213.
|
முன்புநீ
நமக்குத் தொண்டன் முன்னிய
வேட்கை கூரப் |
|
|
பின்புநம்
மேவ லாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத்
தொடர்ந்து
வந்து
நன்புல மறையோர் முன்னர் நாந்தடுத்
தாண்டோ மென்றார். |
67 |
(இ-ள்.)
வெளிப்படை. ‘முன்நிலையிலே கயிலையிலே நீ
நமக்குத் தொண்டு செய்தவன்; மாதர்மேல் மனம் வைத்ததனாலே
நமது கட்டளையின்படி இப்பிறவியை அடைந்தாய்; துன்பந் தரும்
இவ்வுலக வாழ்க்கை உன்னைத் தொடராதபடி அங்கே அருளிய
சாலுமொழியினாலே உன்னைத் தொடர்ந்துவந்து அந்தணர்கள்
முன்னிலையில் நாமே தடுத்தாட்கொண்டோம்' என்று உண்மை
உணர்த்தி யருளினார்.
(வி-ரை.)
முன்பு - இப்பிறப்பிற்கு முன் உள்ள நிலை.
பின்பு
- வேட்கை கூர்ந்த பின்பு; அதுகாரணமாக.
தொண்டன்
- தொண்டு செய்தவன். மலர்மாலையும்
அள்ளுநீறும் எடுத்தணைதலாகிய தொண்டு. (வரிசை 31). ‘சுந்தரனைத்
துணைக்கவரி வீசக்கொண்டார்' என்ற அப்பர் சுவாமிகள்
திருவாக்கின் துணைகொண்டு பெருமானுக்குக் கவரி வீசுதலாகிய
தொண்டும் செய்திருந்தார் என்றும் கூறுவர்.
முன்னிய வேட்கைகூர - முன்னுதல் - நினைத்தல். ‘மனம்
வைத்தனை' (வரிசை. 37) வேட்கை - காதல். மாதாமேற் செல்லும்
ஆசை. 'நின் வேட்கை தீர வாழி மண்மேல் விளையாடுவாய்' என்று
பின்னர்க் கூறுதலும் காண்க. (வரிசை 273)
கூர்தல்
- பொருந்துதல். மிகுதலுமா மாதரை நினைத்த செயல்
பொருந்தியதனாலே. கயிலையில் நினைப்புமட்டும் நிகழ்ந்தது.
அதுவே கருமத்துக்கு முளையாயிற்று. அது பிறப்பிற்கு வழியாயிற்று.
நம் ஏவலாலே
- ‘தென்புவிமீது தோன்றுக' என்ற கட்டளை.
(வரிசை 37) ‘இம்மண்ணுலகின் னரனாக வகுத்தனை' என்பது
நம்பிகள் தேவாரம். (திருநெல் வாயிலரத்துறை - இந்தனம் - 2)
மண்ணின்மீது - நிலவுலகிலே
- தென்றிசையிலே. இதை
நடுநிலைத் தீபமாய் மண்ணின்மீது பிறந்தனை என்றும், மண்ணின்மீது
துன்புறு வாழ்க்கை என்றும் கூட்டுக.
துன்புறு வாழ்க்கை
- ‘தென்புவி, மீதுதோன்றி
அம்மெல்லியலாருடன் காதலின்பம் கலந்து பின் அணைவாய்'
(வரிசை - 37) என்று நாம் ஏவிய வாழ்க்கை உன்னைத்
துன்பத்தினின்று விடுவிப்பது; ஆனால் இப்போது தடுத்த
மணவாழ்க்கை அதற்கு வேறாய்த் துன்பத்தில் மேன்மேலும் இருத்தும்
வாழ்க்கை. இன்பம் போலக் காட்டி உண்மையிலே துன்பமாயிருக்கிற
வாழ்க்கை என்றபடி. எனவே மக்கள் உலக வாழ்வின் துறைகளிலே
ஈடுபடும்போது இது துன்பறு வாழ்வா? அன்றித் துன்புறு வாழ்வா?
என்று உணர இறைவனை வேண்டக் கடவர்.
தொடர்வறத் தொடர்ந்து
வந்து - தொடக்குப் பற்றாதபடிக்
கூடவே வந்து. ‘வாழ்வற வாழ்வித்த மருந்தே' என்பது திருவாசகம்.
நன்புல மறையோர் - முன்பாட்டுக்களில்
மறையோரைக்
கூறியதற்கேற்ப இங்கும் இவ்வாறு கூறினார். ‘மறையவர் பெற்ற சாபம்
நின்னையும் மயக்குறாதோ?' என்று கந்தபுராணத்துட் கூறியபடி ததீசி
முனிவர் சாபத்திலே பட்டுப்புன்புல மறையோராய்த் திரியாதபடி
உண்மையிலே நின்ற நற்புலத்தை உடையார். புலம் -
அறிவு.
தடுத்தாண்டோம்
- இதுகாறும் நிகழ்ந்த அடிமை வழக்கின்
நியதியும், பயனும் உணர்த்தியவாறு. தடுத்த மணம் இன்பமாய்த்
தோன்றினும் துன்புறு வாழ்க்கை என்றும், அடிமை வழக்குத்
துன்பமாய்த் தோன்றினும் ‘இன்பம் பெருக்கி யிருளகற்றி
யெஞ்ஞான்றுந், துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய், அன்பமைத்து'த்
(திருவாசகம் - திருவெண்பா - 10) தருவதென்றும் அதன்
தத்துவத்தை உணர்த்தினார். இஃது, நம்பிகளின் முன்னைநிலை
வரலாற்றையும், இப்பிறவியில் வந்த காரணத்தையும், மணத்தினைத்
தடுத்த செய்தியின் உள்ளுறையினையும், இறைவன் உணர்த்தியதன்றி
நியதியின் வழியே உயிர்களுக்குத் தாம் எஞ்ஞான்றும்
உடனிருந்தருளும் தன்மையினையும் உணர்த்தியதாம். இவ்வாறே
பின்னரும் வருமிடங்களிற் கண்டுகொள்க. 67
|
|
|
|