215. எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய
                               வெங்கும்

 
  விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்து
                               விம்ம

மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளு முழங்கி
                                 யார்ப்ப
அண்ணலை யோலை காட்டி யாண்டவ ரருளிச்
                                செய்வார்.
69

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு கண்ட திருவருள்
வெளிப்பாட்டினாலே ஆகாயத்தில் ஐந்து தேவ துந்துபிகளும்
நிறைந்து முழங்கின. தேவர்கள் கற்பகப்பூமாரி பொழிந்தனர்.
நிலவுலகத்துள்ளோர் மகிழ்ந்தனர். வேதங்கள் சத்தித்தன.
ஓலைகாட்டி நம்பியை ஆண்ட அவ்விறைவர் மேல் வருமாறு
அருளிச் செய்வாராயினர்.

     (வி-ரை.) இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
விம்ம - பொங்க - ஆர்ப்ப - ஆண்டவர் - தூமறைபாடும் வாயான்
- அருளிச் செய்வாராய்ப் பாடுக என்றார் என்று கூட்டி முடிக்க.
வாயார் என்பது பாடமாயின் உம்மைத் தொகையாக்கி, ஆண்டவரும்
- வாயாரும் - அருளிச்செய்வாராய்ப் பாடுக - என்றார் என்க.

     எண்ணிய ஓசை ஐந்து - திருவருள் வெளிப்பாடு முதலிய
அற்புதங்கள் நிகழும் போதெல்லாம் தாமே முழங்கும் என்று
சிறப்பாய் எண்ணப்பட்ட தோற் கருவி முதலிய ஐவகையான
வாத்தியங்கள். ‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி
யற்றுபவரின்றியு மியம்பும், மங்கல முழக்கொலி' என்றதும் (திருஞா
- புரா - 33) காண்க.

     மேதினி நிறைந்து விம்ம - (தேவர்கள் மேலிருந்து
பொழியும் பூமாரி) நிலவுலகில் நிறைய. பூவுலகினின்று போந்த
ஓசையைந்தும் விசும்பு சென்று நிறைய, அதற்குப் பிரதியாய்
விண்ணினின்று போந்த பூமாரி மேதினி நிறைந்த தென்ற அழகு
காண்க.

     மறைகளும் முழங்கி யார்ப்ப
- வேத வொலிகள் பிறர்
இயற்றாமலே நாதத்திலிருந்து வெளிப்பட்டு முழங்கி ஒலிக்க.

“ஓதுமறை யோர்பிறி துரைத்திடினு மோவா
வேதமொழி யாலொலி விளங்கியெழு மெங்கும்“

என்று திருஞானசம்பந்தசுவாமிகள் திருவவதார நிகழ்ச்சியிற்
கூறியதும் காண்க.

     அண்ணல் - பெருமையுடையவர்; நம்பிகள்.

     ஆண்டவர் - தடுத்தாட்கொண்டருளிய சிவபெருமான். 69