற்ற முத்தான்மாக்கள் 
        எண்ணில்லாதவர்கள்  
        என்றபடி. நீறணி மேனியர் என்றபடியால் சாரூபம் பெற்றாரும்  
        திருநீறு கண்டிகை முதலிய சிவ சின்னங்கள் தரிக்கும் நியதியுடையார்  
        என்பது அறியப்படும். இவர்களுக்குத் தமது உருவம் தரும் இறைவன்  
        திருமேனியிலும் இவை விளங்குவன. ஆதலின் அன்றோ இவர்கள்  
        இவற்றைப் பெற்றனர்? இதை எண்ணும்போது சரியை கிரியை யோகம்  
        முதலிய எவ்விதத் தகுதியும், படியும் இல்லாதவரும், இக்காலத்தில்  
        வெறும் வாய்ஞானம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு  
        சிவசின்னங்களைப் புறக்கணித்துத் திரிபவருமாகிய மாக்களின்  
        நிலைமை பரிதபிக்கத் தக்கதேயாம் என்க. 
            மற்று 
        அவர்க்கெல்லாம் - பல வகைப்பட்ட அடியார்  
        கூட்டங்களுக்கெல்லாம்; அவர் - அடியார்களுட் பல திறத்தினர். 
         
             தலைமையாம் பணி - 
        சிவ உருவம் பெற்றவராய்ச் சரிகையும் பிரம்பும் தாங்கிக் கயிலை மலையையும் கோயிலையும் 
        காவல் புரியும்  
        முதன்மையாகிய பணி விடை. 
         
             பணியும் 
        - அதற்காகச் சுரிகையும் பிரம்பும் பெற்ற என்று  
        வருவித்துரைக்க. 
            பணியும் 
        சுரிகையும் பிரம்பும் பெற்றான் என்க. பெற்றான்  
        காப்பது - பெற்றானாற் காக்கப்படுவது என விரிக்க. 
             பிஞ்ஞகன் 
        - சிவபெருமான் - தலைக்கோல முடையான். 
             பெற்றம் 
        - இடபம். இடப தேவர் வேறு; நந்திபெருமான் வேறு; இவர்களை ஒன்றாக மயங்குவார் பலர். 
        அதிகாரநந்தி  
        எனப்படுபவர் நந்திதேவர்; இவர் பொருட்டு இறைவர் சேவை  
        தந்தருளும் திருவிழாப் பல தலங்களிற் சிறக்கக்  
        கொண்டாடப்படுகின்றது. இடபவாகனக் காட்சி என்ற விழா  
        வேறாவதும் காண்க. 
            வரைதான் 
        - இவரது காவலின் பெருமை பெற்றது  
        திருக்கயிலை மலையே என்க. இவரது காவற் பெருமையை  
        இத்திருமலையின் மேலே தேர் செலுத்த முயன்ற இராவணன் இவரது  
        ஊங்காரமாகிய மூச்சுக் காற்றினாற் பட்ட பாட்டினைக் கூறும்  
        சரிதத்தை மாபுராணங்களுட் காண்க. தான் - என்பதை அசையாகக்  
        கொண்டு ஒதுவாரு முளர். 
            இப்பாட்டிலே 
        குறித்த சாரூப முதலிய நிலைகளையும்,  
        அவற்றிற்குக் காரணமாகிய யோகம் முதலிய நாற்பாதங்களையும்  
        பற்றித் தாயுமானார், 
         
      
         
          “விரும்புஞ் 
            சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும் 
            அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே” | 
         
       
      என்று அருளியிருத்தல் 
        காண்க. ஞானிகள் அடைந்தநிலை  
        சாயுச்சியமாம். இது காணவும் சொல்லவும் முடியாமையால் இதற்கு  
        அடுத்த நிலையாகிய யோகபலனாகிய சாரூபம் இங்குக் கூறப்பெற்றது. 
         
             தம்பிரான் 
        - ஆன்மாக்களாயுள்ள தமக்குப் பிரானாயுள்ளவர் ஆதலின் அவர்க்குப் பிறர் எல்லாரும் 
        அடியவர்களே யாவர். 11 
      |