214. என்றெழு மோசை கேளா வீன்றவான் கனைப்புக்
                                 கேட்ட
 
  கன்றுபோற் கதறி நம்பி கரசர ணாதி யங்கந்
துன்றிய புளக மாகத் தொழுதகை தலைமே லாக
‘மன்றுளீர் செயலோ வந்து வலியவாட் கொண்ட'
                               தென்றார்.
68

     (இ-ள்.) நம்பி - நம்பியாரூரர்; என்று.....கதறி - ஆண்டோம்
என்று இறைவர் உம்பரின் எழுவித்த ஒலியைக் கேட்டுத்
தாய்ப்பசுவின் கனைப்பைக் கேட்ட கன்றுபோலக் கதறி;
சரசரணாதி.........ஆக - கைகால் முதலிய திருமேனியெங்கும் புளகம்
கொள்ளத் தலைமேற் கைகள் கூப்பிக்கொண்டு; மன்றுளீர்.......என்றார்
- ‘ஆளல்லேன் என்று மறுத்த என்னை வலிய ஆட்கொண்டது
மன்றுளே கூத்தாடும் தேவரீரது அருட்செய்கையோ?' என்றார்.

     (வி-ரை.) எழும் ஓசை - இறைவர் எழுவித்ததாதலின் எழும்
என்பதைப் பிறவினைப் பொருளிற் கொள்க. இறைவர் ஓசையை
எழுவிக்க, அது நம்பிகள்பால் மறைந்திருந்த முன் உணர்ச்சியை
எழுவித்தது.

     ஈன்றஆன் கனைப்புக் கேட்ட கன்று
- பசுவும் கன்றும்
என்பதும், தாய்ப்பசுவின் அன்பு என்பதும், பல விடத்தும்
பயின்றுவரும் உவமானப் பொருள்களாம் ஆயின் இவற்றை ஆசிரியர்
சேக்கிழார் சுவாமிகள் வைத்தாளும் முறை தனித்த பெருமையும்
அழகுமுடையதாம். ‘மன்னவ குமாரனென்று உத்தரவிட்டு' - என்ற
சிவஞானபோதத்து எட்டாஞ் சூத்திரக் கருத்தும் இங்குப் போதருதல்
காண்க. இங்கே இறைவனைத் தாய்ப்பசுவாகவும் நம்பிகளைக்
கன்றாகவும் காட்டினார். இதுபோலவே,

“கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்“                - கழறிற் - 135

எனப்பின்னரும் வகுத்தார். ஆனால் கண்ணப்பநாயனார்
புராணத்திலே ‘கன்றகல் புனிற்றாப் போல்வர்' என இம்முறையை
ஆண்டைக் கேற்ப அமைத்திருத்தல் காண்க. இத்தாய்ப்பசு ஆங்குக்
கன்றாயிற்று; கண்ணப்பதேவர் அதனைக் காத்து வளர்க்கும்
தாயாயினர். இவ்வுவமானத்தின் அழகை உற்றுநோக்குக. விரிவு
அங்குக் காண்க.

     கன்றுபோற் கதறி - பிரிந்த தாய் கனைக்கக்கேட்ட கன்று
கதறுவது போற் கதறி.

     புளகம் - மயிர்க்கூச் செறிதல் - மயிர் சிலிர்த்தல். இது
ஆனந்தத்தாலும் அற்புதத்தின் உணர்ச்சியாலும் நிகழ்வது.

     மன்றுளீர் செயலோ
- அதிசயக் குறிப்பு. “யான்முன்
அறியாமற்போனேனே“ “யானதறியாதே கெட்டேன் உன்னால்
ஒன்றுங் குறைவில்லை“ என்றெல்லாம் மனத்திலே எண்ணி
ஏசறுதற்குறிப்பு. பழைய மன்றாடி போலும் என்று தாம் முன்னே
அறியாது வெகுண்டு கூறியது உண்மையாய் முடிந்தது கண்டு
அதிசயப்பட்டார்.

     நம்பி - கேளா - கன்றுபோற் கதறி - புளகமாக - மேலாக -
செயலோ - என்றார் என்று கூட்டி முடிக்க. 68