212. எம்பிரான் கோயி னண்ண ‘விலங்குநூன் மார்ப
                                னெங்க
 
  ணம்பர்தங் கோயில் புக்க தென்கொலோ'
                           வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு தனிதொடர்ந் தழைப்ப
                                மாதோ
டும்பரின் விடைமேற் றோன்றி யவர்தமக்
                        குணர்த்த லுற்றார்.
66

     (இ-ள்.) எம்பிரான் கோயில் நண்ண - கிழவேதியராய் வந்த
சிவபெருமான் அந்தத் திருவருட்டுறைக் கோயிலுள்ளே போகவும்;
இலங்குநூன்......என்று - இவ்வந்தணர் எங்கள் பெருமானது
கோயிலுக்குள் புகுந்த தென்கொல்? என்று ஐயுற்று;
நம்பி........அழைப்ப - நம்பிகள் மறையவர் குழாத்திலிருந்து பிரிந்து
முன் போந்து மிகுந்தவிருப்பத்துடன் அவரைத்
தனியாகக்கோயிலுள்ளே தொடர்ந்து அழைக்க; மாதோடு.......உற்றார்
- ஆகாயவெளியிலே உமையம்மையாரோடு இடப வாகனத்திலே
எழுந்தருளி வெளிப்பட்டுப் பின்வருமாறு அவருக்கு உண்மையை
உணர்த்தியருளலாயினர்.

     (வி-ரை.) எம்பிரான் - எல்லாருக்கும் தலைவர். அக்கோயில்
எனச் சுட்டு வருவித்து அக்கோயில் எம்பிரான் நண்ண என மாற்றிப்
பொருள்கொள்ளத்தக்கது.

     இலங்குநூன் மார்பர் - ‘சோதிமணி மார்பினசை நூலினொடு'
(வரிசை 176) என்று முன் கண்டபடி விளக்கம்பெற்றுக் கண்டாரைக்
கவரும் பூணூலை மார்பிலே உடையவர்.

     எங்கள் நம்பர் - நாங்கள் (ஆதிசைவர்) வழிவழியடிமை
செய்யப்பெற்ற எசமானர். இன்று வந்தவர் தந்தைதந்தைநாள்முதற்
புதிதின் ஆட்கொண்டவர்; இக்கோயிலுள்ளவரோ ஆதி வழிவழி
ஆட்கொண்ட இறைவர். புதிய தலைவர் பழைய தலைவரின் கோயில்
புக்கதென்கொலோ? என்றபடி.

     பெருவிருப்பு - ‘நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியாலே'
முன்னிருந்து தோன்றி வளர்ந்த பெரிய விருப்பம். முன்னர்ச் சிறிது
சிறிதாய்த் தோன்றி மறைந்ததுபோலாது இங்கு முற்றிய ஞானம்
விளங்கவும் மறைப்பு நீங்கவும் பெருவிருப்பினோடு அழைத்தார்.
அவரும் வெளிப்பட்டார்.

     தனி தொடர்ந்து - ஏனைய மறையவர் குழாம் திகைத்து
வெளியே நிற்கவும், தாம் மட்டும் தனியாகப் பின்பற்றித் தொடர்ந்து
உட்சென்று என்க. ‘யாவரையும் வேறடிமையா வுடைய எம்மான்'
அவர்களிலிருந்து நம்பிகளைத் தனியாகப் பிரித்து ‘இவன்மற்றென்
அடியான்' என வழக்கிட்டு ஆட்கொண்டமையால் மற்றவர்களை
விட்டு இவர் தனி தொடர்ந்தார். இவரோடு தொடர்ந்து அழைத்துக்
காணும் தகுதியுடையார் பிறரில்லை. ‘அவரலாற் புரங்கள் செற்ற,
ஏவணச் சிலையினாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்' என்று
முன்னர்க் குறித்தமையும் காண்க. யான் எனது என்ற
இவ்வுலகத்திலிருந்து பிரித்து ஆட்கொள்ளுதலே இறைவன்
செயலாதலும் காண்க.

     மாதோடு உம்பரின் விடைமேல் தோன்றி
- உம்பரில்
விடைமேல் மாதோடு தோன்றி என மாற்றிக்கொள்க. முன்னே
வந்தது திரோதானமாகியமறைப்புச் சத்தியுடனாம். அதனாலே
பக்குவப்படுத்தப்பெற்ற உயிர்க்கு அருள வருகின்றாராதலின்
இப்போது அருட்சத்தியுடன் அருட்டுரையிலே வெளிப்பட்டு வந்தார்.
உம்பர் - ஞான ஆகாயவெளி.

     அவர் தமக்கு - இப்போது தோன்றலும் உணர்த்தலும்
நம்பிகளுக்கே யன்றி முன்போல ஏனையமறையவர்
கூட்டத்துக்குமன்று என்பதாம். ஏகாரம்தொக்கது.

     உணர்த்தல் - திகைத்து நின்று விருப்புடன் அழைத்தார்க்கு
உண்மை உணர்த்தல் கடனாதலின் உணர்த்துவராயினர்.
‘அறிவிக்கவன்றி யறியா வுளங்கள்' என்பது உயிர்களின்
சிறப்பிலக்கணம். இறைவன் உணர்த்தினாலன்றி உயிர்கள் உணரும்
வழி யில்லையாதலின் இதுவரை நிகழ்ச்சிகளின் தத்துவத்தையும்
வரலாற்றையும் உணர்த்தி யருளினார். 66